Wednesday, June 12, 2024

சியா விதைகள் - தகவல்கள்....!

சியா விதைகள் - சில அரிய தகவல்கள்....!

மக்களில் பெரும்பாலானோர் மிகவும் சாதாரணமாக நினைக்கும் பல உணவுப் பொருட்களில் இயற்கையாகவே ஏராளமான நல்ல ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கின்றன. அந்த வகையில், சியா விதைகளையும் கூறலாம். இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் சியா விதைகள் இன்றி ஒரு கோடைகாலம் இருக்க முடியாது என்றே கூறலாம். கோடைக்காலங்களில், சாதாரணமாக சாலையோரங்களில் இருக்கும் பழச்சாறு கடைகளில் கூட, நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள். பார்ப்பதற்கு அளவில் சிறியதாக உள்ள சியா விதைகளில், நம் உடலுக்கும், மனதிற்கும் பலன் தரக் கூடிய ஏராளமான அம்சங்கள் நிரம்பியுள்ளன. 

சியா, சால்வியா ஹிஸ்பானிகா என்றும் அழைக்கப்படுகிறது.  இது லாமியாசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூலிகைத் தாவரமாகும் . இதன் தாயகம் வடக்கு குவாத்தமாலா மற்றும் தெற்கு மெக்சிகோவாகும். இப்போது ​​சியா, கொலம்பியா, ஆஸ்திரேலியா, பொலிவியா, பெரு, குவாத்தமாலா, மெக்ஸிகோ மற்றும் அர்ஜென்டினாவில் பயிரிடப்படுகிறது. கொலம்பியனுக்கு முந்தைய மக்கள் வலிமை, ஆற்றல் மற்றும் சகிப்புத்தன்மையைப் பெற 16-ஆம் நூற்றாண்டில் சியாவை உட்கொண்டனர். சியா விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. சியாவின் வேர்கள், இலைகள் மற்றும் கிளைகள் உட்பட தாவரத்தின் மற்ற பகுதிகள் சுவாச நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கு குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.

சியா விதைகளின் நன்மைகள்:

சியா விதைகள் அண்மை காலமாக ஒரு ஊட்டச்சத்து சக்தியாக பெரும் புகழ் பெற்றுள்ளன. அவற்றில் ஈர்க்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக உள்ளன. இந்த சிறிய விதைகளை பல்வேறு உணவுகள் மற்றும் தின்பண்டங்களில் சேர்த்துக்கொள்ள முடியும். சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது. நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது. இதனால், குடல் நலன் மேம்படும். தினசரி உங்கள் உணவுப் பட்டியலில் சியா விதைகள் இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம். குறிப்பாக, ரத்தத்தில் உள்ள டிரிகிளைசைரைடு கொழுப்பை இது கரைக்கிறது. உடல் உள்ளுறுப்புகளின் வீக்கம் குறைவதுடன், இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. உடலுக்கு நன்மை பயக்கும் ஹெச்டிஎல் கொழுப்பு அதிகரிக்கும்.

நமது எலும்புகளுக்கு வலுவூட்டக் கூடிய கால்சியம், புரதம், மேக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் சியா விதைகளில் இருக்கிறது. பால் பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு கால்சியம் சத்து கிடைக்க உதவியாக இருக்கும். உடலின் செல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடிய கிருமிகளை அழிப்பதில், சியா விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்துகளின் பங்கு அதிகமாகும். வயது முதிர்வை தடுக்கிறது. சியா விதைகளில் உயர் தரத்திலான புரதம் நிரம்பியிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆகவே, இதை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது நமக்கு பசி உணர்வு கட்டுப்படுகிறது. இதனால், இரவு நேர பசி அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிடும் ஆசை கட்டுப்படுத்தப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் சியா விதைகளில் 11 கிராம் நார்ச்சத்து, 4 கிராம் புரதம், 5 கிராம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை நிரம்பியுள்ளது. இது தவிர 18 சதவீதம் கால்சியம், 30 சதவீதம் மேக்னீசியம், 27 சதவீதம் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. வெறும் 137 கலோரிகள் மட்டுமே உண்டு. சியா விதைகளில் நிரம்பிய புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவிகரமாக இருக்கும். இதை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். சியா விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இது  உடலுக்கு நன்மை தரக் கூடியது. கோடை காலத்தில் நம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கும். சியா விதைகளை எடுத்துக் கொண்டால் வாதம், பித்தம் குறையும் என்றும், நீர்ச்சத்து அதிகரிக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.

வெறும் வயிற்றில் உண்பதால் பலன்:

“சியா விதைகள் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, அவை ஆற்றலை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள், ஒமேகா-3 மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்டு உங்களை முழுமையாகவும் திருப்தியாகவும் உணர வைக்கின்றன. கூடுதலாக, அவற்றின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வீக்கத்தை ஏற்படுத்தும் தொல்லைதரும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. சியா விதைகள் சிறிய ஆற்றல் மையங்கள். அவை தண்ணீரை கடற்பாசி போல ஊறவைத்து, உங்களை நிரப்பி, நீண்ட நேரம் உங்களை திருப்தியாக வைத்திருக்கும். இது உங்கள் வயிற்றில் விஷயங்கள் சீராகச் செல்லவும், மந்தமான நிலையைத் தடுக்கவும் உதவுகிறது" என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊட்டசத்து நிபுணர்   அலோக் சிங் தெரிவித்துள்ளார். 

வெறும் வயிற்றில் சியா விதைகளை உட்கொள்வது, ஊட்டச்சத்துக்கள் உங்கள் இரத்த ஓட்டத்திற்கு தெளிவான பாதையை வழங்குகிறது. தயிர், மிருதுவாக்கிகள் அல்லது சாலட்களில் கலக்கும்போது அவை இன்னும் பல நன்மைகளை வழங்குகின்றன. இருப்பினும், ஒரு தனி சியா விதை அமர்வுடன் உங்கள் நாளைத் தொடங்குவது, அவற்றின் ஊட்டச்சத்து தாக்கத்தை அதிகரிக்க மிகச் சிறந்த வழியாகும். உங்களுக்கு ஏற்கனவே செரிமான பிரச்சனைகள், ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், சியா விதைகளை உங்கள் உணவுகளில் சேர்ப்பதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. சிலருக்கு, அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் சிறிது வீக்கம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும். குறிப்பாக வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது இந்த பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  சியா விதைகள் மிகவும் உறிஞ்சக்கூடியவை. எனவே வயிறு பிரச்சனைகளைத் தவிர்க்க நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள். 

செரிமானம் மற்றும் எடை நிர்வாகத்தை ஆதரிப்பதில் இருந்து, இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பது மற்றும் வீக்கத்தைக் குறைப்பது வரை, இந்த சிறிய சியா விதைகள் உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஊட்டச்சத்து சக்தியாக இருந்து வருகின்றன.  எனவே சியா விதைகளை நாம் சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது. ஏக இறைவனின் படைப்புகளில் எதுவும் பயன் இல்லாத படைப்பே இல்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு, ஏக இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: