ரஷ்யாவில் அதிகமாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜித்துகள்....!
உலக மக்களிடையே அதிகம் கவர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாமிய மார்க்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. தற்போது உலகில் இரண்டாவது மிகப்பெரிய மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருகிறது. இஸ்லாமிய நெறிகள், போதனைகள் உலக மக்களை மிகவும் ஈர்த்து வருவதால் விரைவில் இஸ்லாம் உலகின் முதன்மை மார்க்கமாக மாறும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஏக இறைக் கொள்கை, மறுமை கொள்கை, மனிதநேயம், அனைத்து மக்களிடையே அன்பு செலுத்தி, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்பது போன்ற போதனைகள், இஸ்லாமியர்களை மட்டுமல்லாமல் பிற சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களையும் கவர்ந்து வருவதால், இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ளும் ஆவல் மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது உலகில் முஸ்லிம் தொகை அதிகம் கொண்ட நாடாக இந்தோனேஷியா இருந்து வருகிறது. இந்திய நாடு 25 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வாழும் இரண்டாவது மிகப்பெரிய முஸ்லிம் தொகை கொண்ட நாடாக இருந்து வருகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பிற நாடுகளிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு மக்களிடையே இஸ்லாமிய மார்க்கம் குறித்து அதிகம் அறிந்துகொள்ளும் ஆர்வம் மக்கள் மத்தியில் இருந்து வருவதால், இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சித்திரிக்கும் போக்கு தற்போது குறைந்து வருகிறது. இத்தகைய சூழநிலையில், ரஷ்யாவில் முஸ்லிம்கள் எப்படி வாழ்ந்து வருகிறார்கள். அங்கு இஸ்லாம் எந்த வகையில் மக்களை கவர்ந்து வருகிறது என்பதை அறிந்துகொள்வது சிறப்பாக இருக்கும்.
ரஷ்யாவில் அதிகரிக்கும் மஸ்ஜித்துகள்:
ரஷ்யாவில் தற்போது சுமார் 146 மில்லியன் அளவுக்கு மக்கள் தொகை இருந்து வருகிறது. இதில் 27 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்ற அங்குள்ள முஃப்தி கவுன்சில் தகவல்களை தெரிவிக்கிறது. அதாவது ரஷ்யாவில் தற்போது சுமார் 3 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரஷ்யாவில் கடந்த 20 ஆண்டுகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஸ்ஜித்துகள் மற்றும் மதரஸா இஸ்லாமிய பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன என்று ரஷ்ய முஃப்தி கவுன்சிலின் துணைத் தலைவர் ருஷான் அபியசோவ் தெரிவித்துள்ளார். "கடந்த 1917ஆம் ஆண்டு போல்ஷிவிக் புரட்சிக்கு முன்பு, ரஷ்யாவில் 15 ஆயிரம் மஸ்ஜித்துக்கள், மதரஸாக்கள் மற்றும் பிரார்த்தனை இடங்கள் இருந்தன. ஆனால், 1991-இல், 100 மட்டுமே எஞ்சியிருந்தன என்றும், வெறும் 20 ஆண்டுகளில் தாங்கள் நல்ல வசதிகளுடன் 8,000க்கும் மேற்பட்ட மஸ்ஜித்துக்களை உருவாக்கி புனரமைக்க முடிந்தது என்றும்" அவர் மேலும் கூறியுள்ளார்.
அதிபர் புதின் உறுதி:
இத்தகைய நிலையில், 20 ஆண்டுகளில் ரஷ்யா 8 ஆயிரம் பள்ளிவாசல்களை கட்டியுள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் மேலும் பல மஸ்ஜித்துகளை கட்ட இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். ரஷ்ய கூட்டமைப்பின் முஸ்லிம்களின் மத வாரியத்தின் தலைவரான முஃப்தி ரவில் கெய்னுடின் கருத்துப்படி, கடந்த 2018-இல் 25 மில்லியன் முஸ்லிம்கள் இருந்தனர். மக்கள் தொகையில் சுமார் 18 சதவீதமாகும். மத்திய ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நிபுணர்கள் ஆறு முதல் ஏழு மில்லியன் என மதிப்பிடுகின்றனர், இவர்களின் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்கள் ஆவார்கள். இதன்மூலம் ரஷ்யாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
பிற மக்களை கவரும் இஸ்லாம்:
கடந்த 20 ஆண்டுகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஸ்ஜித்துகள் கட்டப்பட்டு, மேலும் தொடர்ந்து புதிய பள்ளிவாசல்கள் கட்டுப்பட்டு வருவதன் மூலம், ரஷ்ய மக்களை இஸ்லாம் மிகப்பெரிய அளவுக்கு கவர்ந்து வருவது உறுதியாக தெரிகிறது. இஸ்லாமிய மார்க்கத்தின் நெறிகள், போதனைகள் ரஷ்யாவின் அனைத்துப் பகுதிகளிலும் மேலும் ஓளி வீசி, மக்கள் இதயங்களை வேகமாக தொடும் என்பதை இத்தகைய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக ரஷ்ய பெண்களிடையே இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், அவர்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் ஒவ்வொரு ரமலான் மாதத்தின்போது, அங்குள்ள மஸ்ஜித்துகள் நிரம்பி வழிந்து, தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் காட்சிகள், ஊடகங்களில் வெளியாகும்போது, அதை பார்க்கும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் செலுத்துகிறார்கள் என ஆய்வார்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இதன்மூலம், ரஷ்யாவில் மட்டுமல்ல, மிகவும் குறைவாக முஸ்லிம் தொகை கொண்ட நாடுகளிலும் கூட, விரைவில், முஸ்லிம்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்பது உறுதி.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment