தியாகத் திருநாளும், பொருளாதார மேம்பாடும்....!
இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையில், இஸ்லாமியர்களால் தியாகத் திருநாள் எனப்படும் ஹஜ் பெருநாள் மிகச்சிறந்த முறையில் கொண்டாடப்பட்டது. இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) மற்றும் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் தியாகங்களை நினைவுக் கூறும் வகையில் இந்த தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இறைக்கட்டளை ஏற்று, அதனை தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து தியாகங்கள் பலவற்றை செய்து, ஓர் இறைக் கொள்கையில் உறுதியாக இருந்தவர் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள். தந்தை எந்த கொள்கையில் உறுதியாக இருந்தாரோ, அதேபோன்று, மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களும் மிகமிக உறுதியாக இருந்தார்கள். பல்வேறு, துன்பங்களுக்கு மத்தியில் ஏக இறைக் கொள்கையில், மிகவும் உறுதியாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை.
இறைத் தூதர்கள் இருவரும் செய்த தியாகங்கள் மூலம் மனித இனம், பல பாடங்களை, நீதியை பெற வேண்டும். மனித வாழ்க்கையில் தியாகம் செய்யாமல், யாரும் மகிழ்ச்சிப் பெற முடியாது. ஆனந்தமாக வாழ முடியாது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் தியாகம் செய்தால் மட்டுமே, வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் நமக்கு தெரியவரும். எனவே, மனித வாழ்க்கையே தியாகத்தை அடிப்படையில் அமைந்தது என்று உறுதியாக கூறலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக செய்யும் தியாகம், சகோதரர்கள் தங்கள் சகோதர்களுக்காக செய்யும் தியாகம், சகோதரிகள், தங்கள் சகோதரர்களுக்காக செய்யும் தியாகம், கணவன் தன்னுடைய மனைவிக்காக செய்யும் தியாகம், மனைவி தன்னுடைய கணவனுக்காக செய்யும் தியாகம், நண்பர்கள், தங்கள் நண்பர்களுக்காக செய்யும் தியாகம் என சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட தியாகங்கள் மூலம் மட்டுமே, உலகத்தில் அமைதியும், சகோதரத்துவமும் நீடித்து நிலைத்து நிற்கும். வாழ்க்கையில் மனிதன் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தியாகங்களைச் செய்ய தயங்கவே கூடாது. அதிலிருந்து ஒருபோதும் பின் வாங்கக் கூடாது. இதைத் தான் இறைத்தூதர்கள் இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகிய இருவரின் வாழ்கை, மற்றும் அவர்களின் தியாகங்கள் மூலம் மனித சமுதாயம் பெறும் அழகிய படிப்பினையாகும்.
தியாகத் திருநாளின் சிறப்பு:
இஸ்லாமிய மார்க்கத்தில் இரண்டு பெருநாட்கள் மட்டுமே கொண்டாடப்படும் பண்டிகைகள் ஆகும். இந்த இரண்டு பெருநாட்களுக்கும் தனிச் சிறப்பு மற்றும் வரலாறு உண்டு. ரமலான் மாதத்தில் 30 நாட்கள் இறைக் கட்டளையின் படி நோன்பு வைத்து, ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து, செல்வத்தை வாரி வழங்கி, அந்த மகிழ்ச்சியில் ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதுபோன்று, தியாகத் திருநாளும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படும் திருநாளாகும். இப்படிப்பட்ட அற்புதமான இரண்டு பெருநாட்களும் மனித வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலும், அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் இருந்து வருகின்றன.
ஈகைத் திருநாளில் செல்வந்தர்கள் ஏழைகளுக்கு தங்கள் செல்வத்தில் இருந்து ஏழை வரி கொடுக்கிறார்கள். அதன்மூலம் அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் தியாகத் திருநாளில் இதுபோன்று ஏழை வரி கொடுப்பது இல்லையே. பின்னர் ஏழை எளிய மக்களின் பொருளாதார நிலை எப்படி மேம்படும் என்ற வினா நம்மில் பலருக்கு எழும். இது நியாயமான சந்தேகம் தான். அற்புதமான வினா தான். தியாகத் திருநாளில் இஸ்லாமிய மக்கள் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்தால், எப்படிப்பட்ட பொருளாதார வளர்ச்சி விவசாயிகள் முதல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அதை அறிந்து கொண்டால் நமக்கு மிகப்பெரிய வியப்பு ஏற்படும்.
தியாகத் திருநாளில் பொருளாதார மேம்பாடு:
இந்த உலகமே விவசாயத்தை நம்பி இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் வாழும் 140 மக்களில் பெரும்பாலான மக்கள் விவசாயிகள். கிராமங்களில் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து அதன்மூலம், தங்களுடைய வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்திக் கொண்டு இருப்பவர்கள். இவர்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி ஆகியவை, சந்தைகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம், விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. இந்த வருமானம் மூலம் அவர்களின் குடும்பம் மகிழ்ச்சி அடைகிறது. இது வழக்கமாக இருந்து வரும் நடைமுறையாகும்.
தியாகத் திருநாளில் ஒருபடி மேலாக, விவசாய மக்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இந்தியாவில் 25 கோடிக்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்தாலும், சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தான், விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்படி விவசாய தொழிலில் உள்ள சகோதர சமுதாய மக்களுக்கு, தியாகத் திருநாளில் எந்தளவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பும் ஆச்சரியமும் ஏற்படும்.
இந்தியாவில் வாழும் 25 கோடி முஸ்லிம் மக்களில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள், தியாகத் திருநாளில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை வாங்கி, அதை தங்களுடைய அழகிய பண்பு மற்றும் இஸ்லாமிய நெறியின் அடிப்படையில் தியாகம் செய்கிறார்கள்.
ஒரு ஆடு சுமார் பத்தாயிரம் முதல் நாற்பது ஆயிரம் வரை, சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் தியாகத் திருநாள் காலத்தில் மட்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஆடு, மாடுகள் மூலம் வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த 20 ஆயிரம் கோடி ரூபாய் யாருக்கு சென்று சேருகிறது என்றால், சகோதர சமுதாயத்தை சார்ந்த ஏழை விவசாயிகள், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து அதன்மூலம் வாழ்க்கையை வாழ்ந்து வரும் கிராமப்புற மக்களுக்கும், பெண்களுக்கும் தான் போய் சேர்கிறது.
இதன்மூலம் 20 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பலன் அடைகிறார்கள். அவர்களது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுகிறது. மகிழ்ச்சி உண்டாகிறது.
ஏழைகளுக்கு ஊட்டச் சத்து:
இப்படி ஏழை, எளிய கிராமப்புற விவசாயிகளுக்கும், ஆடு மாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் மக்களுக்கும் தியாகத் திருநாளில் கூடுதல் வருவாய் கிடைக்கும் அதேநேரத்தில், தியாகத் திருநாளில் செய்யப்படும் குர்பானி மூலம் கிடைக்கும் இறைச்சி, இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது. இப்படி, தியாகத் திருநாளில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இறைச்சி மூலம், 40 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஊட்டச் சத்து கிடைக்கிறது.
இந்தியாவில் மட்டுமே 40 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஊட்டச் சத்து கிடைக்கிறது என்றால், புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து புனித நகரமான மெக்காவிற்கு செல்லும் 25 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள், கொடுக்கும் குர்பானி மூலம் கிடைக்கும் அனைத்து இறைச்சியும் பாதுகாப்பான முறையில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர், ஏழை மக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது. 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஹாஜிகள் குர்பானி கொடுக்க வாங்கும் ஆடு, மாடு, ஒட்டகம் மூலம். உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு தியாகத் திருநாள் காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கிறது. அதன்மூலம், அவர்களின் வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி என்ற ஒளி கிடைக்கிறது.
குர்பானி கொடுக்கும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றின் தோல், மதரஸா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த தோல்களை வாங்கும் மதரஸா நிர்வாகிகள், அதனை விற்று, தங்களது கல்வி நிறுவனத்தின் நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம், கோடிக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு உணவு, உடை, மருந்து ஆகியவற்றுடன் இலவசமாக கல்வி கிடைக்கிறது. மேலும் ஏழை, எளிய மற்றும் தாய், தந்தையை இழந்த இளைஞர்களின் வாழ்வில் அழகிய ஒளி ஏற்றப்படுகிறது. அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையான வாழ்க்கைக்கு வழி காட்டப்படுகிறது.
தியாகம் செய்ய தயங்க வேண்டாம்:
தியாகத் திருநாள் என்பது இஸ்லாமிய மக்களின் பெருநாளாக இருந்தாலும், அதன்மூலம் அதிகமாக பயன் அடைவது சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தான் என்பது நிதர்சன உண்மையாகும்.
ஓர் இறைக் கொள்கைக்காக இறைத்தூதர்கள் செய்த தியாகங்களை நாம் அடிக்கடி நினைவு கூற வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் படிப்பினையை கொண்டு வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் கொஞ்சமும் தயங்காமல் தியாகங்களை செய்ய முன்வர வேண்டும். தியாகங்கள் எப்போதும் வீணாகாது. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, இறைத்தூதர்கள் இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயீல் ( அலை) ஆவார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், அவர்கள் செய்த தியாகங்கள் இன்று வரை நினைத்து போற்றப்படுகிறது. ஏன் உலகம் அழியும் வரை நினைத்து போற்றப்படும்.
கடைசியாக, சின்ன சின்ன தியாகங்களை செய்ய தொடங்கி, பின்னர், பெரிய தியாகங்களை செய்வதை பழக்கமாகவும் வழக்கமாகவும் கொண்டு, நமது வாழ்க்கையை புனித வாழ்க்கையாக மாற்றிக் கொண்டு, நன்மைகளை வாரிக் கொள்வோம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment