நீட் தேர்வு முறையை ரத்து செய்யும் வரை போராட்டங்கள் தொடர வேண்டும்....!
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பேச்சு....!
சென்னை, ஜூன்19- நீட் தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது என்பதால், அதற்கு உடனே தடை விதிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வலியுறுத்தியுள்ளார்.
திராவிடர் மாணவர் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, இனியும் தேவையா நீட்? என்ற தலைப்பில் 18.06.24 அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்தியா கூட்டணியில் கட்சிகளின் தலைவர்கள், செல்வப்பெருந்தகை, முத்தரசன், பேராசிரியர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் கலந்து கொண்டு, இனியும் தேவையா நீட்? என்ற முழக்கத்தை மற்ற தலைவர்களுடன் இணைந்து எழுப்பினார்.
பின்னர், ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய முஹம்மது அபூபக்கர், நீட் தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரான ஒன்று என குறிப்பிட்டார். அவரது உரையின் முழு விவரம் வருமாறு:
வட மாநிலங்களில் விழிப்புணர்வு:
நீட் தேர்வு முறை ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் திட்டம். எனவே தான் தமிழகத்தில் நீட் தேர்வு முறைக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்து வருகிறது. நீட் தேர்வு முறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் முந்தைய அதிமுக அரசு, சரியான முயற்சிகளை எடுக்க தவறி விட்டதால் நீட் கொடுமை இன்னும் தொடர்கிறது. தற்போது நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வட மாநில மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்படுள்ளது. இதன் காரணமாக அவர்களும் நீட் தேர்வு முறைக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் நீட் தேர்வுக்கு எதிராக வட மாநிலங்களில் தற்போது போராட்டங்கள் வெடித்துள்ளன.
வட மாநில தலைவர்கள் அனைவரும், நீட் முறைக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த குரல் நாடு முழுவதும் பரவி வருகிறது.
நீட் ஒரு வியாபாரம்:
தமிழக மக்கள் நீட் தேர்வை ஏன் வேண்டாம் என சொல்கிறோம் என்றால், அது ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்பதால் தான், வேண்டாம் என்று சொல்கிறோம். 12வது தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நீட் தேர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது சரியா? இதன் காரணமாக தான் நீட் தேர்வு வியாபாரமாக மாறிவிட்டது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு, இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, அதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாயை ஈட்டி வருகின்றன.
இப்படி பயிற்சி பெற்று தேர்வுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் உளவியல் ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி, அதன்மூலம் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டு, பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். வசதி, வாய்ப்பு இல்லாத கிராமப்புற ஏழை மாணவர்கள் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் சேருவதில்லை.
12வது வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள், நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்புகளில் சேர முடியாமல், வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்பை முடித்து வருகிறார்கள். ஆனால் அத்தகைய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ தொழில் செய்ய வேண்டுமானால், மூன்று ஆண்டுகள் பயிற்சி மருத்துவராக பணியாற்ற வேண்டும் என ஒன்றிய அரசு தற்போது புதிய விதி கொண்டு வந்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஏழை, எளிய மாணவர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது நமது மாணவர்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய அநீதியாகும்.
ரத்து செய்யும் வரை போராட்டம்:
எனவே, நீட் தேர்வு முறையை முழுவதுமாக ரத்து செய்யும் வரை நமது போராட்டத்தை தொடர வேண்டும். போராட்டத்தை ஒருபோதும் நிறுத்தக் கூடாது. கைவிடக் கூடாது. நீட் தேர்வு முறை தமிழக மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. எனவே, நீட் தேர்வு முறை திட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெறும் வரை நாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும் நாளே, ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை பூர்த்தி செய்யப்படும் நாளாகும். மாணவர்களுக்கு சமூக நீதி கிடைக்கும் நாளாகும்.
இவ்வாறு முஹம்மது அபூபக்கர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு, நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment