Saturday, August 31, 2024

முஸ்லிம் முதியவரை தாக்கி அட்டகாசம்....!

மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக சந்தேகம்....!

முஸ்லிம் முதியவரை தாக்கி அட்டகாசம் செய்த இந்துத்துவ வெறியர்கள்..!

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் இந்துத்துவ அமைப்புச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதற்கு செய்தித்தாள்களில் வரும் செய்திகள் எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றன. 

அந்த வகையில்,  அரியானாவில் மாட்டிறைச்சியை சாப்பிட்டதாக புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவரை ஐந்து பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. 

மகாராஷ்டிராவில், ரயிலில் மாட்டிறைச்சி எடுத்து வந்ததாக கூறி, முஸ்லிம் முதியவரை பஜ்ரங்தள் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த  பயணிகள் சிலர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. முதியவரை சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இருந்து கல்யாண் நகருக்கு ஹாஜி அஷ்ரப் முன்யார் என்ற முதியவர் தனது மகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை, துலே-சிஎஸ்எம்டி விரைவு ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் ஜாடியில், எருமை இறைச்சி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த இறைச்சிக்கு மகாராஷ்டிராக மாநிலத்தில் தடை விதிக்கப்படவில்லை. எனவே, ஹாஜி அஷ்ரப் முன்யார் அதனை தனது உறவினருக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்றுக் கொண்டிருந்தார். 

மாட்டிறைச்சி சந்தேகம்:

ஹாஜி அஷ்ரப் முன்யார் பயணம் ரயில் பெட்டியில், பயணம் செய்த பஜ்ரங்தள் இந்துத்துவ அமைப்புச் சேர்ந்த பயணிகள், அவர் மீது சந்தேகம் அடைந்து, மாட்டிறைச்சியை கொண்டு செல்வதாக கூறி, ஹாஜி அஷ்ரப் முன்யாருடன் வாக்குவாதம் செய்தும் தகாத வார்த்தைகளை திட்டியும், கன்னத்தில் அறைத்தும் தாக்குதல் நடத்தினர். இதனால் முஸ்லிம் முதியவர் மிகவும் அச்சம் அடைந்து வேதனைக்கு ஆளானார். தாம் மாட்டிறைச்சியை கொண்டு செல்லவில்லை என்று முதியவர் எவ்வளவோ சொல்லியும் கெஞ்சியும் அந்த இளைஞர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 

இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கதில் வெளியிட்ட ஏஐஎம்ஐஎம் எம்.பி., இம்தியாஸ் ஜலீல், முஸ்லிம் முதியவர் தாக்கப்படுவதை மகாராஷ்டிரா அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக கண்டனம் தெரிவித்தார். 

அதிர்ச்சி, வேதனை:

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ஹாஜி அஷ்ரப் முன்யார், என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தபோது, அவர் இறங்க வேண்டிய ரயில் ஸ்டேஷனுக்கு முன்பாகவே, இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், அவரை ரயிலில் இருந்து இறக்கி விட்டனர். இதனால் அஷ்ரப் முன்யார் மிகவும் பாதிப்புக்கு ஆளானார். 

இந்த சம்பவம் தங்களுக்கு வேதனையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக ஹாஜி அஷ்ரப் முன்யாரின் மகன் அஷ்பாக் அஷ்ரப் வேதனை தெரிவித்துள்ளார். தங்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகி விட்டதாகவும் அவர் அச்சம் அடைந்துள்ளார். பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர் நடத்திய தாக்குதலில் தனது தந்தையின் இடது கண் பாதிக்கப்பட்டு, தற்போது பார்வை குறைபாடு ஏற்பட்டு விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

வழக்குப்பதிவு குற்றச்சாட்டு:

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் (GRP) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், எப்.ஐ.ஆரில், கொலை முயற்சி குறித்த சட்டப்பிரிவு 307 சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, ஹாஜி அஷ்ரப் முன்யாரின் குடும்பத்தினர் போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். கொலை முயற்சி சட்டப்பிரிவு குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் இருந்து வருகிறது. அத்துடன் ஆயுள் தண்டனையையும் கொடுக்க வழி வகை செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு சாதாரண வழக்காக இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. 

மூன்று பேர் கைது:

முதியவர் ஹாஜி அஷ்ரப் முன்யார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, மும்பை போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, தற்போது மூன்று பேரை கைது செய்துள்ளனர். துலேவில் கைது செய்யப்பட்ட இந்த மூன்று பேரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவரான ஆஷு அவ்ஹாத், மகாராஷ்டிரா மாநிலத்தின் சிறப்பு ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த உயரதிகாரியின் மகன் என தெரியவந்துள்ளது. இவருடன் சேர்ந்து பயணம் செய்த மற்ற பயணிகளிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மாட்டிறைச்சி என்ற பேரில், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும். அதன்மூலம் மட்டுமே, முஸ்லிம் முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்துத்துவ அமைப்புகளால் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


எதிர்பார்ப்பு இல்லாமல்.....!

"பயம் மற்றும் எதிர்பார்ப்பு இல்லாமல் நீதிபதிகள் நீதி வழங்க வேண்டும்"

- சட்ட வல்லுநர் கபில் சிபல் அறிவுறுத்தல் -

இந்திய வழக்கறிஞர்களில் மிகவும் புகழ்பெற்று இருப்பவர் கபில் சிபல். சட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவரான இவர், பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி, சிறப்பான முறையில் வாதாடி, நல்ல தீர்ப்புகளை பெற்று தருபவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்களில் வாதாடிய பெருமை கபில் சிபலுக்கு உண்டு. 

வழக்கறிஞராக மட்டுமல்லாமல், அரசியல்வாதியாக, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவர், காங்கிரஸ் கட்சியில் மிக நீண்ட காலம் உறுப்பினராக இருந்து மக்களவை, மாநிலங்களவைகளில் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக நடந்த விவாதங்களில் பங்கேற்று தனது ஆணித்தரமான வாதங்கள் மற்றும் பேச்சுகள் மூலம் நாட்டு மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தவர். தற்போதும் தனது அருமையான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் குறிப்பாக, சட்ட வல்லுநர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கவனத்தை கவர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறார். 

கபில் சிபல் - சில தகவல்கள்:

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கபில் சிபல், 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிறந்தார். தனது பள்ளி, கல்லூரி படிப்புகளுக்குப் பிறகு, சட்டத்துறையில் கவனம் செலுத்திய இவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில், 2009ஆம் ஆண்டு தில்லியின் சாந்தினிசௌக் மக்களவைத் தொகுதியிலிருந்து  மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்றிய அரசில், கடந்த 2009-2014 ஆண்டு, தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.  உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவராக மூன்று முறை இருந்த கபில் சிபல், தற்போது மீண்டும் அந்த சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அச்சம் இல்லாமல் நீதி:

இந்திய தலைநகர் டெல்லியில், சனிக்கிழமையன்று (31.08.24) நடைபெற்ற அகில இந்திய மாவட்ட நீதித்துறையின் இரண்டு நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உச்சநீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கலந்துகொண்டு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னிலையில் எந்தவித அச்சமும் இல்லாமல், நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார்.  

தனது உரையில், "அச்சம் அல்லது தயவு இல்லாமல்" நீதியை வழங்க மாவட்ட நீதித்துறைக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்" என்று கபில் சிபல் வலியுறுத்தினார். அத்துடன், விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கத் தயக்கம் காட்டுவது குறித்தும், உச்சநீதிமன்றத்தால் பல சமீபத்திய தீர்ப்புகளில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கவலையையும் அவர் வெளிப்படுத்தினார்.

"பலவீனமான அடித்தளம் கொண்ட எந்த ஒரு கட்டமைப்பும், கட்டிடத்தை பாதித்து, இறுதியில் இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்படும். மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பின் அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டிலும் நீதி வழங்கல் அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். நம்முடைய விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் பயம் மற்றும் தயவு இல்லாமல் நீதி வழங்க அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ளவர்கள் அழுத்தத்தைத் தாங்கும் திறனைக் கொண்டிருக்காத வரை, அரசியலின் மேற்கட்டுமானம் வலுவாக இருக்க முடியாது. மாவட்ட அளவிலான நீதிபதிகள், தங்கள் நீதித்துறை தீர்ப்புகள் தங்களுக்கு எதிராக ஒருபோதும் நடத்தப்படாது. அவர்கள் நீதி வழங்கல் அமைப்பின் முள்ளந்தண்டு வடத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்" என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று கபில் சிபல் கேட்டுக் கொண்டார். 

பொதுமக்கள் பாதிப்பு:

"மாவட்ட நீதிமன்றங்களின் செயல்திறன், நேர்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை முழு நீதித்துறை அமைப்பின் நம்பகத்தன்மையைப் பற்றிய பொதுமக்களின் கருத்தை பாதிக்கின்றன. விசாரணை நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் சில முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஜாமீன் வழங்க விரும்பாதது, ஏற்பட்டுள்ள சோகத்தின் அறிகுறியாகும். தனது தொழில் வாழ்க்கையில், நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்குவதை தாம் எப்போதாவது பார்த்திருக்கிறேன்" என்றார் கபில் சிபல். 

"இது தனது அனுபவம் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் விஷயங்களில் நீதிமன்றங்கள் சுமையாக இருக்கின்றன என்று இந்திய தலைமை நீதிபதி அடிக்கடி கூறியிருக்கிறார். ஏனெனில் விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் மட்டத்தில் ஜாமீன் இருப்பது போல் தெரியவில்லை. ஒருசில விதிவிலக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. நிச்சயமாக, ஜாமீன் வழங்குவது ஒவ்வொரு வழக்கின் உண்மைகளையும் சூழ்நிலைகளையும் பொறுத்தது என்று சொல்லாமல் போகிறது. ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சமீப காலங்களில் ஜாமீன் என்பது விதி மற்றும் சிறைதான் என்ற கொள்கையை கடைபிடிக்கின்றன. 

குர்பக்ஷ் சிங் சிபியா எதிராக பஞ்சாப் மாநிலம் (ஏப்ரல் 1980) வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் இந்த கொள்கையை வகுத்ததையும், பணமோசடி தொடர்பான கடுமையான சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் சமீபத்திய பல தீர்ப்புகளில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதையும்" சிபல் நினைவு கூர்ந்தார்.

செழிப்பான ஜனநாயகம்:

"சுதந்திரம் என்பது செழிப்பான ஜனநாயகத்தின் அடித்தளமாகும். அதைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியும் நமது ஜனநாயகத்தின் தரத்தை பாதிக்கும். வளர்ந்த நாடுகளில் பத்து லட்சம் மக்கள் தொகைக்கு 100 அல்லது 200 நீதிபதிகள் என்ற விகிதத்துடன் ஒப்பிடும்போது, ​​இந்தியாவில் 21 நீதிபதிகள் அல்லது மிகக் குறைவான நீதிபதிகள் இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனவே, விசாரணை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் பட்டியலில் தினசரி அதிக சுமை ஏற்படுகிறது. இது தங்களுக்கு நீதி வழங்கப்படும் என்று காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. மேலும் மாவட்ட அளவிலான நீதிபதிகளுக்கு குறைந்த சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது" என்று கபில் சிபல் குற்றம்சாட்டினார்.  

பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட அகில இந்திய மாவட்ட நீதித்துறையின் மாநாட்டில்,  பிரதமரின் முன்பாக, நீதிபதிகள், அச்சம் இல்லாமல், எதிர்பார்ப்பு இல்லாமல் நீதி வழங்க வேண்டும் என பேசியது நீதித்துறை  மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


கண்டனம்....!

Assam CN Himanta is nothing but a Chinese version of Yogi Adityanath.

All he wants is cheap popularity by harassing Muslims 24x7 

— Savage by Tejashwi Yadav.



முஸ்லிம்களுக்கு எதிராக....!

"முஸ்லிம்களுக்கு எதிராக அஸ்ஸாம் முதலமைச்சரின்  வெறுக்கத்தக்க, மோசமான வகுப்புவாத கருத்துகள்"

- தி இந்து ஆங்கில நாளிதழ் கண்டன தலையங்கம் -

அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு தனது சத்தியப் பிரமாணத்தை மீறி வருகிறார் என தி இந்து ஆங்கில நாளிதழ் 31.08.2024 அன்று எழுதியுள்ள தலையங்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த தலையங்கத்தில் பின்வரும் சில முக்கிய அம்சங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. 

வெறுக்கத்தக்க பேச்சு, குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைப்பது, இன மோதல்கள் மற்றும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அட்டூழியங்களுக்கான சாத்தியமான தூண்டுதலாக மீண்டும் மீண்டும் அரங்கேற்ற வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் இதை நன்கு அறிந்திருக்கிறார்கள்.ஆனால் அவர்களில் மிகவும் இழிந்தவர்கள் வெறுப்புப் பேச்சுகளைப் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. 

இதற்கு அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஒரு நல்ல உதாரணம். மாநிலத்தின் சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து, பா.ஜ.க. தலைவர் தொடர்ந்து வகுப்புவாத உணர்வுபூர்வமான கருத்துக்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறார். கடந்த செவ்வாயன்று (27.08.2024) அவர் ஆற்றிய சொற்பொழிவில் "மியா முஸ்லீம்கள்" - சிறுபான்மை வங்காள முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பு கருத்துகளை கூறி, ஒரு பாரபட்சமான சொற்பொழிவை ஆற்றியுள்ளார்.  அவர்களை ('மியா முஸ்லிம்கள்' 'வங்களா முஸ்லிம்கள்') இனிமேல் அஸ்ஸாமிற்குள் வர விடமாட்டேன் என்று அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். 

திங்கில் மைனர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த விவாதத்தின் பின்னணியில் அவரது இந்த கருத்துக்கள் இருந்தன. 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது, முதலமைச்சர் சர்மா, ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் பேச்சுக்குப் பேச்சு, முஸ்லிம்களைக் குறிவைக்க வெறித்தனமான வகுப்புவாத மொழியைப் பயன்படுத்தினார். அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதில் எதுவும் இல்லை. "இஸ்லாமிய வெறுப்பு நம்மில் பலருக்கு [இந்துக்கள்] உண்மையானது" என்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.

இந்த அறிக்கைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் சர்மா, இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைத்திருப்பதாக, தான் முதலமைச்சராகப் பதவியேற்றபோது எடுத்து உறுதிமொழிக்கு எதிராகச் செல்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக அவர் நிற்கப் போவதாக வெளிப்படையாகச் சொன்னது கண்டிக்கப்பட வேண்டியது. இரண்டாவதாக, "அஸ்ஸாமை" விட்டு வெளியேறுமாறு ஒரு முழு சமூகத்தையும் அச்சுறுத்தும் குழுக்களின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம், சிறுபான்மை சமூகத்திற்கு சுதந்திரமாக நடமாடும் உரிமை இல்லை என்று பரிந்துரைப்பதன் மூலம், அவர் இன வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் வெறுப்பை மேலும் வளர்க்கிறார். 

வன்முறையான புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கிளர்ச்சிகள் முதல் போர்க்குணம் மற்றும் ஏழைகளுக்கு துன்பத்தை ஏற்படுத்திய "வெளிநாட்டவர்களை" அடையாளம் காணும் குறைபாடுள்ள செயல்முறை வரை, அஸ்ஸாம் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளது. அவற்றில் சில சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நல்லிணக்கம், சர்வ சாதாரண நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான வழிகளைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, வெறுப்பு அரசியலில் இருந்து பலன்களைப் பெறுவதற்காக பிரிவினையை வளர்க்கும் இழிந்த தந்திரத்தை அஸ்ஸாம் முதலமைச்சர் பயன்படுத்துகிறார். 

அருகிலுள்ள மியான்மரின் நடவடிக்கைகள் மற்றும் ரோஹிங்கியாக்களின் அவலநிலை காட்டுவது, சிறுபான்மை சமூகத்தின் குணாதிசயத்திற்காக வெறுப்பூட்டும் பேச்சுகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது மற்றும் வகுப்புவாதத்தின் பெருக்கம் ஆகியவை பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஒன்றிய அரசும், பா.ஜ.க. தலைமையும், தவறிழைக்கும் முதலமைச்சரைக் கட்டுப்படுத்த முனையவில்லை. விவசாயிகள் போன்ற பிரிவினரை குறிவைத்து பேசியதற்காக கண்டிக்கப்பட்ட கட்சித் தலைவர்களைப் போன்று இல்லாமல், சர்மா, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளைப் பயன்படுத்துகிறார். 

உண்மையில் அசாமிய மக்களின் நிலையை மேம்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக இருந்தால், நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான எச்.டி.ஐ குறிகாட்டிகளில் மாநிலம் இருந்து இருக்காது. எனவே, வெறுக்கத்தக்க, மோசமான வகுப்புவாத கருத்துகளை பேசுவதை நிறுத்திவிட்டு மத ரீதியான சூழலை முடிவுக்கு கொண்டு வந்து, மாநிலத்தில் எல்லா துறைகளிலும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்த வேண்டும். அஸ்ஸாம் முதலமைச்சர்  ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது செயல்பாடுகளில், சிந்தனைகளில் மாற்றம் கொண்டு வருவது அஸ்ஸாம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

- நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ்

- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Friday, August 30, 2024

சூடான விவாதம்:


க்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில்

சூடான காரசார விவாதம்: 

திமுக காங்கிரஸ்,மற்றும் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த

தெலுங்கு தேசம்,ஐக்கிய ஜனதா தளம் வெளிநடப்பு

புதுடெல்லி, ஆக.31-வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில், காரசார விவாதம் நடைபெற்று, காங்கிரஸ், திமுக மற்றும் ஆளும் கட்சியை ஆதரிக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது கூட்டம்:

வக்பு வாரிய சட்டத் திருத்தம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் கடந்த ஆக்ஸ்ட் 22ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. முதல் கூட்டம் நடைபெற்றபோது,  குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்தனர். இதையடுத்து வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை அரசு கையகப்படுத்தாது என்றும் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்றும், நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பால் விளக்கம் அளித்து இருந்தார். மேலும், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து முஸ்லிம் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் ஆலோசிக்கப்படும் என அவர் உறுதி அளித்து இருந்தார்.

இந்நிலையில், கூட்டுக் குழுவின் இரண்டாவது கூட்டம் வெள்ளிக்கிழமை (30.08.24) அன்று குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. குழுவில் நடைபெற்றுள்ள 31 உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டம், காலை 11 மணிக்கு தொடங்கிய இரவு 7 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், இந்தியன் முஸ்லிம் சிவில் உரிமைகள்(ஐஎம்சிஆர்) அமைப்புச் சேர்ந்த வழக்கறிஞர் பூசைல் அகமது அய்யூபி, அகில இந்திய சன்னி ஜாமியாதுல் உலமா அமைப்பு  உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினர் பங்கேற்று, தங்களது கருத்துகளை மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் எடுத்து வைத்தனர்.

சூடான விவாதம்:

கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வக்பு வாரிய நிர்வாகம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் நிர்வாகிக்கும் அதிகாரம் எப்படி மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கலாம்? என கேள்வி எழுப்பினார்கள். இதனால், பா.ஜ.க. ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இடையே சூடான விவாதம் நடைபெற்றது.

வக்பு வாரியம் என்பது முஸ்லிம்களின் அடையாளம் என்றும் அதை எப்படி மாற்றி அமைக்க முடியும் என்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி., முஹிபுல்லா கேள்வி எழுப்பினார். இதேபோன்று பேசிய அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அஸாவுத்தின் உவைசி, வக்பு வாரிய சொத்துகள், மாநில அரசுகளின் நிர்வாத்தின் கீழ் மற்றும் கட்டுப்பாட்டில் மட்டுமே வர வேண்டும் என வலியுறுத்தினார். வக்பு சொத்துக்கள் குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக தானம் செய்யப்பட்ட நிலையில், வக்பு என்ற பெயரை மாற்றி அமைத்து, புதிய சட்டம் கொண்டு வருவது, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்பு சொத்துகளை மீட்க வழி ஏற்படாது என்றும் மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்படும் சூழல் ஏற்படும் குற்றம்சாட்டினார். இதேபோன்று பேசிய ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், அரசியலமைப்புச் சட்டத்தை பா.ஜ.க. சிறிதும் கூட மதிக்கவில்லை என்று விமர்சனம் செய்தார். 

வெளிநடப்பு:

வக்பு வாரிய சட்டம் 1995 பிரிவு 40-இன் கீழ் வக்பு நிலமா, இல்லையா என்பதை வக்பு வாரியங்களே தற்போது முடிவு செய்து வரும் நிலையில், இந்த பிரிவு 40-ஐ நீக்குவதன் நோக்கம் குறித்து, திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பினார். இதற்கு சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சக அதிகாரிகள் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பங்கேற்றவர்கள் எழுப்பிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் இருந்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் இணைந்து தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கிய கட்சிகயைச் சேர்ந்த எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் அனுமதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


-    சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

பலாப்பழம்.....!

 

பலாப்பழம் சாப்பிட்டால் ஆற்றல் அதிகரிக்குமா?

 

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்திற்கு, மக்களிடையே எப்போதும் ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதேபோன்று, மா, வாழை பழங்களையும் மக்கள் விரும்பி சாப்பிடுவது வழக்கமாகவே உள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், பாண்டிய நாட்டில் மாம்பழமும், சோழ நாட்டில் வாழையும், சேர நாட்டில் பலாப்பழமும் அதிகமாக விளைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முக்கிய காரணம், அந்தப் பகுதிகளின் மண் வளம் என கூறப்படுகிறது.

வெவ்வேறு நல்ல சுவை கொண்ட இந்த முக்கனிகளை ஒன்று சேர்த்தும், அல்லது தனித்தனியாகவும் உண்பது உடல் நலத்துக்கு நன்மை அளிக்கும் என்று சொல்லப்படுகிறது. வாழைப்பழம் வாழ வைக்கும்., மாம்பழம் இளமை மங்காமல் பாதுகாக்கும்., பலாப்பழம் பலத்தைக் கொடுக்கும் என்ற கருத்து பழைய தமிழ் பாடல்களில் உள்ளது. இந்தியாவில் பலாப்பழத்தின் தாயகமாக கேரளம் கருதப்படுகிறது. இதேபோன்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சர்வ சாதாரணமாக பலா மரங்கள் இருந்து வருகின்றன. பலாவிற்கு பலவு, பலாசம், சக்கை, வருக்கை, ஏகாரவல்லி எனப் பல பெயர்கள் உண்டு.

பலாப்பழம் – சில சுவையான தகவல்கள்:

உலகின் மிகப்பெரிய பழம் என்ற பெருமையைப் பலாப்பழம் பெற்றுள்ளது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பலாப்பழம், பல்வேறு வழிகளில் உணவில் சேர்க்கப்படுகிறது. இது பங்களாதேஷின் (வங்கதேசம்) தேசிய பழமாகும். உடலுக்கு ஆரோக்கியமான நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக பலாப்பழம் இருந்து வருகிறது. இது நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக இருக்கும்போது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

பலாப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. அத்துடன்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ள பலாப்பழம், பல்வேறு நோய்த்தொற்றுகளின் அபாயங்களைக் குறைக்கிறது.

பலாப்பழத்தில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி உள்ளதால், சருமத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பலாப்பழம், முன்கூட்டிய வயதைத் தடுக்கிறது. பலாப்பழத்தில் லிக்னான்ஸ், ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் சபோனின்கள் எனப்படும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன, அவை புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே புற்றுநோயைத் தடுக்கும் பழமாக பலாப்பழத்தை நாட்டு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற எளிய சர்க்கரை மூலக்கூறுகள் இருப்பதால் பலாப்பழம் ஒரு சிறந்த ஆற்றல் ஊக்கியாக அறியப்படுகிறது. ஆற்றல் ஊக்கத்திற்கு நாள்தோறும் பலாப்பழம் சாப்பிடுவது நன்மையை நிச்சயம் தரும். உங்களுக்கு வலுவான எலும்புகள் இருக்க வேண்டும் என விருப்பம் இருக்கிறதா? அப்படி விருப்பம் இருந்தால், பலாப்பழம் சாப்பிடுங்கள். பலாப்பழத்தில் மக்னீசியம் ஆரோக்கியமான சமநிலையில் காணப்படுகிறது. எனவே பலாப்பழத்தின் நுகர்வு எலும்பு ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது என்று சொல்லப்பட்டு வருகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியுடன் இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்துகிறது. இரத்த சோகையை தடுக்கிறது.

நன்மைகளோ நன்மை:

ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பலாப்பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள பலாப்பழம், அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை கொண்டது. பலாப்பழம் உடல் எடையை குறைத்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பலாப்பழத்தை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து, பருவகால நோய்களில் இருந்து பாதுகாக்ககிறது.

பலாப்பழம் சாப்பிடுவதால், செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாது. பலாப்பழம் வயிற்று சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. பலாப்பழம் உடலுக்கு மிகவும் நன்மை அளித்தாலும், ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சினை இருந்தால், மருத்துவர்களின் ஆலோசனைப் பெற்று அதன்பிறகு பலாப்பழத்தை சாப்பிட வேண்டும்.

ஏக இறைவனின் அருட்கொடை:

ஏக இறைவனின் படைப்புகளில் ஒவ்வொரு பழமும் வெவ்வேறு தன்மைகளுடன், ஏராளமான பலன்களையும், சக்திகளையும் மனித இனத்திற்கு தரும் வகையில் இருந்து வருகின்றன. ஒரே மண்ணில் விளையும் இந்த பழங்கள், சுவையிலும் மாறுப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் பலாப்பழம் ஏக இறைவினின் மிகப்பெரிய அருட்கொடையாக இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம், சுவை மட்டுமல்லாமல், அதிக ஆற்றல் கொடுக்கும் பழமாக பலாப்பழம் இருப்பதாகும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் முக்கனிகளை சாப்பிடக் கூடாது என்றும், குறிப்பாக பலாப்பழம் சாப்பிடக் கூடாது என்றும் சொல்வார்கள். ஆனால், பலாப்பழ விதைகளில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. பலாப்பழ விதை மாவில் வைட்டமின் சி, ஃபிளவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருகிறார்கள். எனவே, மருத்துவ நிபுணர்கள் பலரும் நீரிழிவு நோயாளிகள், பலாப்பழத்தை உணவில் சேர்த்துக் கொண்டு, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என ஆலோசனைகளை தருகிறார்கள். ஏராளமான நன்மைகள் கொண்ட இந்த பலாப்பழத்தை வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக சாப்பிட்டு, எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சி செய்து ஏக இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருப்போமா!

 

-            எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Thursday, August 29, 2024

ஆலோசனைகள் வரவேற்பு...!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்தஆலோசனைகள்  பொதுமக்கள் வழங்கலாம்-நாடாளுமன்றக் கூட்டுக்குழு அறிவிப்பு


புதுடெல்லி, ஆக.30-ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சட்டம் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், இ.யூ.முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

முதல் கூட்டம்:

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில், மசோதா குறித்து குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்தனர். இதையடுத்து வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை அரசு கையகப்படுத்தாது என்றும் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்றும், நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பால் விளக்கம் அளித்து இருந்தார்.

ஆலோசனைகள் வரவேற்பு:

இந்நிலையில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கலாம் என நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு மசோதா தொடர்பாக விரிவான ஆலோசனைகளையும், கருத்துகளையும் பொதுமக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும், வரவேற்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் என அனைத்து தரப்பிடம் இருந்தும் ஆலோசனைகள் வழங்கலாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆலோசனைகள் ஆங்கிலம் மற்றும்இந்தி மொழியில் இரண்டு பக்கங்கள் கொண்டு இருக்க வேண்டும், இந்த ஆலோசனைகள் அனைத்தும் மக்களவை செயலகத்தின் இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அனுப்ப வேண்டிய முகவரி:

அதன்படி, Joint Secretary (JM) Lok Sabha Secretariat, Room No.440, Parliament House Annexe, New Delhi-110 001 என்று முகவரிக்கு ஆலோசனை அடங்கிய கடிதங்களை அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்கள் 23034440, 23035284 மற்றும் ஃபேக்ஸ் எண் 23017709 மூலமாகவும் இ.மெயில் முகவரி jpcwaqf-Iss@sansad.nic.in என்று முகவரி மூலமாகவும் ஆலோசனைகளை 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரகசியம் பாதுகாக்கப்படும்:

வக்பு வாரிய சட்டத் திருத்தம் குறித்த முழு விவரங்கள் மக்களவை இணையதளத்தில் இருப்பதாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அனுப்பும் ஆலோசனைகள், கருத்துகள் குறித்த ரகசியம் காக்கப்படும் என்றும், எனவே பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் ஆலோசனைகளை வழங்கலாம் என்றும், மக்களவைச் செயலகம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

ஏ.ஜி.நூரானி .....!

ஏ.ஜி.நூரானி எனும் ஒரு போராளி....!

இந்திய நாட்டின் தலைசிறந்த அரசியலமைப்பு நிபுணரும், சிறந்த எழுத்தாளரும், வழக்கறிஞருமான ஏ.ஜி. நூரானி தற்போது நம்மிடையே இல்லை. தனது 94-வது வயதில் இறை அழைப்பை ஏற்றுக் கொண்ட ஏ.ஜி.நூரானி அவர்கள், தனது அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான  நுண்ணறிவு பகுப்பாய்வுக்காக நாட்டு மக்கள் மத்தியில் பரவலாக மதிக்கப்பட்டவர். ஏ.ஜி. நூரானி தனது நீண்ட மற்றும் புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்திய ஒரு அறிவுஜீவியாக இருந்து வந்தார்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் சட்டப் புலமை மற்றும் அரசியல் சொற்பொழிவுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த புகழ்பெற்ற வழக்கறிஞர், அரசியலமைப்பு நிபுணர் மற்றும் சிறந்த எழுத்தாளர் தான் ஏ.ஜி. நூரானி. 

ஏ.ஜி.நூரானி குறித்த சில தகவல்கள்:

கடந்த 1930ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பம்பாயில் (இப்போது மும்பை) பிறந்த அப்துல் கஃபூர் அப்துல் மஜீத் நூரானி, அரசுப் பள்ளியில் பயின்று, பின்னர் மும்பை அரசு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வி பயின்று தேர்ந்தார். 1953ஆம் ஆண்டு பம்பாய் உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும், இந்திய உச்சநீதி மன்றத்திலும் மும்பை உயர் நீதிமன்றத்திலும் வழக்குரைஞராக இருந்தவர். இந்திய அரசியல் சட்டத்தில் பரந்து பட்ட அறிவு கொண்டவர் என மதிக்கப்பட்டவர். 

சிறந்த வழக்கறிஞராக இருந்தாலும், சட்ட, அரசியல் மற்றும் வரலாற்று தலைப்புகளில் எழுதுவதற்கு நூரானி தனது நேரத்தை அதிகமாக செலவிட்டார்.  அவரது கூர்மையான அறிவாற்றல் மற்றும் அரசியலமைப்பு விஷயங்களைப் பற்றிய ஆழமான அறிவு அவரை இந்திய அரசியல் மற்றும் நீதித்துறையில் ஒரு தேடப்பட்ட வர்ணனையாளராக்கியது.

இந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து, டாண், தி ஸ்டேட்ஸ்மன், பிரண்ட்லைன், எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்கிலி போன்ற நாளிதழ்களிலும் வார, மாத இதழ்களிலும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். இவரது அரசியல், சமூகம் மற்றும் சட்டச் சிக்கல்கள் தொடர்பான கட்டுரைகள் படிப்பவர்களை வெகுவாக சிந்திக்க வைத்தது. குறிப்பாக, ஜம்மு-காஷ்மீர் சிக்கல், குடியரசுத் தலைவர் ஆட்சி முறை, பகத்சிங் விசாரணை, ஆர்.எஸ்.ஏஸ்., பா.ஜ.க.,  ஆசியப் பாதுகாப்புக்கு பிரஸ்னவ் திட்டம், பத்ருதீன் தியாப்ஜி, சாகிர் உசேன் ஆகியோரின் வரலாறுகள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜின்னாவும் திலகரும் போன்ற நூல்களை நூரானி எழுதி வெளியிட்டார்.

1980 ஆம் ஆண்டில் தொடங்கிய ஃபிரண்ட்லைன் இதழுடனான அவரது தொடர்பு, அவரது கூர்மையான எழுத்தை பரந்த பார்வையாளர்களுக்கு கொண்டுச் சென்றது. நூரானியின் கட்டுரை "அரசியலமைப்பு கேள்விகள்" மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இயங்கியது. இந்த கட்டுரை, சிக்கலான சட்ட சிக்கல்களின் நுணுக்கமான ஆராய்ச்சி மற்றும் சீரான பகுப்பாய்வுக்காக அறியப்பட்டது.

ஒரு எழுத்தாளராக, நூரானி இந்திய அரசியலமைப்பு சட்டம், அரசியல் மற்றும் வரலாறு ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களைப் பற்றி ஏராளமான புத்தகங்களை எழுதினார். 'தி காஷ்மீர் கேள்வி',  'காஷ்மீர் விவகாரம் 1947-2012', 'சட்டப்பிரிவு 370: ஜம்மு-காஷ்மீரின் அரசமைப்பு வரலாறு', 'ஹைதராபாத் அழிவு' , 'அமைச்சர்களின் தவறான நடத்தை', 'அரசியலமைப்பு கேள்விகள்', 'குடிமக்கள் உரிமைகள்', 'ஆர்எஸ்எஸ்: இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல்', ஆகிய நூல்கள் அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் முக்கியமாக இருந்து வருகின்றன. அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் அத்துமீறல் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளின் அரிப்பு பற்றிய விமர்சனப் பார்வையை எடுத்தன. இந்தியாவில் சிறுபான்மையின மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து நூரானி தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். 

மதச்சார்பின்மையில் உறுதி:

ஏ.ஜி.நூரானி, சிவில் உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மைக்கான வலுவான ஆதரவிற்காக மக்களிடைய புகழ்பெற்று பெரியதும் அறியப்பட்டார். தடுப்புச் சட்டங்கள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் போன்றவை, அடிப்படை உரிமைகளை மீறுவதாக அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். நூரானியின் சட்ட நிபுணத்துவம் அவரை, நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய விவாதங்களில் மரியாதைக்குரிய குரலாக மாற்றியது.

ஏ.ஜி.நூரானி, எந்த உத்தியோகபூர்வ பதவியையும் வகிக்கவில்லை என்றாலும், நூரானியின் கருத்துக்கள் சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் எடையைக் கொண்டிருந்தன. அவர் அடிக்கடி அரசியலமைப்பு விஷயங்களில் ஆலோசிக்கப்பட்டார். அவரது எழுத்துக்கள் கல்விப் படைப்புகளிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளிலும் கூட மேற்கோள் காட்டப்பட்டன.

முற்போக்கு மற்றும் தாராளவாத வட்டாரங்களில் மதிக்கப்படும்போதும், ​​நூரானியை  விமர்சனம் செய்பவர்கள் இல்லாமல் இல்லை. அவரது கருத்துக்கள் மிகவும் இலட்சியவாதமாகவோ அல்லது மாறிவரும் அரசியல் யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டதாகவோ சிலர் கருதினர். ஆயினும்கூட, அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் கடுமையான பகுப்பாய்வு மீதான அவரது அர்ப்பணிப்பு அவருக்கு அரசியல் வட்டாரத்தில் முழுவதும் மரியாதையை ஈட்டித் தந்தது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தியபோது அவரை கடுமையாக விமர்சனம் செய்த நூரானி, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க ஒருபோதும் தயங்கவே இல்லை. 

ஏ.ஜி.நூரானி மறைந்தபோதும், அரசியலமைப்பு புலமை மற்றும் அரசியல் வர்ணனையின் வளமான பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார். தனது நீண்ட மற்றும் புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்திய ஒரு அறிவுஜீவியாக இருந்த நூரானியின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியர்களுக்கும், குறிப்பாக, இந்திய இளைஞர்களுக்கு ஒரு நல்ல முன் உதாரணமாக இருந்து வருகிறது. சட்டத்துறை, எழுத்துத்துறை ஆகியவற்றில் சாதிக்க விரும்பும் இளைஞர்கள், ஏ.ஜி.நூரானியின் வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்து, முடிந்த அளவுக்கு அந்த வாழ்க்கை முறையில் மறைந்து இருக்கும் உயர்ந்த அம்சங்களை, தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற முயற்சித்தால், நாட்டிற்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Wednesday, August 28, 2024

வரி.....!

 

- வரி பயங்கரவாதம் -

 

ஒன்றிய பா.ஜ.க. அரசு, கடந்த 2017-ஆம் ஆண்டு நாடு முழுவதும் சரக்கு மற்றும் சவை வரியை (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தியது. பா.ஜ.க. அரசின் இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு ஆரம்பம் முதலே பொருளாதார வல்லுநர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இந்த எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது. இதன் விளையாக நாட்டில் தொழில் துறை பெரிதும் நசிந்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் புள்ளிவிவரங்களுடன் கூறி வருகிறார்கள்.

தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் கடும் பாதிப்பை சந்தித்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத காரணத்தால், வேலையின்மை பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ‘வரி பயங்கரவாதம்’  என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. வரி பயங்கரவாதம் என்ற சொல் தற்போது, நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

ஜி.எஸ்.டி. ஒரு பார்வை:

 

உணவுக்கு வரி, உரங்களுக்கு வரி, விதைகளுக்கு வரி, இந்தியா முழுவதும் விவசாய கருவிகளுக்கு வரி, டீசல், பெட்ரோல் வரி என வரி உள்ளது. போக்குவரத்து வாகனங்களுக்கு 28 சதவீத வரி என அனைத்துக்கும் வரி கட்ட வேண்டியுள்ளது. தற்போது நாட்டில் உள்ள 90 சதவீத பொருள்களுக்கு வரி இருக்கிறது. ஏழை எளிய மக்களிடமிருந்து ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஜி.எஸ்.டி. தொகை பெறப்படுகிறது. இதுதான் உணவின் விலை அதிகரித்ததற்குக் காரணம்.

விலையேற்றத்தால் அவதியுறும் மக்கள் தங்கள் வீடுகளில் உணவின் அளவை பாதியாகக் குறைத்துவிட்டார்கள். 75 சதவீத இந்தியர்களால் ஆரோக்கியமான உணவைப் பெற முடிவதில்லை. இந்திய மக்கள் பலரும் பசியில் வாடுகின்றனர். உலகளாவிய பசி குறியீடு தரவரிசையில் 2014-ல் 120 நாடுகளில் 55-வது இடத்தில் இருந்த இந்தியா, 2023-ல் 125 நாடுகளில் 111-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் 6 கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

பற்பசை, சோப்பு, ஷேவிங் பொருட்கள், ஹேர் ஆயில், ஷாம்பூ, முகப்பவுடர், கிரீம், கைக்கடிகாரம், உணவு உள்ளிட்டப் பொருட்களுக்கு தலா 18 சதவீத வரி, டூத் பிரஷ்க்கு 5 சதவீத வரி, ஆடைகள், வாடகை கார், ஆகியவற்றிற்கு 5 முதல் 12 சதவீதம் வரி, எழுதுக்கோலிற்கு 12 சதவீதம், ஸ்டேஷனரிக்கு 18 முதல் 28 சதவீதம் வரி, மின்விசிறிக்கு 18 சதவீதம் வரி என பொதுமக்கள் வரி செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

பொதுவாக நாட்டில் வாழும் மக்களிடையே நேரடி வரி மூலம் மட்டும் இல்லாமல் மறைமுகமாகவும் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. அப்படி, மறைமுகமாக வசூல் செய்யப்படும் வரியாக ஜி.எஸ்.டி. இருந்து வருகிறது. மக்களுக்கு தெரியாமலேயே மக்களிடம் இருந்து வரி வசூல் செய்யப்படுகிறது. ஒரு ரூபாய் வருவாய் ஈட்டினால், சுமார் 55 பைசா வரியாக சென்று விடுகிறது என புள்ளிவிவரங்களை சுட்டிக் காட்டி, சமூக ஆர்வலர்கள், பொருளாதார வல்லுநர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு:

எனவே தான், இந்த ஜி.எஸ்.டி. முறையை ஆரம்பம் முதல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ஒன்றிய அரசின் வரி விதிப்பு குறித்து அண்மையில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஒன்றிய அரசு "வரி பயங்கரவாதத்தில்" ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி தனது பெரிய கார்ப்பரேட் "நண்பர்களின்" செல்வத்தை அதிகரிக்க நடுத்தர வர்க்கத்தின் முதுகை உடைப்பதாக அவர் விமர்சனம் செய்து குற்றம் சாட்டினார். மேலும், கார்ப்பரேட் வரி வசூலை விட, தனிநபர் வருமான வரி வசூல் அதிகம் என்று ஒரு விளக்கப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். ஒன்றிய அரசு கார்ப்பரேட் 'நண்பர்களை' விலையாகக் கொடுத்து நடுத்தர வர்க்கத்தை சுமையாக்குகிறது என்றும் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

"வரி பயங்கரவாதம்' என்பது பா.ஜ.க. ஆட்சியின் ஆபத்தான முகம். இதுதான் உண்மை. இந்தியாவில், இன்று வரி இலக்கு முழுவதுமாக வருமானத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கம், அவர்களின் சம்பளம் பல ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை. வருமானம் அப்படியே உள்ளது. வருமான வரி பெருமளவில் அதிகரித்து வருகிறது. "பயங்கர பணவீக்கத்தின் இந்த காலகட்டத்தில், எல்லாவற்றுக்கும் அதிக ஜி.எஸ்.டி. செலுத்தி பிழைக்கும் நடுத்தர மக்கள் சிந்திக்க வேண்டும். உங்கள் வருமானம் பெரிய கார்ப்பரேட்கள் அல்லது வணிகர்களின் வருமானத்தை விட அதிகமாக இருக்கிறதா? உங்களுக்கு அரசாங்க வசதிகளால் ஏதேனும் சிறப்பு பலன் கிடைக்கிறதா? இல்லை,  அப்படியானால் உங்களிடமிருந்து ஏன் இந்த கண்மூடித்தனமான வரி வசூலிக்கப்படுகிறது?" என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

"நீங்கள் (மக்கள்) பயமுறுத்தப்படும்போது, ​​அவர்களின் (அரசாங்கத்தின்) விருப்பத்தை திணிப்பதன் மூலம் உங்கள் பாக்கெட் வெட்டப்படுகிறது, இது 'வரி பயங்கரவாதத்தின்' சக்கரவியூகம்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, தனது 'நண்பர்களின்' செல்வத்தை காப்பாற்றவும் அதிகரிக்கவும் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் முதுகை உடைக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, இந்த வரி பயங்கரவாதம் மற்றும் அநீதிக்கு எதிராக அனைத்து கடின உழைப்பாளி, நேர்மையான இந்தியர்களுடன் தாம் நிற்பதாக உறுதியுடன் கூறியுள்ளார்.

மாற்றம் அவசியம் தேவை:

தற்போது, ஜி.எஸ்.டி. முறையால் நாட்டு மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருவது தெளிவாக தெரிய வருகிறது. எனவே, மக்கள் நலன் பாதிக்காத வகையில் வரி விதிப்பு இருக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். நாட்டில் வாழும் 140 கோடிக்கும் அதிகமான மக்களில் பெரும்பாலான மக்கள், ஏழை மற்றும் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த சாதாரண மக்கள் ஆவார்கள். அதிக வரிச் சுமையைச் சந்திக்கச் சக்தி இல்லாதவர்கள். இதனை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டு, எளிமையான வரி முறையை அமல்படுத்த வேண்டும். வரி விதிப்பால், ஏழை, எளிய மக்கள் பாதிப்பு அடையாமல் இருக்க வழி வகைகளை உருவாக்க வேண்டும். அதன்மூலம் மட்டுமே, மக்களின் வாழ்க்கையில் ஒளி பிறந்து மகிழ்ச்சி உருவாகும். வேலைவாய்ப்புகள் பெரும். இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பிரச்சினையை சந்திக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்படாது.


-            எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Tuesday, August 27, 2024

மனதின் வயது.....!

மனதின் வயது உங்களுக்குத் தெரியுமா? 

ஏக இறைவனின் மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றாக மனிதனின் மனம் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மனதில் லட்சக்கணக்கான எண்ணங்கள், சிந்தனைகள் உதயமாகி மறைந்துகொண்டே இருக்கின்றன. மனிதனின் மனம் எப்படி செயல்படுகிறது? மனதின் வயது என்ன? போன்ற கேள்விகளுக்கு நல்ல விளக்கங்களைப் பெறுவதன் மூலம், மனிதனின் திறமைகள் மேலும் மேம்படும். அதன்மூலம் வாழ்க்கை மகிழ்ச்சி மிகுந்ததாக அமையும். 

ஒரு ஆண் அல்லது பெண்ணிடம், அவர்களது வயது என்ன என்று கேட்டால், அவர்கள் சிறிதும் யோசிக்காமல், உடனடியாக பதில் அளித்து விடுகிறார்கள். அவர்களின் வயது அவர்களின் வயது எவ்வளவு என்பது அனைவருக்கும் தெரியும் என்பதே இதற்கு காரணமாகும். ஆனால், உங்கள் மனதின் வயது உங்களுக்குத் தெரியுமா? என்று வினா எழுப்பினால், பெரும்பாலான பெண்கள்  அல்லது ஆண்கள் இல்லை என்றே பதிலளிப்பார்கள். 

மனமும் ஆளுமையும்:

மனித மனம் எவ்வாறு செயல்படுகிறது அல்லது ஒருவரின் ஆளுமை எந்த அளவுக்கு முதிர்ச்சியடைந்துள்ளது என்பதைத் தீர்மானிக்க சில கேள்விகளை சோதனை அடிப்படையில் நாம் கேட்டுக் கொண்டு செயல்பட வேண்டும். உண்மையில், இந்த சோதனை ஒருவரின் செயல்கள் மற்றும் வாழ்க்கை முடிவுகளை பிரதிபலிக்க உதவும். ஒவ்வொரு கேள்விக்கும் 3 விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் நடத்தைக்கு மிகவும் பொருத்தமான மாற்றுகளில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இனி கேள்விகளுக்கு செல்வோம்.

பத்து கேள்விகளும் பதில்களும்:

நீங்கள் பத்து லட்சம் ரூபாயை பரிசாக வென்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தப் பணத்தை என்ன செய்வீர்கள்? பல வருடங்களாக நீங்கள் வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்களா?  அல்லது ஊரை சுற்றிப்பார்க்க செல்வீர்களா? தேவையான பொருட்களை வாங்கி, மீதமுள்ள தொகையை வங்கியில் வைப்பீர்களா? உங்கள் நல்ல வேலையை யாராவது பாராட்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்னை மிகவும் புத்திசாலியாகக் கருதுகிறேன்., புகழுக்கு ஈடாக, அவர்கள் எதிரில் இருப்பவரையும் புகழ்வேன்.,  உந்துதல் மற்றும் மேம்படுத்த முயற்சி என்று நினைப்பேன். 

உங்கள் முன் இரண்டு தொழில் வாய்ப்புகள் இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? எனது நெருங்கிய நபரையோ அல்லது நண்பரையோ ஆலோசிப்பேன். செல்வம், புகழ், பணம் அதிகம் உள்ள தொழிலைத் தேர்ந்தெடுப்பேன்., என்னுடைய திறனைக் கருத்தில் கொண்டு தொழிலைத் தேர்ந்தெடுப்பேன். உங்கள் நெருங்கிய நண்பர் உங்களை மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவரை பழிவாங்குவேன்., நான் அவரை மன்னிப்பேன் நட்பு வட்டாரத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கி விடுவேன்.

தெரியாமல் தவறு செய்தால் என்ன செய்வீர்கள்? எல்லாப் பழிகளையும் முன்னால் இருப்பவர்கள் மீது போடுவேன்., அமைதியாக இருப்பேன், எனது தவறை ஏற்று என் முன்னால் இருப்பவரிடம் மன்னிப்பு கேட்பேன். நீங்கள் அதிகம் நம்பும் உங்கள் நெருங்கிய நண்பர் சரியான நேரத்தில் உங்களுக்கு துரோகம் செய்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? பழிவாங்குவேன்,. ஏமாந்த பிறகும் கண்மூடித்தனமாக நம்புவேன்., அது என்றென்றும் போய்விடும் என்று இருந்து விடுவேன். 

ஒரு பணியை 15 நாட்களாகத் தள்ளிப்போட்டுவிட்டு, திடீரென்று அதை ஞாபகப்படுத்தினால் என்ன செய்வீர்கள்? இந்த வேலையை நாளை வரை ஒத்திவைப்பேன்., இந்த வேலையை வேறொருவர் செய்து தருவார்., காலதாமதம் இன்றி உடனடியாக பணிகளை முடிப்பேன். உங்கள் நண்பர் ஒருவர் உங்களிடம் கோபமாக இருந்தால் என்ன செய்வீர்கள்? நட்பு முறியும்., அமைதியாக இருப்பேன், மற்றும் அவரது முயற்சிக்காக காத்திருப்பேன், மனக்கசப்புக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சித்து தவறு இருந்தால் திருத்திக் கொள்வேன். 

நீங்கள் ஏதோவொன்றில் பலவீனமாக இருந்து அதைச் செய்ய முடியாவிட்டால் என்ன செய்வீர்கள்? இந்த வேலைக்கு தகுதியற்றவர் என்று கருதுவேன். இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை செய்ய முயற்சிப்பேன்.  தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு மீண்டும் முயற்சிப்பேன். யாராவது உங்களுடன் உடன்படவில்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர்கள் சொன்ன வார்த்தையில் உறுதியாக இருப்பார்கள் என நினைப்பேன்., தன் எதிரில் இருப்பவர் தவறு என்று நிரூபிப்பேன். உங்களுக்கு முன்னால் இருப்பவர் உங்கள் பேச்சைக் கேட்காததால்  அவரது நட்பை முறித்துக் கொள்வேன். மற்றவரின் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் புரிந்து கொள்ள முயற்சிப்பேன்.

பதில்கள் மூலம் மனதின் வயது:

மேற்கண்ட கேள்விகளுக்கு பெரும்பாலான பதில்கள்  மூன்றாவதாக  இருந்தால், உங்கள் மன வயது 30 முதல் 50 வயது வரை இருக்கும். உங்கள் ஆளுமைப் பண்புகளில் சிந்தனை, நடிப்பு மற்றும் வயது வந்தவரைப் போன்ற உணர்வு ஆகியவை அடங்கும். உங்கள் வயதை விட நீங்கள் புத்திசாலி. உங்கள் பொறுப்புகளை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்கள் முன்னுரிமைகளின் பட்டியலை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் மற்றும் அவற்றை நிறைவேற்றுவதில் நம்பிக்கை உள்ளீர்கள். 

உங்களின் பெரும்பாலான பதில்கள் இரண்டாவதாக இருந்தால், உங்கள் மன வயது 20 முதல் 30 வயது வரை இருக்கும். நீங்கள் ஒரு பொறுப்பான நபர் மற்றும் உங்கள் பொறுப்பில் மிகவும் தீவிரமாக இருக்கிறீர்கள். உங்கள் வேலையை அவுட்சோர்ஸ் செய்யும் திறனும் உங்களுக்கு உள்ளது.

நீங்கள் முதல் பதிலைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் மன வயது 15 முதல் 20 ஆண்டுகள். உங்கள் ஆளுமைப் பண்புகளில் பொறுப்புகளைப் பற்றி அறிந்திருப்பது அடங்கும். ஆனால் அவற்றை அடைய நீங்கள் உறுதியாக இல்லை. உங்கள் மனதில் தோன்றுவதைச் சொல்ல நீங்கள் தயங்க மாட்டீர்கள். நேர்மறையே வெற்றிக்கான திறவுகோல் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் மன வயது உங்கள் வயதுக்கு பொருந்தாமல் இருக்கலாம். உங்கள் மன வயதை அறிந்த பிறகு உங்கள் திறமைகளை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். தொடர் முயற்சிகள் மூலம் உங்கள் திறமைகளை மேம்படுத்தி வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ பயணிக்க வேண்டும். பிரபல மனநல மருத்துவர் ஷெர்மான் அன்சாரி வழங்கியுள்ள இந்த ஆலோசனைகள் அனைவருக்கும் பலன் அளிக்கும் என்பது உறுதி.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

முத்தமிழ் முருகன் மாநாடு....!

 அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - ஒரு பார்வை

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் வாழும் அனைத்துச் சமுதாய மக்களின் நலன்களை பேணும் வகையில் ஆட்சி செய்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சகோதர சமுதாய மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு தேதிகளில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை, தமிழக அரசின் சார்பில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அந்த துறையின் அமைச்சர் சேகர்பாபு, மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்து, மாநாட்டை, வெற்றி மாநாடாக மாற்றியுள்ளார்.  மாநாட்டில் முதல் நாள் மட்டும் நடந்த கலைநிகழ்ச்சிகளில் 600 கலைஞர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் 4 நீதிபதிகள், தமிழக ஆதீனங்கள், ஆன்மிக பெரியோர்கள், உலகம் முழுவதும்  இருந்து வந்த வெளிநாட்டு பக்தர்கள் கலந்துகொண்டு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்து  ‘எல்லோருக்கும் எல்லாம்‘ என்று உரையாற்றினார். மாநாட்டுக்கு 25 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் நாள்  மட்டும் லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள். இதன் மூலம் முருகனுக்கு, தமிழ்நாடு அரசு எடுக்கிற மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்பது தெரியவந்தது. முதல் நாள் மட்டும் 50 ஆயிரம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது, இதேபோல் ஒன்னேகால் லட்சம் பக்தர்கள் உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். முதலமைக்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்த இந்த மாநாடு வெற்றி பெற்றிருக்கிறது. பக்தர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த மாநாட்டு கண்காட்சி மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எல்லோருக்கும் எல்லாம்:

தமிழக அரசைப் பொருத்தவரை எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இரு நாட்கள் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் திருவண்ணா மலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் ரத்தினகிரி தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஆகியோர் குத்து விளக்கினை ஏற்றினர்.

அதனை தொடர்ந்து பிரதான நுழைவுவாயிலை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர்கள் முன்னிலையில் ரத்தினகிரி தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் 100அடி கொடிக்கம்பத்தில் மாநாட்டு கொடியேற்றினார். அடுத்த நிகழ்வாக முருகன் கண்காட்சி அரங்கினை அமைச்சர் ஐ.பெரியசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆன்மீகப் பெரியோர்கள், நீதி அரசர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் என பலர் உரையாற்றினர். மாநாட்டில் 2 நாட்களும் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், பல்துறை சார்ந்தவர்களின் உரை , சிந்தனை மேடை, நாட்டியம்,வாய்பாட்டு, பக்தி இசை, கருத்தரங்கு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சேகர்பாபு என்ற பண்பாளர்:

மாநாட்டில், கோவில்களில் தமிழுக்கு முன்னுரிமை தரும் வகையில் தமிழ் மொழியில் கும்பாபிஷேகம் மற்றும் வழிபாடு நடத்த நடவடிக்கை மேற்கொள்வது. முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிலைத்த அடையாளமாக முத்தமிழ் முருகன் ஆய்வு மையம் அமைக்க அரசுக்கு பரிந்துரைப்பது. சித்த மருத்துவத்தை ‘தமிழர் சித்த மருத்துவம்‘ என அழைத்திட அரசுக்கு பரிந்துரைப்பது. பழனியில் ‘தமிழர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்‘ அமைக்க அரசுக்கு பரிந்துரைப்பது என்பன உள்ளிட்ட 21 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டை முன்னின்று வெற்றிகரமாக நடத்திய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அனைத்துச் சமுதாயக மக்களிடையே எப்போதும் சகோதரப் பாசத்துடன் பழகும் பண்பாளர். குறிப்பாக இஸ்லாமிய சமுதாய மக்களின் தோழனாக எப்போதும் இருந்து, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு காணும் ஒரு சகோதரராக இருந்து வருகிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக அவர் பொறுப்பு ஏற்றப்பிறகு, அக்கிரமிப்பு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான  நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவர். தாம் கொண்ட கொள்கையில் எப்போதும் உறுதியுடன் இருக்கும் அவர், மற்ற சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பு அளித்து அவர்கள் நடத்தும் விழாக்களில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் குணம் கொண்டவர். இப்படி, உயர்ந்த எண்ணம் கொண்ட அமைச்சர் சேகர்பாபு, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை, வெற்றிகரமாக நடத்தி இருப்பது, அவரது ஆன்மிக பக்திக்கு ஒரு சிறந்த சான்றாக இருந்து வருகிறது. தமிழக அரசின் சார்பில் இதுபோன்ற மாநாட்டை நடத்துவது குறித்து சிலர் விமர்சனம் செய்து வந்தாலும், ஒரு அரசு என்பது அனைத்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசாக இருக்க வேண்டும் என்பது தான் உண்மையான ஆட்சியாளர்களுக்கு அழகாகும். அந்த வகையில் இந்த மாநாட்டை நடத்தியதற்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  

முஸ்லிம் மன்னர்களும் கோவில்களும்:

வரலாற்றில் இஸ்லாமியர்கள் மன்னர்கள் பற்றி பலவிதமான கருத்துக்கள் உள்ளன. ஆனால் இஸ்லாமிய மன்னர்கள் பலர் இந்துக் கோவில்கள் கட்டுவதற்கு நிலங்களை நன்கொடைகளாக வழங்கியதும், பல கோவில்களின் திருப்பணிகளுக்கு உதவியதும், பல கோவில்களை பாதுகாத்து வந்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வரலாற்று ஆய்வாளரான பிரதீப் கேசரிவானி என்பவர் 2015ம் ஆண்டு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கையில், உத்திர பிரதேசத்தின் அரைல் பகுதியில் திரிவேணி சங்கம கரையில் அமைந்துள்ள சோமேஸ்வர் மகாதேவ் ஆலயம் கட்டுவதற்கு நில வழங்கியவர் முகலாய மன்னர் அவுரங்கசீப் தான். அந்த கோவில் கட்டுவதற்கு அவர் பணம் மற்றும் நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளதற்கான சான்று, அந்த கோவிலில் அனுமன் சிலைக்கு அருகில் உள்ள தூண் ஒன்றில் 15 வரியில் சமஸ்கிருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோமேஸ்வரர் மகாதேவ் கோவில் மட்டுமல்ல உஜ்ஜைனி மகா காலேஸ்வரர் கோவில், சித்திரக்கூடம் பாலாஜி கோவில், கவுகாத்தி உமாநாத் கோவில், சரன்ஜயில் உள்ள ஜெயின மத கோவில்கள், தென்னிந்தியாவில் சில கோவில்கள் கட்டுவதற்கும் அவுரங்கசீப் நிலம் அளித்துள்ளதாக நீதிமன்றங்களில் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அக்பர், ஜகாங்கீர் ஆகியோரும் 16ம் நூற்றாண்டில் பல கோவில்கள், மடங்களை அமைக்க நிலங்களை நன்கொடையாக கொடுத்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் அவர்களின் மத நம்பிக்கையின் படி வழிபாடுகளை செய்வதற்கு உரிமை உண்டு என்பதில் அக்பர் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

தமிழகத்தின் சென்னையில் உள்ள பிரபல கோவில்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு முன்புறம் 2080 சதுர மீட்டர் பரப்பளவில் கோவில் குளம் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த குளத்தை கட்டியவர் முத்தியப்ப முதலியார். 300 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் குளத்தை அமைப்பதற்கு அப்போது இந்த பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப்பிடம் சென்று கேட்டுள்ளார் முத்தியப்ப முதலியார். சில நிபந்தனைகளின் பேரில் ஆற்காடு நவாப் திருக்குளத்திற்கான நிலத்தை வழங்கி உள்ளார். இதனை ஏற்ற முத்தியப்ப முதலியார் மூன்றே நாட்களில் திருக்குளத்தை அமைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் மயிலை கற்பகல் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. முத்தியப்ப முதலியார், ஆற்காடு நவாப்பிற்கு அளித்த வாக்குறுதியின் பேரில் தற்போது வரை ஆண்டுதோறும் நடைபெறும் தெப்ப உற்சவத்தின் போது, நவாப் வம்சத்தவர்கள் வந்து முதல் மரியாதையை ஏற்ற பிறகே உற்சவங்கள் நடத்தப்படும் வழக்கம் உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் இஸ்லாமிய மன்னர்கள் பலர் இந்துக் கோவில்கள் கட்டுவதற்கும் அவற்றை பராமரிப்பதற்கும் நிலம், பணம் ஆகியவற்றை நன்கொடையாக அளித்துள்ளனர். கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், சபரிமலை செல்வதற்கு முன் எரிமேலியில் உள்ள வாபர் கோவிலில் வழிபட்டு, செல்லும் வழக்கம் இன்னும் உள்ளது. இதேபோல் தமிழகத்திலும் பல கோவில்களில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் வந்து முதல் மரியாதையை வாங்கிய பிறகே கோவில் உற்சவங்கள் துவங்கும் வழக்கமும் உள்ளது.

முத்தமிழ் முருகன் மாநாடு :

இந்தியாவில் 4 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துவரும் நிலையில், இந்த சமூக மக்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஒரு சிறந்த ஆட்சியாளரின் பண்பாகும். அந்த வகையில், தமிழகத்தில் அனைத்துச் சமுதாய மக்களையும் அரவணைத்துக் கொண்டு, அவர்களின் நலனில் உண்மையான அக்கறையுடன் செயல்படும் அரசாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. எனவே தான் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், அவற்றை புறந்தள்ளிவிட்டு, அனைத்துலக முத்தமிழ முருகன் மாநாட்டை, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஒரு வெற்றி மாநாடாக நடத்தி முடித்துள்ளது. 

சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்