Friday, June 7, 2024

'காலம் உள்ள வரை கலைஞர்' புகைப்படக் கண்காட்சி...!

 

'காலம் உள்ள வரை கலைஞர்'

- நவீன புகைப்படக் கண்காட்சி -

- ஒரு சிறப்பு ரிப்போர்ட் -

தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் தி.மு.க.வினர் சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு திமுக மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில், சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்ற வளாகத்தில் 'காலம் உள்ள வரை கலைஞர்' தமிழகத்தின் சிற்பிக்கு நவீன கண்காட்சியகம் என்ற பெயரில், நவீன கண்காட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த ஒன்றாம் தேதி, இந்த கண்காட்சியை பிரபல சமூக ஆர்வலர் நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார். கண்காட்சி அரங்கத்தில் கலைஞரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான திருவாரூரில் தொடங்கி, சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை என 100க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

ஹாலோகிராபி தொழில்நுட்பம்:

கண்காட்சியின் அரங்கத்திற்குள்ளே நுழைந்ததும் ஹாலோகிராபி தொழில்நுட்பத்துடன் கூடிய 40 வயது தோற்றத்துடன் கலைஞர் நேரடியாக மக்களுடன் பேசும் தமிழைப் போற்றி கவிதைக் காவியம் இடம் பெற்றுள்ளது. மேலும் ஒரு அரங்கில் ‘வாழும் வரலாறு கலைஞரின் கதைப்பாடல்’ காட்சி இடம் பெற்றுள்ளது.  அத்துடன் மற்றொரு அரங்கில், கலைஞர் எப்போதும் அவர் விரும்பும் முரசொலி அலுவலகத்தில் உரையாடுவதுபோல் ஒரு செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஒரு அறையில் நவீன தொழில்நுட்பத்துடன் 3டி கேமராவில் பதிவு செய்த கலைஞரின் வரலாற்றுக் காவியமும், கலைஞர் வழியில் தொடரும் திராவிட அரசின் மக்கள் போற்றும் அரசின் சாதனைகளை விளக்கும் 3டி காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அரியப் புகைப்படங்கள்:

கண்காட்சியில் இடம்பெற்றுள்ள 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களில், ‘கலைஞர் எழுதிக்குவித்த இலக்கியங்கள்’ ‘தம் வீட்டை இலவச மருத்துவமனையாக்கிய கலைஞர்’ ‘கலைஞரின் தளபதி’ ‘முதல்வர் முத்தமிழறிஞரின் முத்திரைப் பதிவுகள்’ ‘கலைஞரின் திராவிடக் கட்டக்கலை மாண்புகள்’ ‘கல்வி தந்த ஆதவன்’ ‘உதயசூரியனும், இதய சூரியனும்’ ‘கலைஞரின் நாடகப் படைப்புகள்’ ‘கலைஞரின் குடும்பத்தினர் குறித்த அரிய புகைப்படங்கள்’ ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுடன் கலைஞர் இருக்கும் அரியப் புகைப்படம்’ என ஏராளமான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த புகைப்படங்களை பார்க்கும்போது கலைஞர் அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வாழ்க்கையில் எப்படி போராடி, தமிழக மக்களுக்கு சேவை ஆற்றினார் என்பதை நன்கு அறிய முடிகிறது.

இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் பார்வை:

மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியை பார்வையிட கடந்த 4ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் சென்றபோது, தி.மு.க. நிர்வாகிகள் அவரை அன்புடன் வரவேற்றனர். கண்காட்சியின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்வையிட்ட கே.எம்.கே. அவர்கள், கலைஞர் தன்னுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட புயல்களை சந்தித்து, அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்டு, கடுமையான உழைப்பின் மூலம் வெற்றிவாகை சூடினார் என்பதை அறிந்து வியப்பு அடைந்தார்.

 

கண்காட்சி குறித்து கருத்து தெரிவிக்கும் குறிப்பு புத்தகத்தில்,  தனது கருத்தை எழுதிய பேராசிரியர் அவர்கள், ‘காலம் உள்ள வரை கலைஞர் அவர்களின் கண்காட்சியைப் பார்த்து, பங்கேற்று, சுவைத்து, என்றும் நினைவில் நிற்கும்படியான காட்சியகங்களைக் கண்டு வியந்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ‘கலைஞர் அவர்களின் வாழ்வு மட்டுமின்றி, அவர் காலத்திற்குப் பின்னரும், இனி வருங்காலத்திலும், தமிழகம் எப்படியெல்லாம் இருக்கப் போகிறது என்பதையெல்லாம் கண் முன்னேயும், மனக் கண் முன்னேயும், கொண்டு வரும்படியான காட்சியகமாகத் திகழ்கிறது. கலைஞர் பற்றிய என்றும் நீங்காத நினைவலைகளை உருவாக்குவதற்கு பெரும் சிறப்போடு செய்திருக்கும் மாண்புமிகு சேகர் பாபு உள்ளிட்ட அனைவக்கும் நன்றியும், பாராட்டும், வாழ்த்தும் என்றும் உண்டு’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், தொண்டர் முகமது ரபி உள்ளிட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள், மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் உள்ளிட்டோரும் கண்காட்சியை கண்டு, வியப்பு அடைந்து பாராட்டு தெரிவித்தனர்.

இந்த கண்காட்சியை சென்னையில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். அத்துடன், மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர், மற்றும் பிற கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் கண்காட்சியை பார்வையிட்டு செல்கின்றனர்.

இதன் காரணமாக, கண்காட்சியை காண வருபவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஆயிரத்தை தாண்டி வருவதாக கண்காட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.  வரும் 10ம் தேதி வரை நடைபெறும் இந்த அற்புதமான 'காலம் உள்ள வரை கலைஞர்' தமிழகத்தின் சிற்பிக்கு நவீன கண்காட்சியகத்தை அனைத்துத் தரப்பு மக்களும் கண்டு ரசிக்க வேண்டும். வாழ்க்கையில் எத்தகைய போராட்டங்களை சந்தித்தாலும் அதனை துணிச்சலுடன் எதிர்கொண்டு, கலைஞர் அவர்கள் எப்படி வெற்றி பெற்று சாதனை புரிந்தார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தங்கள் வாழ்க்கையிலும் அதனை கடைப்பிடித்து, வெற்றிகளை குவிக்க வேண்டும்.

 

-            சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: