முஸ்லிம்களுக்கு எதிரான ஆன்லைன் முறைகேடுகள் அதிகரிப்பு...!
- ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் -
புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகம், தற்போது நவீன விஞ்ஞான உலகமாக மாறிக் கொண்டு இருக்கிறது. உலகின் எந்தவொரு பகுதியில் இருந்தாலும், தாங்கள் விரும்பும் ஒரு நபரை உடனடியாக தொடர்பு கொண்டு பேச, செல்பேசி போன்ற நவீன கருவிகள் வந்துவிட்டதால், மக்களின் வாழ்க்கை மிகவும் எளிதாக மாறிவிட்டது. செல்பேசியில் மட்டுமல்லாமல், மடிக் கணினி மூலமும் முகம் பார்த்து பேச முடியும் என்பதால், மக்களின் கவனம் தற்போது நவீன விஞ்ஞான கருவிகள் மீது அதிகம் திரும்பியுள்ளது.
இப்படி, நவீன கருவிகள் உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டாலும், அதில் நன்மைகளுடன் தீமைகளும் இணைந்து இருப்பதை மறுக்க முடியாது. ஆன்லைன் மூலம் உலகம் முழுவதும் ஏராளமான முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள் நடைபெற்று வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனை கட்டுப்படுத்த காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், புதிய புதிய தொழில்நுட்பங்கள் மூலம், ஆன்லைன் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் துஷ்பிரயோகம் பாலின அடிப்படையிலானது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிரான துஷ்பிரயோகம்:
ஆன்லைன் மூலம் நடைபெற்று வரும் முறைகேடுகள் மூலம் சாதாரண ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிப்பு அடைகிறார்கள். இத்தகையை சூழ்நிலையில், எம்.எஸ். கல்வி அகாடமி என்ற ஆய்வு நிறுவனம், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆன்லைன் துஷ்பிரயோகம், முறைகேடுகள் ஆகியவை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி, அந்த ஆய்வில் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. ‘Behind The Pixels: Social Silencing and Isolation of Indian Muslims in the Online Public’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் ஆன்லைன் துஷ்பிரயோகம் எந்தளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.
எம்.எஸ். கல்வி அகாடமி என்ற தனியார் ஆய்வு நிறுவனம், நாட்டின் ஆறு மாநிலங்களில் 20 மற்றும் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இருந்து 18 நேர்காணல்கள் மற்றும் நான்கு குழு விவாதங்களை நடத்தி அதன் அடிப்படையில் அறிக்கையை தயாரித்துள்ளது. இந்தியா முழுவதும் பணிபுரியும் தன்னாட்சி பெண்கள் குழுக்களின் கூட்டணியால் தயாரித்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், துஷ்பிரயோகம் காரணமாக, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர், பெரும்பாலும் பெண்கள், சமூக ஊடகங்களில் இருந்து கட்டுப்படுத்தவோ அல்லது விலகவோ தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்:
முஸ்லீம் ஆண்கள், தங்கள் தாய் மற்றும் சகோதரிகளை குறிவைத்து ஆன்லைன் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் அதேவேளையில், முஸ்லிம் பெண்கள் அடிக்கடி மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாலியல் வன்முறை மற்றும் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்றும் அறிக்கை கூறுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைமை தாங்கும் பெண்கள் வரை துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளது.
'ஆன்லைன் துஷ்பிரயோகம் பாலின அடிப்படையிலானது' என்று அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான கீதா தத்ரா கருத்து தெரிவித்துள்ளார். மேலும், "ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் உலகத்திற்கு இடையேயான வேறுபாடு பெரியதல்ல என்றும், ஆன்லைன் வெறுப்பு ஆஃப்லைன் உலகிலும் வன்முறையை ஏற்படுத்தலாம் என்றும், இது பெண்களின் குடும்பங்கள் அவர்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் மீதான கட்டுப்பாட்டையும் தணிக்கையையும் அதிகரிக்க வழிவகுக்கிறது என்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பத்து ஆண்டுகளில் அதிகரிப்பு:
ஆன்லைன் முறைகேடு 2014க்கு முன்பே இருந்தபோதிலும், ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, அது வேகமாகவும், வியத்தகு முறையில் நடைபெற்று வருவதாகவும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மற்றொரு ஆய்வாளரான பௌஷாலி பாசக், 'இத்தகைய துஷ்பிரயோகம் உளவியல் அதிர்ச்சிகளைத் தூண்டுகிறது' என்று வேதனை தெரிவித்துள்ளார். "இது ஒரு முறை அல்ல. இது வாழ்க்கையின் பொருள் அம்சங்களைத் தூண்டுகிறது. பிற ஓரங்கட்டப்பட்ட குழுக்களுடன் ஒருவர் ஆதரவளிக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, சமூகத்தை கட்டியெழுப்புதல் அல்லது ஒரு ஆதரவு குழு அதிர்ச்சியை சமாளிக்க முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை மிகவும் அவசியம்:
முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து, ஆன்லைன் முறைகேடுகள் அதிகரித்து வருவதால், இஸ்லாமிய சமுதாயம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்லைன் பாதிப்புகள் குறித்து ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண், பெண் ஆகிய அனைவருக்கும் இஸ்லாமிய பெரியவர்கள் எடுத்துக் கூற வேண்டும். முகநூல், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். அல்லது, இதுபோன்ற சமூக வலைத்தளங்களின் பக்கமே தங்களது கவனத்தை செலுத்தாமல் இருக்கும்படி, இளைஞர்களுக்கு நல்ல ஆலோசனைகளை தர வேண்டும். கல்வி, உயர்ந்த இலட்சியம் என அவர்களின் கவனம் நல்ல திசைகளில் திரும்ப வேண்டும் என்பதை இலக்காக வைத்து, சமுதாயம் தங்களது பங்களிப்பை ஆற்ற முன்வர வேண்டும். ஆன்லைன் பயன் அளிக்கும் வகையில் இருந்ததாலும் ஆபத்துகள் அதிகம் இருப்பதை கவனத்தில் கொண்டு, செயல்பட்டாமல் மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிரான ஆன்லைன் முறைகேடுகள் அதிகரிப்பதை தடுக்க முடியும்.
- எஸ்.ஏ..அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment