Sunday, June 16, 2024

காயிதே மில்லத் விருது விழா...!

நாடாளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களுக்கு எதிராக பா.ஜ.க. மேற்கொண்ட வெறுப்பு பிரச்சாரம் வெற்றி பெறவில்லை....!

திருப்பத்தூரில் நடைபெற்ற  காயிதே மில்லத் விருது வழங்கும் விழாவில்.....இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் உரை...!

திருப்பத்தூர், ஜுன் 16- நாடாளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களுக்கு எதிராகவும், சமூக நீதிக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி செய்த பிரச்சாரம் நாட்டு மக்களிடம் எடுப்படவில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில், உள்ள காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை சார்பில், காயிதே மில்லத் விருது, சமுதாய சிற்பி விருது மற்றும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள்க்கு காயிதே மில்லத் விருது வழங்கி கவுரவித்து வாழ்த்து தெரிவித்தார்.

காயிதே மில்லத்தின் பெருமைகள்:

இதனைத் தொடர்ந்து விழாவில் சிறப்புரை ஆற்றிய முஹம்மது அபூபக்கர், மிகவும் சிறப்பான  நிகழ்ச்சி நடைபெறுவது உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சமயங்களை கடந்து அனைவரையும் கண்ணியப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துல்ஹாஜ் மாதத்தில் குறிப்பாக, தியாகத்தை நினைவுப்படுத்தும் இந்த மாதத்தில், மிகச் சிறப்பான நிகழ்ச்சியை காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை நடத்தியுள்ளது. 

இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) அவர்களின் தியாகங்களை நாம் எப்போதும் மறந்துவிட முடியாது. இப்படிப்பட்ட இஸ்மாயில் அவர்களின் பெயரை தாங்கி இருந்தவர் தான் நமது கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள். இளமை காலம் முதல் சமூகச் சேவையில் ஆர்வம் கொண்டு, கோடிஸ்வரின் மருமகனாக இருந்தாலும், கதர் ஆடை அணிந்துகொண்டு மிகவும் எளிமையாக இருந்தவர். மதராஸ் பிரசிடென்சி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 

காயிதே மில்லத் அவர்களின் சட்டமன்ற உரைகளை படிக்கும்போது, பல உண்மையானை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இன்று நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல், மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதம் இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றக் கூடாது என போராடி அந்த உரிமையை சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு வாங்கி தந்தவர்தான் காயிதே மில்லத் அவர்கள்,.  இதேபோன்று, இந்திய முஸ்லிம்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால், பாகிஸ்தானில் உள்ள இந்துக்களை கண்ணியமாக நடத்துங்கள் என்று அந்நாட்டு தலைவர்களுக்கு சொன்னவர் தான் காயிதே மில்லத் அவர்கள். சீனா போரின்போது, தனது மகனை போர்களத்திற்கு அனுப்ப தயார் என்று அறிவித்தவர் தான் காயிதே மில்லத் அவர்கள். 

இதேபோன்று, முஸ்லிம் லீக் என்ற இயக்கத்தை கலைக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டபோது, முஸ்லிம் லீக்கை கலைக்கும் உரிமை எனக்கு இல்லை என்றும், முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து குரல் எழுப்ப ஒரு இயக்கம் வேண்டும் என்று வாதாடியவர்தான் காயிதே மில்லத் அவர்கள். மிகவும் எளிமையாக வாழந்து சமுதாயத்திற்கு பாடுபட்டவர். முஸ்லிம்களின் கல்வி உரிமைகளை தடுக்கும் வகையில் பல முயற்சிகளை செய்தபோது, அதை தடுத்த நிறுத்தியவர். சென்னையில் இருந்து முகமதன் கல்லூரி என்ற பெயரை மாற்ற முயற்சி செய்யப்பட்டது. அதற்கு எதிராக குரல் கொடுத்து, முஸ்லிம்கள் நல்ல கல்வியை பெற வேண்டுமானால், சமுதாயம் கல்லூரிகளை திறக்க வேண்டும் என ஆலோசனைகளை கூறி, அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர். எந்த கல்லூரியின் பெயரை மாற்ற முயற்சி செய்தார்களோ, அந்த கல்லூரிதான் இப்போது காயிதே மில்லத் மகளிர் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வருகிறது. காயிதே மில்லத் பாலம் என பல பெயர்களை சூட்டி,  முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், காயிதே மில்லத் அவர்களை கண்ணியப்படுத்தினார். 

விகிதாசரம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடியவர் காயிதே மில்லத் அவர்கள். விகிதாசாரம் அடிப்படையில் இடஒதுக்கீடு இல்லாத காரணத்தால், சமுதாயம் மிகவும் பின் தங்கியுள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

பொருத்தமானவருக்கு விருது:

இத்தகையை சிறப்பு கொண்ட காயிதே மில்லத் அவர்களின் பெயரில், பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு விருது வழங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.ஜவாஹிருல்லா அவர்கள்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் இணைக்கமான முறையில் பழக்கும் குணம் கொண்டவர். நல்ல கல்வியாளர்.  ஜவாஹில்லா அவர்களுக்கு இந்த விருது வழங்குவது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இந்த விழாவில் அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டுள்ளார்கள். அவர்களுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் சிறப்பான முறையில் கண்ணியப்படுத்தியுள்ளார்கள். தமிழகத்தில் இருந்துவரும் இத்தகைய சமுதாய ஒற்றுமை நெறி, இந்தியா முழுவதும் தொடர வேண்டும். 

மோடியை நிராகரித்த மக்கள்:

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி, இந்திய முஸ்லிம்களுக்கு எதிராகவும், சமூக நீதிக்கு எதிராகவும், மதத்தை அடிப்படையாக கொண்டும் பேசினார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, முஸ்லிம் லீகின் அறிக்கை என விமர்சனம் செய்தார். முஸ்லிம்கள் வந்தேறிகள் என பேசினார். ஆனால், மோடியின் பேச்சு எடுப்படவில்லை. உத்தரப் பிரதேசத்தில் பா,.ஜ.க. படுதோல்வி அடைந்தது. அந்த மாநில மக்கள் மத வாதத்தை ஏற்கவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் மோடியை பெரும்பாலான மக்கள் நிராகரித்து இருப்பது உறுதியாக தெரிகிறது. 

அனைத்து தரப்பு மக்களிடம் நாம், அன்பு செலுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த பாரம்பரியம், நமது தலைவர்கள் காயிதே மில்லத், கலைஞர், காமராஜ் உள்ளிட்ட தலைவர்கள் உருவாக்கி பாரம்பரியம் ஆகும். இந்த பாரம்பரியத்தை நாம் தொடர் வேண்டும். 

இவ்வாறு கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பேசினார். 

விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எச்.அப்துல் பாசித், திமுக முன்னாள் எம்.பி. முகமது சகி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் தி.மு.அப்துல் காதர், நிறுவன தலைவர் ஜுபேர் அஹமத், பொதுச் செயலளார் முஹம்மத் கலீம், பொருளாளர் கே.ஆசிப் கான் மற்றும் நிர்வாகிகள், அனைத்து சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், இ.யூ.முஸ்லிம் லீக் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நகரங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: