Thursday, June 27, 2024

பெண் கல்வி.....!

 

பெண் கல்வி, இஸ்லாத்தின் எல்லைக்குள் இருக்க வேண்டும் 

மௌலவி சையத் முஹம்மது ஜிஃப்ரி முத்துக்கோயா தங்ஙள் பேச்சு 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், சமஸ்தா என அழைக்கப்படும் சமஸ்தா கேரளா ஜம்ஈய்யத் உல்-உலமாவின் (அனைத்து கேரள உலமா அமைப்பு), 99வது நிறுவன தின விழா, கடந்த புதன்கிழமையன்று கொண்டாடப்பட்டது. விழாவில் சமஸ்தா பொதுச் செயலாளர் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் கொடி ஏற்றி வைத்தார். இந்த அற்புதமான விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், கேரள மாநில தலைவர் பனக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றினார்.  மேலும், விழாவில் மத்திய முஷாவர உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

 சமஸ்தா வரலாறு:

சமஸ்தா என அழைக்கப்படும் சமஸ்தா கேரளா ஜம்ஈய்யத் உல்-உலமா (அனைத்து கேரள உலமா அமைப்பு), கேரள முஸ்லிம்கள் மத்தியில் மிக உயர்ந்த ஆதரவுடன் இருக்கும் புகழ்பெற்ற சுன்னி அறிஞர்களின் சங்கமாகும். சமஸ்தாவின் உருவாக்கம் 1922-ஆம் ஆண்டில் ஏற்பட்டது.

மேற்கத்திய பாணியில் நடந்துகொண்டிருக்கும் நவீனமயமாக்கல் போக்குகளால் கேரள முஸ்லிம்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டபோது, 1922 ஆம் ஆண்டு கொச்சி மாநிலத்தின் கொடுங்கல்லூரில் கே.எம்.சீதி சாஹிப், கே.எம்.மௌலவி மற்றும் இ.கே.மௌலவி போன்ற தலைவர்களால் நிறுவப்பட்ட கேரள முஸ்லீம் ஐக்யா சங்கம் (கேரள முஸ்லிம்களிடையே ஒற்றுமைக்கான குழு) மூலம் புதிய சித்தாந்தவாதிகள் முதலில் வெளிவந்தனர். சிதறிய மற்றும் ஒழுங்கமைக்கப்படாத சீர்திருத்த ஆர்வலர்களை ஒன்றிணைக்க முயற்சித்தது. பின்னர், அவர்கள் 1924-ஆம் ஆண்டு அல்வேயில் நடைபெற்ற ஐக்ய சங்கத்தின் இரண்டு நாள் மாநாட்டில் கேரள ஜம்இய்யத் உல்-உலமா என்ற உலமா அமைப்பை உருவாக்கினர்,

இது பொன்னானி மக்தூம்கள் தலைமையிலான சிறந்த அறிஞர்களின் வழிகாட்டுதலின் கீழ் வளர்க்கப்பட்டது. அவர்கள் இஸ்லாமிய கலாச்சார மரபுகளை ஷிர்க் மற்றும் பிதா என அறிவித்தனர்,. கேரளாவின் இஸ்லாமிய பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் புதிய விளக்கங்களுக்கு எதிராக மறுமலர்ச்சி இயக்கத்தை நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டியதன் அவசியத்தை உலமாக்கள் உணர்ந்தனர்.

மார்க்கத்தின் உண்மையான உணர்வைப் பாதுகாக்க ஒரு நிறுவன இயக்கத்தின் தேவை பற்றி விவாதிக்க. தகுந்த தீர்வைப் பற்றி விவாதிக்க சிறந்த அறிஞர்களின் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1925-இல், சில முக்கிய உலமாக்கள் மற்றும் பிற சமூகத் தலைவர்கள் காலிக்கட் வலிய ஜும்ஆ மஸ்ஜிதில் ஒன்று கூடி, நீண்ட மற்றும் தீவிர விவாதங்களுக்குப் பிறகு உலமா அமைப்பை உருவாக்கினர். அமைப்பின் தலைவராக கே.பி.முஹம்மது மீரான் முஸ்லியாரும் செயலாளராக பரோல் ஹுசைன் மௌலவியும் நியமிக்கப்பட்டனர். புதிதாக உருவாக்கப்பட்ட உலமா அமைப்பு ஒரு வருடத்திற்குள் பல பிரபலமான மாநாடுகளைக் கூட்டியது,

மாநாட்டிற்கு முன்பு உருவாக்கப்பட்ட தற்காலிக அமைப்பை மறுசீரமைத்து சமஸ்தா கேரளா ஜம்இய்யத் உல்-உலமா என்ற பெயரில் ஒரு முழு அளவிலான அமைப்பு அமைப்பை ஏற்றுக்கொண்டது. சமஸ்தாவின் முதல் தலைவராக வர்க்கல் முல்லக்கோயா தங்ஙளும், துணைத் தலைவர்களாக பாங்கில் அஹமது குட்டி முஸ்லியார், முஹம்மது அப்துல் பாரி முஸ்லியார், கே.எம். அப்துல் காதர் முஸ்லியார், கே.பி. முஹம்மது மீரான் முஸ்லியார் ஆகியோரும், முதல் குழுவில் பி.வி. முஹம்மது முஸ்லியாரும், பி.கே. முஹம்மது முஸ்லியாரும் , இடம்பெற்றனர்.

99வது நிறுவன தின விழா:

இப்படி, பல்வேறு சவால்களை சந்தித்து, அழகிய இஸ்லாமிய ஒளியை கேரள முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே கொண்டு சென்றுச் சேர்க்க சமஸ்தா கேரளா ஜெம்-இய்யத்துல் உலமா அமைப்பு, தொடர்ந்து தனது பணிகளை செய்து வருகிறது. கடந்த 98 ஆண்டுகளாக சிறப்பான சேவை செய்துள்ள சமஸ்தா, கடந்த புதன்கிழமையன்று, 99வது ஆண்டு நிறுவன தின விழாவை கொண்டாடியது.

கோழிக்கோட்டில், நடந்த இந்த 99வது நிறுவன தின விழாவிற்கு இ.யூ.முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பனக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் தலைமை தாங்கினார்.

முத்துக்கோயா தங்ஙள் உரை:

மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில், சமஸ்தா கேரளா ஜெம்-இய்யத்துல் உலமா அமைப்பின் தலைவர் சையத் முஹம்மது ஜிஃப்ரி முத்துக்கோயா தங்ஙள் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், இஸ்லாமிய மார்க்கம், பெண் கல்விக்கு எதிரான மார்க்கம் இல்லை என குறிப்பிட்டார். அதேநேரத்தில், பெண் கல்வி இஸ்லாத்தின் எல்லைக்குள் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். கல்வி பெறும் பெண்கள்,எந்தவித தொல்லைகளுக்கும் ஆளாகாமல், உரிய பாதுகாப்புடன் நல்ல கல்வி பெற வேண்டும் என்பதே தங்கள் அமைப்பின் நோக்கம் என ஜிஃப்ரி முத்துக்கோயா தங்ஙள் தெரிவித்தார்.

 

சமஸ்தா கேரளா ஜெம்-இய்யத்துல் உலமா அமைப்பு, பெண் கல்விக்கு எதிரானது என சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக வேதனை தெரிவித்த அவர், இப்படி சிலர் செய்யும் பொய் பிரச்சாரம் போன்று, தங்களுடைய அமைப்பு ஒருபோதும் பெண் கல்விக்கு எதிரானது இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.

கேரள பெண்கள் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களும் நல்ல கல்வியை பெற வேண்டும் என்ற சிறந்த மற்றும் உயர்ந்த நோக்கத்தில், கேரளா ஜெம்-இய்யத்துல் உலமா அமைப்பு, பல்வேறு நல்ல ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்து இருப்பதாக, ஜிஃப்ரி முத்துக்கோயா தங்ஙள் கூறினார்.

பெண்கள் கல்வி பெறும்போது, கண்டிப்பாக சில வரைமுறைகளை பின்பற்ற வேண்டும்., அந்த வழிக்காட்டுதல்களை முறைப்படி பின்பற்றி கல்வி பெற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இத்தகைய அழகிய வழிக்காட்டுதல் நெறிமுறைகளை தங்களுடைய அமைப்பு உருவாக்கி, பெண் கல்வியை ஊக்குவித்து வருகிறது. எனவே, பெண்கள் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லாமல், தகுந்த பாதுகாப்புடன் கல்வி பெற வேண்டும்.

இவ்வாறு, ஜிஃப்ரி முத்துக்கோயா தங்ஙள் தமது உரையின்போது அறிவுறுத்தினார்.

மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த இந்த 99வது நிறுவன தின விழாவில் ஆயிரக்கணக்கான உலமா பெருமக்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

-            சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: