Sunday, June 23, 2024

இராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி....!

இராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி 25 கோடி இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியாக செயல்படுவார்...!

இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு:

சென்னை, ஜுன்.24-கடந்த 5 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக பணியாற்றிய இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, இனி, 25 கோடி இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருந்து செயல்பட்டு, நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 அண்மையில் நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற கே.நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் சென்னையில் 23.06.24 ஞாயிற்றுக்கிழமையன்று, சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு, 18வது மக்களவைத் தேர்வு செய்யப்பட்ட நவாஸ் கனிக்கு தங்களது வாழ்த்துகளை கூறி மகிழ்ச்சி அடைந்தனர். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனிக்கு சால்வை அணிவித்து, தனது வாழ்த்துகளை கூறி, அவருடைய பணிகள் சிறப்பாக அமைய துஆ செய்தார். 

நவாஸ் கனிக்கு பாராட்டு:

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் கே.எம்.கே., இராமநாதபுரம் தொகுதியின் எம்.பி.யாக இருந்து கடந்த 5 ஆண்டுகளில் நவாஸ் கனி செய்த பணிகள் ஏராளம். இந்த பணிகள் மூலம் மக்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் நவாஸ் கனி என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், நவாஸ் கனி செய்த, செய்யும் அனைத்துப் பணிகளுக்கும் அவரது குடும்பத்தினர் உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்து வருகிறார்கள். அதன் காரணமாக, மேலும் சிறப்பான முறையில் செயல்பட நவாஸ் கனிக்கு உற்சாகம் பிறக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்கும், நவாஸ் கனி செய்த பணிகள் காரணமாக, அந்த பணிகள், சேவைகள் சமுதாய மக்களால் ஏற்றக் கொள்ளப்பட்டு, அதன்மூலம் அவர்கள் கவரப்பட்டு, நவாஸ் கனியின் பணிகள் மேலும் சிறப்பாக அமைய வேண்டும் என்ற ஆவலுடன் இங்கு அனைவரும் துஆ செய்ய வந்துள்ளார்கள். 

சூழ்ச்சிகளை வீழ்த்தி வெற்றி:

இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ் கனி, கடந்த 17வது மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை விட, இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். திமுக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் பெரும் முயற்சிகள் செய்திருக்கும் திமுக தோகளுக்கும் கூட்டணிக் கட்சி சகோதர சகோதரிகளுக்கும் இச்சமயத்தில் நன்றி தெரிவிப்பது நமது கடமையாகும். 

இந்த தேர்தலில் நவாஸ் கனி,  மூன்று முறை முதலமைச்சராக இருந்தவரை துணிச்சலுடன் சந்தித்து, அவரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் நவாஸ் கனிக்கு எதிராக மிகப்பெரிய சூழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. மோடியின் நண்பர் என முன்னாள் முதலமைச்சர் அறிமுகம் செய்யப்பட்டார். அப்படி பல்வேறு சவால்கள், நெருக்கடிகள், சூழ்ச்சிகள் மத்தியிலும், நவாஸ் கனி, ஏக இறைவனின் கருணையால் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறார். நவாஸ் கனி நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என துஆ செய்த அனைவருக்கும் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் நவாஸ் கனி செய்த பணிகள், கடமைகள் ஆகியவற்றால் கவரப்பட்ட அனைவரும் அவரது வெற்றிக்காக துஆ செய்தார்கள். அப்படி துஆ செய்த அருமையான மக்கள் கூட்டம் தான் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறது. 

மார்க்க ரீதியாக ஒன்றுப்பட்ட இந்திய முஸ்லிம்கள்:

கடந்த 17வது மக்களவையில் இருந்த சூழல் தற்போது இருக்காது. 18வது மக்களவையில் வலிமையான எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த மூன்று பேரும் கடந்த 17வது மக்களவையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல், சகோதர சமுதாய மக்களுக்காகவும் குரல் கொடுத்தார்கள். தங்களது தொகுதியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் கடுமையாக உழைத்தார்கள். மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி, தற்போது, பா.ஜ.க. வலிமையான கட்சியாக இல்லை. தங்களுடைய விருப்பப்படி அவர்கள் இனி இயங்க முடியாது. எனவே, இ.யூ.முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணிகள் இனி மேலும் சிறப்பாக அமைய வாய்ப்பு கிடைத்துள்ளது. 

உலகில் தற்போது 193 நாடுகள் உள்ளன. இந்த 193 நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். 193 நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும், இந்திய முஸ்லிம்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அரபு நாட்டில் வாழும் முஸ்லிம், அரபு முஸ்லிமாக கருதப்படுகிறார். கென்யாவில் வாழும் முஸ்லிம் கென்ய முஸ்லிமாக கருதப்பட்டு வருகிறார். ஆனால், இந்தியாவில் அப்படிப்பட்ட நிலை இல்லை. காரணம், இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் ஒரு இனத்தை மட்டும் சேர்ந்தவர்கள் மட்டும் இல்லை. இந்தியாவில் மொத்தம் 4 ஆயிரத்து 698 பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என ஆய்வுகள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 ஆயிரத்து 698 பிரிவுகளிலும் முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். மீனவர் இனம் என அனைத்து பிரிவுகளிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். 4 ஆயிரத்து 698 பிரிவுகளிலும் முஸ்லிம்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் மார்க்க ரீதியாக ஒன்றுப்பட்டு இருக்கிறார்கள். இதுதான் மற்ற நாட்டு முஸ்லிம்களுக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் உள்ள வித்தியாசம், வேறுபாடு ஆகும். இந்திய முஸ்லிம்கள் இன ரீதியாக ஒன்றுப்படவில்லை. ஆனால் மார்க்க ரீதியாக ஒன்றுப்பட்டு இருக்கிறார்கள். 

25 கோடி இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதி: 

இப்படி மார்க்க ரீதியாக ஒன்றுபட்டுள்ள இந்திய முஸ்லிம்களுக்கு, இ.யூ.முஸ்லிம் லீக் பணியாற்றி வருகிறது. அவர்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். முஸ்லிம் சமுதாயத்திற்காக மட்டுமே இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் குரல் கொடுப்பது இல்லை. மாறாக, சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து அவர்களின் பிரச்சினைக்குக்கு தீர்வு கண்டு வருகிறார்கள். 

இப்படி, சிறப்பாக பணியாற்றும் வரிசையில் இராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி இருந்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் செய்த சேவை, இனி மேலும் விரிவு அடையும். இந்தியாவில் வாழும் 4 ஆயிரத்து 698 பிரிவுகளில் உள்ள முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்விற்காகவும், நவாஸ் கனி இனி குரல் கொடுப்பார். நாட்டில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களின் பிரதிநிதியாக அவர் இனி செயல்படுவார். 25 கோடி முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஒருவர் செயல்படுவார் என்பதை நினைக்கும்போது, உண்மையில் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது. அவரது சேவை மிகச் சிறப்பாக அமைய துஆ செய்ய ஆவல் ஏற்பட்டு, அந்த ஆவலில் ஏக இறைவனிடம் மனம் உருகி துஆ செய்கிறோம். 

நவாஸ் கனி, இனி செல்லும் இடம் எல்லாம் வெல்ல வேண்டும். அவர் செல்லும் இடம், வெல்லும் இடமாக மாற  வேண்டும். 25 கோடி இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியாக செயல்படும் நவாஸ் கனிக்கு ஏக இறைவன், அனைத்து வளங்களையும் வாரி வழங்க வேண்டும். அதற்காக நாம் துஆ செய்கிறோம். இங்கு கூடி இருக்கும் சமுதாய மக்கள் அனைவரும் துஆ செய்கிறோம். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். 

இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில், மலேசியாவைச் சேர்ந்த தொழில் அதிபர், சென்னையைச் சேர்ந்த நவாஸ் கனி உறவுத் தொழில் அதிபர், நவாஸ் கனியின் சகோதரர்கள் சீராஜ் கனி, அன்சாரி கனி  மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் நவாஸ் கனியின் மூத்த சகோதரர் அன்சாரி கனி நன்றி கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: