முதுகுவலி குறைய தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அவசியம் தேவை....! - ஆய்வில் தகவல் -
மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கைப் பயணம். நவீன நவீன விஞ்ஞான கருவிகளின் கண்டுபிடிப்புகள் மூலம், மனித வாழ்க்கை மிகவும் எளிமையாக மாறிவிட்டது. எளிமையாக மாறிவிட்ட இந்த மனித வாழ்க்கையில், உடல் உழைப்புக்கு கொஞ்சமும் இடம் இல்லாமல் போய்விட்டதால், மனிதன் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதனால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சந்திக்கும் பிரச்சினைகள் தொல்லைகள் ஏராளம். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு ஈட்டும் பணம், பொருள் ஆகிய அனைத்தையும், மருத்துவச் செலவுகளுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டிய நிலை தற்போது மனிதனுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் தன்னடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டு, ஒரு பிடிப்பு இல்லாமல், மனம் போன போக்கில் மனிதன் சென்றுக் கொண்டு இருப்பது என உறுதியாக கூறலாம்.
வலிகள் பலவிதம்:
தற்போது மனிதன் சந்திக்கும் முக்கிய உடல் பிரச்சினைகளில், முதுகு வலி, முழங்கால் வலி என பல வலிகளை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வலிகளுக்கு தீர்வு காண மருத்துவமனைகளுக்கு படை எடுக்கும் மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்குப் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி செலவு செய்து சிகிக்சைப் பெற்றபிறகும் கூட, வலி தொல்லையில் இருந்து அவர்களுக்கு தீர்வு கிடைப்பது இல்லை. தொடர்ந்து வலி ஏற்பட்டு, வாழ்க்கையில் வேதனையை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
சரி, இந்த வலி பிரச்சினைகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு இல்லையா என்ற கேள்வி எழுப்பினால், நிச்சயம் இருக்கிறது என்ற பதில் கிடைக்கிறது. அதற்கு நாம் செய்ய வேண்டியது, நமது பழக்க வழக்கங்களை கண்டிப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். சரியான முறையில் உடற்பயிற்சிகளை செய்து, சரியான முறையில் தூங்கி எழ வேண்டும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் தூக்கம் மிகவும் அவசியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சரியான தூக்கம் இல்லாத காரணத்தால், பலர், பலவித நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அதன்மூலம் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.
வலி பிரச்சினைக்கு எளிய தீர்வு:
வலி பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து நடத்தப்படும் ஆய்வுகள் மூலம் நமக்கு பல அரிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் முதுகு வலியை பிரச்சினைக்கு எப்படிப்பட்ட முறையில் தீர்வு காண முடியும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடப்பது குறைந்த முதுகுவலியைக் குறைக்க உதவும் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சராசரி வயது 54 கொண்ட 701 நபர்களுக்கு 24 மணிநேரம் நீடித்த முதுகுவலியில் இருந்து நடைப்பயிற்சி மூலம் தீர்வு கிடைத்து இருப்பது சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இந்த நபர்களை தோராயமாக இரண்டு குழுக்களாகப் பிரித்தனர். ஒரு குழுவில் இடம்பெற்ற நபர்களுக்கு, பயிற்சி பெற்ற பிசியோதெரபிஸ்ட்டின் வழிகாட்டுதலின் கீழ், ஆறு மாதங்களுக்கு தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் முற்போக்கான நடைப்பயிற்சியை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறைந்தபட்சம் 12 முதல் 36 மாதங்கள் வரை இந்த குழுவில் பங்கேற்பாளர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். மற்றொரு குழுவில் இடம்பெற்ற நபர்களுக்கு எந்த சிகிச்சை கட்டுப்பாட்டு பின்பற்றப்படவில்லை.
ஆய்வில் அரிய தகவல்:
இப்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் புகழ்பெற்ற மருத்துவ இதழான 'தி லான்செட்டில்' வெளியிடப்பட்ட WalkBack எனப்படும் சோதனையின் முடிவுகளின்படி, தினசரி நடைப்பயணத்தை கட்டுப்படுத்தும் என்றும், குறைந்த முதுகுவலியின் எபிசோடைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "குறைந்த முதுகுவலி மீண்டும் வருவதற்கான சராசரி நாட்கள் இந்த குழுவில் இடம்பெற்ற நபர்களுக்கு 208 நாட்கள் என்றும், மற்றொரு குழுவில் இடம்பெற்ற நபர்களுக்கு 112 நாட்கள்" என்று ஆய்வு கூறுகிறது.
இதேபோன்று, டெல்லியைச் சேர்ந்த மூத்த மருத்துவ ஆலோசகர் மற்றும் எலும்பியல் நிபுணர் டாக்டர் ராஜேஷ் மல்ஹோத்ரா கூறுகையில், 'குறிப்பாக நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பிட்ட குறைவான முதுகுவலி பொதுவானது. இது மோசமான தோரணையின் பிரச்சனை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில். இதுபோன்ற நோயாளிகளைப் தினமும் ஐந்து பேரைப் பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார்.
மற்றொரு மூத்த மருத்துவரும், ஆர்த்ரோஸ்கோபி மற்றும் ஸ்போர்ட்ஸ் மெடிசின் துறையின் தலைவருமான டாக்டர் தீபக் சௌத்ரி கூறுகையில், குறைந்த முதுகுவலியைக் குறைக்க இயக்கம் முக்கியமானது என்று பல ஆய்வுகள் கடந்த காலங்களில் காட்டியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். மாறாக, பலர் படுக்கை ஓய்வுக்கு தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
நடைப்பயிற்சியை நிறுத்தாதீர்கள்:
வாழ்க்கையில் நடைப்பயிற்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் மேற்கொண்ட ஆய்வின் முடிவு மற்றும் மருத்துவர்களின் கருத்துகள் மூலம் நன்கு அறிய முடிந்தது. நம்முடைய அலட்சியம் மற்றும் சோம்பல் குணம், பலவித நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றன. எனவே, அலட்சியம் மற்றும் சோம்பலை உடனே கைவிட்டுவிட்டு, நாள்தோறும் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்வோம். நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பணம் செலவழிக்காமல், வலிகளை நீக்கும் எளிய மருந்து என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முதுகு வலி, முழங்கால் வலி போன்ற வலிகளில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டுமா? இன்றில் இருந்து உடனே நடைப்பயிற்சியை மேற்கொள்ள தொடங்குங்கள். உங்கள் வலிகள் பறந்து போகும். இன்ஷா அல்லாஹ்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment