18வது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 24 முஸ்லிம்கள் உறுப்பினர்கள்....! சில சுவையான தகவல்கள்...!!
18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் ஒன்றியத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த 18வது மக்களவைத் தேர்தலில் மொத்தம் 24 முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த 17வது மக்களவையில் 26 முஸ்லிம் உறுப்பினர்கள் இடம்பெற்ற நிலையில் தற்போது அதன் எண்ணிக்கையில் 2 குறைந்து 24-ஆக சரிந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு 23 பேர் மட்டுமே இடம்பெற்ற நிலையில், 16வது மக்களவையை ஒப்பிடும்போது, எண்ணிக்கையில் ஒன்று கூடி இருக்கிறது. 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றாவது முறையாக மிகக் குறைந்து உள்ளது. நாட்டில் உள்ள 25 கோடி முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களவையில் பிரதிநிதித்துவம் குறைந்து வருவது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் சமுதாயம் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
2014-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, பெரும்பாலான எதிர்க்கட்சிகள், ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும், ஒரு துருவப் போட்டிக்கு பயந்து, முஸ்லிம் வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்காமல் ஒதுங்கிவிட்டதால், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில், 115 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 18வது மக்களவைத் தேர்தலில் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 78 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
சுவையான தகவல்கள்:
18வது மக்களவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இ.டி. முகமது பஷீர், எம்.பி அப்துஸ் ஸமது சமதானி, கே.நவாஸ்கனி ஆகிய 3 பேரையும் சேர்த்து, மொத்தம் 24 முஸ்லிம் எம்.பி.க்கள் மட்டுமே இருப்பார்கள். இதேபோன்று, யூசுப் பதான், அசாதுதீன் ஒவைசி, இக்ரா சவுத்ரி உள்ளிட்ட 24 பேரும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தனது அரசியல் அறிமுகத்தில் வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய யூசுப் பதான், மேற்கு வங்க மாநிலம் பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை வீழ்த்தினார். உத்தரப் பிரதேசத்தில் சஹாரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இம்ரான் மசூத் 64 ஆயிரத்து 542 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கைரானாவில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சமாஜ்வாதி கட்சியின் இக்ரா சவுத்ரி பா.ஜ.கவின் பிரதீப் குமாரை 69 ஆயிரத்து 116 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி 3 இலட்சத்து 38 ஆயிரத்து 87 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.வின் முன்னணி தலைவர் மாதவி லதாவை தோற்கடித்து தனது ஹைதராபாத் கோட்டையை தக்க வைத்துக் கொண்டார். லடாக்கில், சுயேச்சை வேட்பாளர் முகமது ஹனீபா, காங்கிரஸின் ஜம்யாங் சிங் நாம்யாலை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இ.யூ.முஸ்லிம் லீக் எம்.பி.க்கள்:
18வது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 24 உறுப்பினர்கள் குறித்த சில முக்கிய தகவல்களை நாம் அறிந்துகொள்வோம். இந்தியாவில் ஜனநாயக நடைமுறைகள் தொடங்கப்பட்டு, நாடாளுமன்ற நடவடிக்கைகள் அமலுக்கு வந்த நாள் முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார்கள். ஏக இறைவனின் கருணையால், இந்த 18வது மக்களவைத் தேர்தலிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் இ.டி. முகமது பஷீர், தம்மை எதிர்த்து போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வி.வாசிப்பை விட மூன்று இலட்சத்து 118 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இ.டி.முகமது பஷீர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 6 இலட்சத்து 44 ஆயிரத்து 6ஆக உள்ளது. இதேபோன்று, கேரள மாநிலம் பொன்னானி தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் எம்.பி அப்துஸ் ஸமது சமதானி, தம்மை எதிர்த்து போட்டியிட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.எஸ்.ஹம்சாவை விட 2 இலட்சத்து 35 ஆயிரத்து 760 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அப்துஸ் ஸமது சமதானிக்கு இந்த தேர்தலில் மொத்தம், 5 இலட்சத்து 62 ஆயிரத்து 516 வாக்குகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இராமநாதபுரம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்ட கே.நவாஸ் கனி, தம்மை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை புரிந்தார். இந்த தொகுதியில் நவாஸ் கனிக்கு கிடைத்த மொத்த வாக்குகள், 5 லட்சத்து 9 ஆயிரத்து 664ஆக உள்ளது.
காங்கிரஸ் முஸ்லிம் எம்.பி.க்கள்:
18வது மக்களவைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மொத்தம் 7 முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அசாம் மாநிலம் துப்ரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ரகிபுல் ஹுசைன் நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற சாதனையை புரிந்துள்ளார். இவருக்கு மொத்தம் 14 இலட்சத்து 71 ஆயிரத்து 885 வாக்குகள் கிடைக்க, எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு முஸ்லிம் வேட்பாளர் முகமது பத்ருத்தீன் அஜ்மலுக்கு 4 இலட்சத்து 59 ஆயிரத்து 409 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதன்மூலம் 10 இலட்சத்து 12 ஆயிரத்து 476 வாக்குகள் வித்தியாசத்தில் ரகிபுல் ஹுசைன் வெற்றி பெற்றுள்ளார். பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் முகமது ஜாவேத், மொத்தம் 4 இலட்சத்து 2 ஆயிரத்து 850 வாக்குகள் பெற்று, 59 ஆயிரத்து 692 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று கதிஹார் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேப்டளார் தாரிக் அன்வர், மொத்தம் 5 இலட்சத்து 67 ஆயிரத்து 92 வாக்குகள் பெற்று, எதிர்க்கட்சி வேட்பாளரை 49 ஆயிரத்து 863 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் வடகரை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷாபி பரம்பில், மொத்தம் 5 இலட்சத்து 57 ஆயிரத்து 528 வாக்குகள் பெற்று, ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 506 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத், 64 ஆயிரத்து 542 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 5 இலட்சத்து 47 ஆயிரத்து 967 ஆகும். மேற்கு வங்க மாநிலம், மல்தஹா தக்ஷின் தொகுதியில் போட்டியிட்ட இஷா கான் சவுத்ரி என்ற காங்கிரஸ் வேட்பாளர், மொத்தம் 5 இலட்சத்து 72 ஆயிரத்து 395 வாக்குகள் பெற்று, தம்மை எதிர்த்து போட்டியிட்டவரை ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 368 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
லட்சத்தீவு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் முஹம்மது ஹம்துல்லா சயீத், மொத்தம் 25 ஆயிரத்து 726 வாக்குகள் பெற்று, 2 ஆயிரத்து 647 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள்:
இதேபோன்று, 18வது மக்களவைக்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் மொத்தம் 4 முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். கைரானா தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் இக்ரா சவுத்ரி, மொத்தம் 5 இலட்சத்து 28 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று, 69 ஆயிரத்து 116 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ராம்பூர் தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு சமாஜ்வாதி கட்சி முஸ்லிம் வேட்பாளர் மொஹிப்புல்லா, 4 இலட்சத்து 81 ஆயிரத்து 503 வாக்குகள் பெற்று, 87 ஆயிரத்து 434 வாக்குகள் வித்தியாசத்தில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
சம்பல் தொகுதியில் போட்டியிட்ட ஜியா உர் ரெஹ்மான், பா.ஜ.க வேட்பாளரை விட ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 494 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றியை சுவைத்துள்ளார். இவருக்கு கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 5 இலட்சத்து 71 ஆயிரத்து 161-ஆக உள்ளது. காஜிபூர் தொகுதியில் போட்டியிட்ட அஃப்சல் அன்சாரி, மொத்தம் 5 இலட்சத்து 39 ஆயிரத்து 912 வாக்குகள் பெற்று பா.ஜ.க. வேட்பாளரை ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 861 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் முஸ்லிம் எம்.பி.க்கள்:
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைவராக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 18வது மக்களவைக்கு மொத்தம் 5 முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர். ஜாங்கிபூர் தொகுதியில் போட்டியிட்ட கலிலூர் ரஹாமான், மொத்தம் 5 இலட்சத்து 44 ஆயிரத்து 427 வாக்குகள் பெற்று, ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 637 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பஹரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர், பதான் யூசுஃப், 5 இலட்சத்து 24 ஆயிரத்து 516 வாக்குகள் பெற்று, 85 ஆயிரத்து 22 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முர்ஷிதாபாத் தொகுதியில், அபு தாஹர் கான், மொத்தம் 6 இலட்சத்து 82 ஆயிரத்து 442 வாக்குகள் பெற்று, ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 215 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பசிர்ஹத் தொகுதியில் போட்டியிட்ட எஸ்கே நூருல் இஸ்லாம் மொத்தம் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 8 இலட்சத்து 3 ஆயிரத்து 762 ஆகும். இவர் பா.ஜ.க. வேட்பாளரை 3 இலட்சத்து 33 ஆயிரத்து 547 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
உலுபெரியா தொகுதியில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் சஜ்தா அகமது, 2 இலட்சத்து 18 ஆயிரத்து 673 வாக்குகள் வித்தியாசத்தில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தியுள்ளார். இவருக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 7 இலட்சத்து 24 ஆயிரத்து 622 ஆகும்.
பிற கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள்:
ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட்ட அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி அசாதுதீன், மொத்தம் 6 இலட்சத்து 61 ஆயிரத்து 981 வாக்குகள் பெற்று, 3 இலட்சத்து 38 ஆயிரத்து 87 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.வின் முன்னணி தலைவர் மாதவி லதாவை தோற்கடித்து தனது ஹைதராபாத் கோட்டையை தக்க வைத்துக் கொண்டார்.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி சார்பில் ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிட்ட ஆகா சையத் ரூஹுல்லா மெஹ்தி, 3 இலட்சத்து 56 ஆயிரத்து 866 வாக்குகள் பெற்று, ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோன்று, அனந்த்நாக்-ராஜௌரி தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் மியான் அல்தாஃப் அஹ்மத், 5 இலட்சத்து 21 ஆயிரத்து 836 வாக்குகள் பெற்று, 2 இலட்சத்து 81 ஆயிரத்து 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் சுயேட்சையாக நின்ற, 2 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட அப்துல் ரஷித் ஷேக், 4 இலட்சத்து 72 ஆயிரத்து 481 வாக்குகள் பெற்று, 2 இலட்சத்து 4 ஆயிரத்து 142 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.
லடாக் தொகுதியில் மற்றொரு சுயேட்சை முஸ்லிம் வேட்பாளர் முகமது ஹனீபா, மொத்தம் 65 ஆயிரத்து 259 வாக்குகள் பெற்று, தம்மை எதிர்த்து போட்டியிட வேட்பாளரை 27 ஆயிரத்து 862 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
கவனம் செலுத்த வேண்டும்:
இதுஒருபுறம் இருக்க, மக்களவையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்துகொண்டே வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. நாட்டில் 25 கோடிக்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அப்போது தான், முஸ்லிம்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள், அவர்களின் பொருளாதார, சமூக வாழ்க்கை நிலைமை குறித்து, ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். இனி வரும் காலங்களில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment