Tuesday, December 2, 2025

ஏழு இந்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய இமாம்....!

" அஸ்ஸாமில் ஏழு இந்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய 

மஸ்ஜித் இமாம் அப்துல் பாசித் "

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் அஸ்ஸாமில், தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் ஹேமந்தா பிஸ்வா சர்மா, அஸ்ஸாமில் வாழும் முஸ்லிம்களை எப்போதும் ஒருவித பதற்றத்தில் வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். மதரஸாக்கள் மூடல், பொது சிவில் சட்டம் என பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, முஸ்லிம்களை அடிக்கடி மிரட்டிக் கொண்டே இருக்கிறார்.  இதன் காரணமாக அஸ்ஸாமி முஸ்லிம்கள், நிம்மதியை இழந்து வருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை எப்போதும் ஒருவித கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. 

எனினும், முஸ்லிம்கள் தங்கள் மாநிலம் அஸ்ஸாமில் வாழும் அனைத்து சமூக மக்களிடையே ஒற்றுமையுடன், அமைதியாக வாழ விரும்புகிறார்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும், பணிகளையும் அவர்கள் ஆற்றி வருகிறார்கள். பாஜக ஆட்சியாளர்களின் நெருக்கடிகளை கண்டு துவண்டு விடாமல், அவர்கள் ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, அஸ்ஸாம் மற்றும் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். அதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருந்து வருகின்றன. 

மத நல்லிணக்கம், மனிதநேயம் தொடர்பான பல சம்பங்கள் அஸ்ஸாமில் அவ்வவ்போது நடைபெற்று வருகின்றன. முஸ்லிம்கள் காட்டும் மனிதநேயம் பல நேரங்களில் வெளி உலகத்திற்கு வந்து சேருவதில்லை. அதையும் மீறி ஒருசில சம்பவங்களின் தகவல்கள் வெளியே வந்து, முஸ்லிம்களின் மனிதநேயம் எப்படிப்பட்ட அற்புதமான ஒரு நேயம் என்பதை இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்களுக்கும் எடுத்துக்காட்டி விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் அண்மையில் அஸ்ஸாமில் நடைபெற்று, பலரையும் வியப்புஅடையச் செய்துள்ளது. 

இமாம் அப்துல் பாசித் :

வங்கதேச எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு அசாமில் உள்ள ஒரு நகரமான கரீம்கஞ்ச், அதன் ஆறுகள், குளங்கள் மற்றும் இறுக்கமான சுற்றுப்புறங்களுக்கு பெயர் பெற்றது. அங்கு மஸ்ஜித்துகள், கோயில்கள் மற்றும் சந்தைகள் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளன. நிலம் பஜாரில் உள்ள மதரஸா ஜாமியா உல் உலூம் ஃபுர்கனாயா கரீம் கஞ்சின் ஆசிரியரும், போடோ படி ஜமா மஸ்ஜித்தின் இமாமுமான அப்துல் பாசித், கடந்த திங்கட்கிழமை (01.12.2025) அன்று அதிகாலை அமைதியின்  தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தார். வீட்டிற்கு வெளியே வந்தபோது, ​​அருகிலுள்ள குளத்தின் மேற்பரப்பிற்கு அடியில் ஒரு லேசான மின்னல் மின்னுவதைக் கண்டார். பல பயணிகளை ஏற்றிச் சென்ற கார் ஒன்று சாலையை விட்டு விலகி தண்ணீரில் மூழ்கியதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். 

உடனே இமாம் பாசித், சம்பவத்தின் அவசரத்தை உணர்ந்து, மஸ்ஜித்தின் ஒலிபெருக்கி அமைப்புக்கு ஓடினார். இது பொதுவாக தொழுகைக்கான அழைப்புக்காக பாங்கு சொல்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தை எச்சரித்து தொழுகைக்காக அழைக்க ஒதுக்கப்பட்ட ஒலிபெருக்கி அமைப்புக்கு அருகே ஓடோடி சென்ற அவர், ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு நிலைமையின் தீவிரத்தை எடுத்துக் கூறி உடனே வரும்படி அழைப்பு விடுத்தார். 

இமாம் அப்துல் பாசித்தின் அழைப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்குள்ள முழு முஸ்லிம் பகுதியிலிருந்தும் வந்த குடியிருப்பாளர்கள், சில நிமிடங்களில் குளத்திற்கு விரைந்தனர். உடனே குளத்தில் குதித்து, குளிர்ந்த நீரில் தத்தளித்த, காரின் ஜன்னல்களை உடைத்து, ஏழு பயணிகளை பாதுகாப்பாக இழுத்து உயிருடன் காப்பாற்றிய அவர்கள், பின்னர் வாகனம் முழுமையாக மூழ்கடித்தனர். காப்பாற்றப்பட்ட அனைவரும் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 

இமாமிற்கு குவியும் பாராட்டுகள் :

தனத மனிதநேய செயல் குறித்து கருத்து கூறியுள்ள இமாம் அப்துல் பாசித், வீட்டிற்கு வெளியே வந்தபோது, "நான் தண்ணீருக்கு அடியில் காரின் விளக்குகளைக் கண்டேன், நாங்கள் உடனடியாக செயல்பட வேண்டும் என்பதை அறிந்தேன். உடனே மஸ்ஜித்தின் ஒலிபெருக்கி அமைப்புக்கு ஓடிச் சென்று, ஆற்றில் கார் மூழ்க்கிக் கொண்டிருக்கும் இந்த அறிவிப்பை வெளியிட்டேன். உடனே மக்கள் ஓடோடி வந்து அனைவரையும் உதவுமாறு கேட்டுக் கொண்டேன். என்னுடைய அழைப்பின் தீவிரத்தை உணர்ந்து கொண்டே மக்கள், உடனே சம்பவ இடத்திற்கு வந்து, மனிதநேயத்துடன் உதவியதுடன், காருடன் மூழ்க்கிக் கொண்டிருந்த 7 பயணிகளை உயிருடன் மீட்டனர்." இவ்வாறு தெரிவித்துள்ள இமாம் அப்துல் பாசித், தன்னுடைய மனிதநேய செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். 

7 பயணிகளின் உயிரை, தனது விழிப்புணர்வு எச்சரிக்கை மூலம் காப்பாற்றிய இமாம் பாசித்தின் செயலை உள்ளூர்வாசிகள் பாராட்டி வருகின்றனர். இது மதங்களுக்கு இடையேயான ஒற்றுமைக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு என்று அவர்கள் கூறியுள்ளனர். “இது மனிதநேயத்தின் உண்மையான செய்தி,” என்று உள்ளூர் மார்க்க அறிஞர் மௌலானா அப்துல் ஹபீஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் மீட்கப்பட்ட பயணிகள் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர் எடுத்துக்காட்டினார். இமாம் பாசித் அந்த அதிர்ச்சியான தருணத்தைப் பற்றி மட்டுமே யோசித்தார். மதத்தைப் பற்றியோ அல்லது வேறு எதையும் பற்றியோ அவர் சிந்திக்கவில்லை. உயிர்களைக் காப்பாற்றுவதே முன்னுரிமை என்ற அடிப்படையில் தனது பொறுப்பை உணர்ந்து உடனே செயல்பட்டார். அதன்மூலம் 7 இந்துக்களின் உயிர்கள் காப்பற்றப்பட்டன. 

பாஜக தலைவரும் பாராட்டு :

அண்டை மாநிலமான திரிபுராவில் வசிக்கும் பயணிகள், அஸ்ஸாமின் சில்சார் மாவட்டத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பயணம் செய்த வாகனம், கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை தான் இமாம் அப்துல் பாசித், தனது விழிப்புணர்வு செயல்மூலம் காப்பாற்றி இருக்கிறார்.  மீட்புக்குப் பிறகு, உயிருடன் மீட்கப்பட்ட அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர தனி கார்கள் மற்றும் டாக்சிகளில் ஏறி திரிபுரா புறப்பட்டு சென்றனர். 

இமாம் அப்துல் பாசித்தின் மனிதநேய செயலை உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல், ஆளும் பாஜகவைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதியான இக்பாலும் பாராட்டியுள்ளார்.  இமாம் பாசித்தின் நடவடிக்கைகளைப் பாராட்ட நேரில் வருகை தந்த அவர், மிகுந்த மகிழ்ச்சியுடன் கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இதேபோன்று, சிவில் போலீஸ் நிர்வாகம் இந்த சம்பவத்தைக் கவனித்து, இமாம் பாசித்துக்கு முறையாக வெகுமதி அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.  

சில நேரங்களில் வகுப்புவாத பதட்டங்கள் ஆழமாக இருக்கும் ஒரு பகுதியில், இமாம் பாசித்தின் விரைவான நடவடிக்கையும், இந்து சமூக உறுப்பினர்களைக் காப்பாற்ற முஸ்லிம் சமூகத்தின் கூட்டு முயற்சியும் ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தின் கட்டாய அடையாளமாக மாறியுள்ளது. முஸ்லிம்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும் எப்போதும் தவறான கண்ணோட்டத்துடன் இருக்கும் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹேமந்தா பிஸ்வா சர்மா, இனியாவது முஸ்லிம்கள் மீது காட்டும் வெறுப்பு போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது அன்பைச் செலுத்த வேண்டும். அஸ்ஸாம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றும் பணிகளையும் பங்களிப்புகளையும் ஊக்குவித்து பாராட்ட வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: