Saturday, June 22, 2024

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் .....!

 நூலாய்வு:


நூல் : 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் '

         38வது ஆண்டு மணிச்சுடர் நாளிதழ் ரமளான் மலர் - 2024

வெளியீடு :  மணிச்சுடர் நாளிதழ், 

          காயிதே மில்லத் மன்ஸில்

            36, மரைக்காயர் லெப்பைத் தெரு, 

         சென்னை - 600 001. 

        தொலைபேசி: 044 25218786

விலை : ரூ.200/- 


இந்திய ஊடகத் துறையில், தனக்கு என ஒரு தனிப் பாணியை அமைத்துக் கொண்டு, அதை உறுதியாக கடைப்பிடித்து, சமுதாய உணர்வுடன் இயங்கும் ஒருசில சிறந்த ஊடகங்களில், மணிச்சுடர் நாளிதழும் ஒன்றாகும். இந்திய இஸ்லாமியர்களால் உர்தூ, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் வெளியிடப்பட்டாலும், தமிழ் மொழியில் வெளியிடப்படும் ஒரே நாளிதழ் மணிச்சுடர் மட்டுமேயாகும். பல்வேறு சவால்களை சந்தித்து, தற்போது 40வது ஆண்டு பயணத்தை தொடங்கியுள்ள  மணிச்சுடர் நாளிதழ், ஒவ்வொரு ஆண்டும் ரமளான் சிறப்பு மலர் வெளியிட்டு வருவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டிற்கான ரமளான் மலர்  'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

மணிச்சுடர் நாளிதழ் ஆசிரியர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் சிறப்பான வழிக்காட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளுடன், இந்த மலரின் பொறுப்பாசிரியர் பொறுப்பை ஏற்று, மேனாள் புதுக்கல்லூரி பேராசிரியர் முனைவர் மு.முஹம்மது அலி அவர்கள், மலரை மிக அழகிய முறையில் தயாரித்துள்ளார். அவருக்கு துணையாக மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், திருச்சி மணிச்சுடர் சீனியர் செய்தியாளர் எம்.கே.ஷாகுல் ஹமீது ஆகியோர் இருந்து மலரை அழகாக உருவாக்கி இருக்கிறார்கள். 

மொத்தம் 176 பக்கங்கள் கொண்டு இந்த  'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ' மலரின் ஒவ்வொரு பக்கத்திலும், இஸ்லாமிய வாழ்வியலைக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள், உணவு தந்து உலகத்தை எப்படி உய்வித்திருக்கின்றனர் என்பதை எடுத்துக்கூறும் பல அருமையான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 'வறுமையோடு வாழ்பவர்களின் துன்பத்தைப் போக்க வேண்டும்' என்ற சிராஜுல் மில்லத் அவர்களின் சிந்தனைகளுடன் தொடங்கும் மலர், 'பசியாற்றுவோம்' 'பகுத்துண்டு வாழ்வோம்' 'ஏழைகளுக்கு ஆகாரம் அளியுங்கள்' 'உள்ளே விருந்தினர் - வெளியே யாசகர் - தவக்குல்லுடன் ஈகை' 'விருந்தினரின் வெகுமதியில் நீதி' 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' 'இறைமறை கூறிய ஆகுமான நல்ல உணவும், தடுக்கப்பெற்ற தீய உணவும்' 'சங்க காலத் தமிழரின் உணவுகள்' 'பழந்தமிழர் உணவு வகைகள் குறித்து நுட்பச் சொற்கள்'  'ஊன்துவை அடிசில் (பிரியாணி போன்ற உணவு)' 'இலக்கியங்களில் உணர்த்தப்பெறும் தமிழர் வாழ்வில் சோறு' 'பகிர்ந்தளித்தால் பரக்கத்' 'பள்ளிவாசல்களில் அறவாசல்' என பல அருமையான கட்டுரைகளுடன், உள்ளத்தை கவரும் வகையில் உருவாக்கப்பட்டு, அழகிய சிந்தனைக்கு நல்ல உணவாக இருக்கிறது. 

அத்துடன், 'பிரியாணி சில சுவையான தகவல்கள்' 'வாணியம்பாடி பிரியாணியை விரும்பிய ராஜீவ் காந்தி' 'பிரியாணி வணிகத்தில் கோடிகளைக் குவிக்கும் வணிகர்கள்' 'பிரியாணி விருந்தும் மருந்தும்' 'பிரியாணி தயாரிப்போர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்' 'உடலுக்கு வலு சேர்க்கும் ஹலீம்' போன்ற கட்டுரைகள், பிரியாணி குறித்து நாம் இதுவரை அறிந்துகொள்ளாமல் இருந்த பல அரிய தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில், எழுதப்பட்டு இருப்பது அருமையிலும் அருமையாகும். மேலும், 'காயல்பட்டின பாரம்பரிய உணவுகள்' 'காயல்பட்டினம் அன்றும் இன்றும்' 'காயல்பட்டினத்தில் தாய்வழிச் சமூகம்' 'காயல்பட்டினம் அருளிய இலக்கியங்கள்' போன்ற மலரில் இடம்பெற்றுள்ள பல அரிய கட்டுரைகளைப் படிக்கும்போது, காயல்பட்டினத்தில் நாம் நேரில் பயணிப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. 

மணிச்சுடர் நாளிதழ் குழுவினர், கடின உழைப்பை நல்கி, மிக அருமையாக தயாரித்துள்ள இந்த  'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ' மலரை, தமிழ் சமுதாயம் அவசியம் படித்து பயன்பெற வேண்டும். குறிப்பாக, இஸ்லாமிய பெருமக்கள், இந்த மலரில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டுரைகளையும் படித்து, அதன்மூலம் தங்களது சிந்தனைகள் பறக்கச் செய்து, உணவின் முக்கியத்துவம் அறிந்து, அந்த உணவு உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்க இஸ்லாம் கூறும் அழகிய வழிகளை, தங்கள் வாழ்விலும் கடைப்பிடிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

கடைசியாக,   'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ' மலரை தயாரித்த மணிச்சுடர் நாளிதழ் வெளியிட்டாளர் ஜனாப் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், செய்தி ஆசிரியர் ஏ.கே.முஹம்மது காசிம்,  விளம்பர மேலாளர் எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி, மலர் வடிவமைப்பாளர் ஆர்.பால் சார்லஸ், தலைமை நிருபர் ஆர்.ஏ.ஆர்.கண்ணன், மலர் வடிவமைப்பில் துணையாக இருந்த பி.பிரமிளா மற்றும், அலுவலக, அச்சகப் பணியாளர்கள் அனைவரையும் நாம் நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். இவர்களின் கடின உழைப்பு இல்லையெனில்,  'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ' மலர், இந்தளவுக்கு மனதை கவரும் வகையில் வந்திருக்காது. எல்லாப் புகழும் ஏக இறைவன் ஒருவனுக்கே. 

- ஜாவீத்

No comments: