நூல் மதிப்புரை
நூல் : இஸ்லாமிய ஷரிஅத் மலர்
தொகுப்பாசிரியர் : மவ்லானா அல்ஹாஜ் பி.ஏ.கலீலுர் ரஹ்மான் ரியாஜி ஹஜ்ரத் (ரஹ்)
வெளியீடு :
மவ்லவி அல்ஹாஜ் பி.ஏ.கே.அப்துர் ரஹீம் பாஜில் பாகவி,
ரஹ்மத் காரியாலயம்,
எம்.என்.பி. சன்னதித் தெரு, பேட்டை,
திருநெல்வேவேலி – 627 004 தென் இந்தியா
அலைபேசி:
94431 32335
விலை :
ரூ.600/-
புகழ்பெற்ற ‘ரஹ்மத் மாத இதழின்’ அறுபதாம் ஆண்டு நிறைவு
(1961-2022)
மணிவிழா மலராக “இஸ்லாமிய ஷரிஅத் மலர்” மிகவும் அழகிய
முறையில் மலர்ந்து, சமுதாய மக்களின் கைகளில் தற்போது
தவழ்ந்துகொண்டு இருக்கிறது. ‘ரஹ்மத்’ மாத இதழ் நிறுவன ஆசிரியர்
மவ்லானா அல்ஹாஜ் பி.ஏ.கலீலுர் ரஹ்மான் ரியாஜி ஹஜ்ரத் (ரஹ்)
அவர்களால்
தொகுக்கப்பட்ட இந்த அற்புதமான இஸ்லாமிய ஷரிஅத்
களஞ்சியத்தை,
இன்றைய ‘ரஹ்மத்’ இதழ் ஆசிரியர் மவ்லவி அல்ஹாஜ்
பி.ஏ.கே.அப்துர் ரஹீம் பாஜில் பாகவி அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
அல்
இஸ்லாம், அல்குர்ஆன், அல்ஹதீஸ், ஹதீதுகளை தொகுத்த
இமாம்கள்,
அல் இஸ்மாஃவல் கியாஸ், மத்ஹபுகள் பற்றிய ஆராய்ச்சி,
நாற்பெரும்
இமாம்களின் வரலாறு, முஸ்லிம் தனியார் சட்டம், ரியாஜி
ஹஜ்ரத்
அவர்களின் சொற்பொழிவுகள், கவிதைகள், என பல்வேறு
தலைப்புகளில்,
மொத்தம் 498 பக்கங்களில் ‘இஸ்லாமிய ஷரிஅத் மலர்’
மிகமிக
அழகாகவும் நேர்த்தியாகவும், அற்புதமாகவும்
தொகுக்கப்பட்டுள்ளது.
அல் இஸ்லாம் பகுதியில் ‘இஸ்லாம் ஒரு முன்னுரை’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரையில், ‘மனிதன் தன்னைப் பற்றி சிந்தித்தாலே போதும், அவன் தன்னைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் ஒருவன் உள்ளான் என்பதைப் புரிந்து கொள்வதற்கு வேறு எங்கும், எதைப் பற்றியும் ஆராய்ச்சி நடத்தத் தேவையில்லை’ என்ற வார்த்தைகளைப் படிக்கும்போது நமது சிந்தனைகள், ஏக இறைவன் பக்கம் பறந்து செல்கின்றன. ஏக இறைக் கொள்கையில் மேலும் உறுதியாக இருக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளத்தில் பிறக்கிறது. இதேபோன்று, மௌலானா முஹம்மது பஸ்லுர் ரஹ்மான் அன்சாரி அவர்கள் எழுதிய ‘உலக மதங்கள் பற்றி ஓர் ஆராய்ச்சி’ என்ற மற்றொரு கட்டுரையில், கிருஸ்தவ மதம், யூத மதம், இந்து மதம், புத்த மதம் மற்றும் இஸ்லாம் மார்க்கம் குறித்து மிகவும் சிறந்த முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ‘முற்றிலும் வரலாற்றுப் பூர்வமான ஒரே சன்மார்க்கம் இஸ்லாம் மார்க்கமாகும்’ ‘ஒரே சுத்த சத்திய சன் மார்க்கமும் இஸ்லாம் தான்’ என்பதை இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
அல்குர்ஆன் பகுதியில், அல்குர்ஆன் குறித்த முன்னுரை, திருகுர்ஆனின் பெருமை, திருமறையின் போதனைகள் என மொத்தம் 24 தலைப்புகளில், இடம்பெற்றுள்ள கட்டுரைகள் மூலம், திருக்குர்ஆன் குறித்து பல தெளிவுகள் கிடைக்கின்றன. திருக்குர்ஆன் உலக மக்களிடையே எப்படிப்பட்ட தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது என்பதை ‘திருக்குர்ஆன் வசனம் கேட்டு மனமாற்றம் அடைந்த ராஜா’ என்ற கட்டுரையில் மவ்லவீ பி.ஏ.கே. அப்துர் ரஹீம் பாஜில் பாகவி மிக அழகிய முறையில் குறிப்பிட்டுள்ளார்.
அல்ஹதீஸ் பகுதியில், ‘அல்ஹதீஸ் ஓர் விளக்கம்’ என தொடங்கி, ‘ஹதீதுகளின் வகுப்புகள்’ என மொத்தம் 12 தலைப்புகளில் அல்ஹதீஸ் குறித்து இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் தெளிவுபெறும் வகையில், தகவல்கள் குவிந்து கிடக்கின்றன.
‘ஹதீதுகளை தொகுத்த இமாம்கள்’ பகுதியில் ‘இமாம் புகாரி (ரஹ்)’ ‘முஸ்லிம் தந்த முஸ்லிம் (ரஹ்)’ ‘அறிஞர் திலகம் இமாம் அபூதாவூது (ரஹ்)’ ‘இலக்கிய மேதை இமாம் திர்மிதி (ரஹ்)’ ‘அஞ்சா நெஞ்சகர் இமாம் நஸாயீ’ ‘இமாம் இப்னு மாஜா (ரஹ்)’ ‘ஸிஹாஹ் ஸித்தாவின் விரிவுரைகளும், ஆசிரியரும்’ என்ற மொத்தம் 7 தலைப்புகளில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், அவற்றின் மூலம் கிடைக்கும் தகவல்கள், அரிய வரலாற்று செய்திகள் படிக்க படிக்க சுவை அளிப்பதுடன், ‘ஹதீதுகளை தொகுத்த இமாம்கள்’ குறித்தும் அவர்களின் கடின உழைப்பு, தியாகங்கள் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது.
மேலும், ‘அல் இஜ்மாஃ வல் கியாஸ்’ ‘மத்ஹபுகள் பற்றிய ஆராய்ச்சி’ ‘ நாற்பெரும் இமாம்களின் வரலாறு’ ‘ முஸ்லிம் தனியார் சட்டம்’ ‘ரியாஜி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள்’ ‘கவிதைகள் என்ற தலைப்பில், பல்வேறு அறிஞர்கள் எழுதியுள்ள மனதை கவர்ந்து, சிந்தனையை தூண்டும் அழகிய கவிதைகள்’ என இந்த ‘இஸ்லாமிய ஷரிஅத் மலரில்’ ஒவ்வொரு பக்கமும், இஸ்லாமிய மணம் பரவியுள்ளது.
மௌலானா அல்ஹாஜ் பி.ஏ.கலீலூர் ரஹ்மான் ரியாஜி ஹஜ்ரத் (ரஹ்) அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள இந்த ‘இஸ்லாமிய ஷரிஅத் மலர்’ ஒரு இஸ்லாமிய ஷரிஅத் களஞ்சியம் என உறுதியாக கூறலாம். இஸ்லாம் குறித்து நம்மில் பலருக்கு அடிக்கடி சந்தேகங்கள், வீனாக்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இதேபோன்று, சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இஸ்லாம் குறித்து பல சந்தேகங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இப்படி, இஸ்லாம் குறித்து எழும் அனைத்து சந்தேகங்களுக்கும், வினாக்களுக்கு மிகவும் தெளிவாக விளக்கம் பெறும் வகையில், இந்த நூலில் அற்புதமான தகவல்கள், செய்திகள், விளக்கங்கள் குவிந்து கிடக்கின்றன.
இஸ்லாமிய ஷரிஅத் குறித்து மிகவும் சிறப்பான முறையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களின் இல்லத்திலும் கட்டாயம் இடம்பெற வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பரவியுள்ள முஸ்லிம்களின் இல்லங்களிலும் இந்த நூலை சென்றுச் சேர்க்க வேண்டும். அதன்மூலம், இஸ்லாம் குறித்து முஸ்லிம்கள் நன்கு தெளிவு பெற்று, பிறகு, இஸ்லாம் குறித்து தவறாக பரப்பப்பட்டு வரும் செய்திகளையும், தகவல்களையும் தடுத்த நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என உறுதியாக கூறலாம்.
மேலும், அரசு மற்றும் தனியார் நூலகங்களில் ‘இஸ்லாமிய ஷரிஅத் மலர்’ கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும். அதன்மூலம், ஆயிரக்கணக்கான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள், இஸ்லாமிய மார்க்கம் எப்படிப்பட்ட மார்க்கம் என்பதையும், அந்த மார்க்கம், அனைத்து மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைக்காக வந்த மார்க்கம் என்பதையும் அறிந்து தெளிவு பெறுவார்கள். மேலும் இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ள நல்ல ஒரு வாய்ப்பு நூலக வாசகர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
அத்துடன், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி நூலகங்களிலும் இந்த நூலை இடம்பெறச் செய்தால், தமிழக மாணவச் சமுதாயம், இஸ்லாமிய மார்க்கம் குறித்து படித்து அறிந்து தெளிவு பெறுவார்கள். இஸ்லாம் குறித்து அவர்கள் உள்ளங்களில் எழும் சந்தேகங்களுக்கும் பல கேள்விகளுக்கும் இந்த நூல் மூலம் நல்ல விளக்கங்களை அவர்கள் பெற முடியும்.
"இஸ்லாமிய ஷரிஅத் மலர்" நூல் அரிய தகவல்களைக் கொண்ட ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் மட்டுமல்ல, இஸ்லாமிய ஷரிஅத் களஞ்சியம் என்றே கூறலாம். எனவே, இந்த அற்புதமான நூலை தமிழக மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் பணியை சமுதாயம் செய்ய வேண்டும். அதற்காக முன்வர வேண்டும். திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்கும் செல்லும் முஸ்லிம்கள், இந்த அரிய ‘இஸ்லாமிய ஷரிஅத் மலரை’ தங்களின் அன்பு பரிசாக வழங்க வேண்டும். அதன்மூலம், இந்த நூல் அனைத்துத் தரப்பு மக்களிடம் கண்டிப்பாக போய் சேரும் என உறுதியாக கூறலாம்.
"இஸ்லாமிய ஷரிஅத் மலர்" என்ற இந்த நூலை அனைவரும் அவசியம் படித்து தெளிவுப் பெற்றால், அவர்கள் இஸ்லாத்தை நேசிப்பார்கள். இஸ்லாத்தை விரும்புவார்கள். இஸ்லாமிய மக்கள் மீது அதிக அன்பையும் பாசத்தையும் பொழிவார்கள். இஸ்லாம் குறித்து வரும் வதந்திகளை புறம் தள்ளி, இஸ்லாமிய மக்களுடன் சகோதர உணர்வுடன் பழகுவார்கள். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும், அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள். இதற்கு வழிக்காட்டும் நூலாக "இஸ்லாமிய ஷரிஅத் மலர்" உள்ளது என்றால் அது மிகையாகாது.
- ஜாவீத்
No comments:
Post a Comment