Tuesday, June 11, 2024

மூன்று முஸ்லிம் பெண் ஆளுமைகள்....!

 

இந்திய அரசியலில் மூன்று புதிய இளம் முஸ்லிம் பெண் ஆளுமைகள்....!

உலகில் மிக வேகமான முறையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஈடுபட்டு, ஆதிக்கம் செலுத்தி சாதனை புரிந்து வருகிறார்கள். கல்வி,  அறிவியல், பொருளாதாரம், சமூகம் உள்ளிட்ட துறைகளில் மட்டுமல்லாமல், அரசியலிலும் பெண்கள் அதிக ஆர்வம் செலுத்தி, அதன்மூலம் மக்கள் நலப் பணியில் ஈடுபடுகிறார்கள். இஸ்லாமியப் பெண்களை பொறுத்தவரை, அவர்களும் தற்போது அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளார்கள்.  ஆர்வம் மட்டும் செலுத்தாமல், அதில் தங்களது திறமைகளை நன்கு வெளிப்படுத்தி மிகப்பெரிய அளவுக்கு சாதித்தும் வருகிறார்கள்.

அந்த வகையில், இந்திய முஸ்லிம் பெண்களும் தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று கூறும் வகையில், அரசியலில் ஈடுபட்டு, பெரும் அளவுக்கு சமுதாயத்தின் கவனத்தை கவர்ந்து வருகிறார்கள். அண்மையில் நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தலில், இரண்டு முஸ்லிம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலம் கைரானா தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட இக்ரா சவுத்ரி வெற்றி பெற்று மக்களவைக்கு தேர்வாகியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், உலுபெரிய தொகுதியில் போட்டியிட்ட சஜ்தா அகமதும் வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று, ஒடிசா மாநிலத்தில், காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட சோபியா பிர்தௌஸ், வெற்றி பெற்று, ஒடிசாவின் முதல் முஸ்லிம் பெண் எம்.எல்.. என்ற பெருமையை பெற்றுள்ளார்.  இந்த மூன்று பெண் ஆளுமைகள் குறித்து நாமும் கொஞ்சம் அறிந்துகொள்வோம்.

இக்ரா சவுத்ரி:

29 வயதான சமாஜ்வாதி கட்சியின்  அறிமுகமான இக்ரா சவுத்ரி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் பா...வின் பிரதீப் குமாரை  69 ஆயிரத்து 116 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கைரானாவில் ஒரு முஸ்லிம் பெண் வெற்றி பெற்றிருப்பது, சைனிகள், ராஜபுத்திரர்கள், குஜ்ஜர்கள், ஜாட்கள், தலித்கள் என அனைத்து சமூகத்தினரும் தமக்கு வாக்களித்ததைக் காட்டுகிறது என்று இக்ரா சவுத்ரி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தாம் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் என்றாலும, தனது தொகுதியின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பு தமக்கு உள்ளது என்றும், தொகுதி தொடர்பான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதுடன்,  சமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டால் அதற்கு எதிராக குரல் எழுப்ப இருப்பதாகவும் இக்ரா சவுத்ரி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

தனது பிரச்சாரம் குறித்து கருத்து கூறியுள்ள அவர், ‘மதத்தை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றி எதிர்மறையாகவோ அல்லது நேர்மறையாகவோ பேசுவது தவறானது. நாட்டில் நிலவும் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்களை சந்தித்ததால், கைரானாவில் வெற்றி கிடைத்தாக’ குறிப்பிட்டுள்ளார்.

‘தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்கும் என்று தாம் நினைக்கவில்லை. இனி, அவர்களால் ஒரே இரவில் சட்டங்களை இயற்ற முடியாது. இப்போது வலுவான எதிர்க்கட்சி உள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என்றும் இக்ரா சவுத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இக்ரா சவுத்ரி, மூன்றாம் தலைமுறை அரசியல்வாதி. அவரது தாத்தா அக்தர் ஹசன் மற்றும் அவரது தந்தை முனவ்வர் ஹசன் ஆகியோர் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அவரது தாயார் தபசும் ஹசனும் 2009 மற்றும் 2018 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இக்ராவின் மூத்த சகோதரர் நஹித் ஹசன் மூன்று முறை  எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

சஜ்தா அகமது:

மேற்கு வங்க மாநிலம் உலுபெரியா மக்களவைத் தொகுதியில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் பெண் வேட்பாளர் சஜ்தா அகமது,  பா.ஜ.க.வின் அருண் உதய்பால் சவுத்ரியை சுமார் 2 இலட்சத்து 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை வெற்றியை பெற்றுள்ளார். 26 வயதான சஜ்தா அகமது, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று 1983-இல் பட்டம் பெற்றார். அவரது தந்தை சுல்தான் அகமதுவின் மறைவுக்குப் பிறகு, சஜ்தா அகமது கடந்த 2018-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போது பெற்ற வெற்றியின் மூலும் அவர் உலுபெரியா மக்களவைத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்.

சஜ்தா அகமதுவின் கணவர் மறைந்த சுல்தான் அகமது உலுபெரியாவில் இருந்து இரண்டு முறை எம்.பி.யாகவும், டிஎம்.சி.யின் முக்கிய முஸ்லிம் முகமாகவும் இருந்தவர். தனது கணவர் தாம் அரசியலில் சேர வேண்டும் என்று விரும்பியதாக கூறும், சஜ்தா அகமது, ஆனால் தாம் அதை மறுத்துவிட்டதாக நினைவு கூறுகிறார். ‘குடும்பத்தில் ஏற்கனவே இரண்டு அரசியல்வாதிகள் இருந்தனர், என் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். நான் தீவிரமாக பிரச்சாரம் செய்யாமல் இருந்திருக்கலாம், ஆனால் எனது கணவரின் 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் நிழலாக இருந்தேன்என்றும் ‘இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தனது கணவரின்,  விருப்பத்தை ஒரு வழியில் நிறைவேற்றி இருப்பதாக’  சஜ்தா தெரிவித்துள்ளார்.

சோபியா பிர்தௌஸ்:

ஒடிசாவின் முதல் முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ. என்ற பெருமையை பெற்றுள்ளார் காங்கிரரைச் சேர்ந்த சோபியா பிர்தௌஸ் என்ற பெண்மணி. அண்மையில் நடைபெற்ற ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில், 32 வயதான சோபியா ஃபிர்தௌஸ், பாராபதி-கட்டாக் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரும், புகழ்பெற்ற மகளிர் மருத்துவ நிபுணருமான டாக்டர். பூர்ண சந்திர மகாபத்ராவை சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். தனது இந்த வெற்றியை சகோதரத்துவத்தின் செய்தியாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.ஐ.எம். பட்டதாரியான சோபியா ஃபிர்தௌஸ், தான் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததாகவும், ஆனால் பெரும்பாலும் இந்துக்களான கட்டாக் மக்களிடையே வளர்ந்ததாகவும் கூறியுள்ளார். தாம் முதலில், ஒரு "பெருமைமிக்க ஒடியா", என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.  கடந்த 1937ஆம் ஆண்டு முதல் ஒடிசாவில் 141 பெண்கள், எம்.எல்..க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், பாராபதி-கட்டாக் தொகுதியின் முன்னாள் எம்.எல். முகமது மொகிமின் மகளான சோபியா, புதிய மைல்கல்லை அடையும் வரை எந்த முஸ்லிம் பெண்ணும் ஒடிசா சட்டமன்றத்தில் இடம் பெறவில்லை.

"முஸ்லிம் பெண்ணாக, தாம் சரித்திரம் புரிந்து இருப்பதாகவும், ஆனால், சட்டப்பேரவையில் 147 எம்.எல்..க்களில், இந்த முறை 11 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும். அரசியலில் பெண்கள் தம்மை ஒரு முன்மாதிரியாக பார்க்க முடியும்” என்றும்  சோபியா குறிப்பிட்டுள்ளார்.

ஐஐஎம் பெங்களூருவின் முன்னாள் மாணவியான சோபியா, ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராகவும், இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் (கிரெடாய்) புவனேஸ்வர் பிரிவின் தலைவராகவும் பதவி வகித்த முதல் பெண்மணி ஆவார். மகிழ்ச்சியான நடத்தைக்காக 'சிரிக்கும் எம்எல்ஏ' என்று அழைக்கப்படும் சோபியாவை  'கட்டாக்கின் மகள், கட்டாக்கின் மருமகள்,' என்றும் மக்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள்.

சோபியா, கட்டாக்கை ஒரு நிலையான நகரமாகவும், ஃபிலிகிரி வேலைகளுக்கான மையமாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். அத்துடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும்,. தனது தொகுதியை மேம்படுத்த மக்களிடம் ஏற்கனவே ஆலோசனைகள் கேட்டுள்ளதாகவும் சோபியா பிர்தௌஸ் கூறியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.

 

-    எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: