Friday, June 14, 2024

நாக்பூரில் வெற்றி விழா....!

மக்களவைத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி.....!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெற்றி விழா கொண்டாட்டம்....!! 

நாக்பூர், ஜுன்.15- நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்ட  இ.டி.முகமது பஷீர், எம்.பி.அப்துஸ் ஸமத் சம்தானி, கே.நவாஸ் கனி ஆகிய மூன்று பேரும் மகத்தான வெற்றி பெற்றார்கள். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை கொண்டாடும் வகையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், அம்மாநில இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், "ஜஷ்னே ஃபதே"  என்ற வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நாக்பூரில் சிறப்பு:

நாக்பூர் ஆசாத் நகர் தேகா நாய் பஸ்தி பிரதான சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மகாராஷ்டிரா மாநில இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் அஸ்லம் கான் முல்லா, தலைமை வகித்தார்.  இந்நிகழ்ச்சியில், முஸ்லிம் யூத் லீக் தேசிய துணைத் தலைவர் சுக்பீர் கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக், ​மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியில் போட்டியிட்ட இ.டி.முகமது பஷீர், 3 லட்சத்து 118 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கேரளாவின் பொன்னானி தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் எம்.பி.அப்துஸ் ஸமத் சம்தானி, 2 இலட்சத்து 23 ஆயிரத்து 760 வாக்குகள் வித்தியாசத்தில் தம்மை எதிர்த்து போட்டியிட்டவரை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட கே.நவாஸ் கனி, முன்னாள் முதமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். தற்போது, இ.யூ.​முஸ்லிம் லீக்கிற்கு மக்களவைல் 3 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 1 எம்.பி.யும் உள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை 5 ஆக உயரும். கேரளாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஹரீஸ் பீரன் முஸ்லிம் லீக்கின் மாநிலங்களவை எம்.பி.யாக விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவர் குறிப்பிட்டார். 

தொண்டர்கள் உற்சாகம்:

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மூன்று இடங்களிலும் இ.யூ.முஸ்லிம் லீக் வெற்றி பெற்றதையொட்டி, நாக்பூர் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த அற்புதமான வெற்றி மகாராஷ்டிராவில் உள்ள முஸ்லிம் லீக் தொண்டர்களிடையே உற்சாக அலையை உருவாக்கியுள்ளது, குறிப்பாக, நாக்பூரில் இ.யூ.முஸ்லிம் லீக். வரவிருக்கும் மகாராஷ்டிர சட்டமன்ற மற்றும் மாநகராட்சி தேர்தல்களில் முழு பலத்துடன் தேர்தல் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது. 

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்:

இந்நிகழ்ச்சியில், மாநில தலைவர் அஸ்லம் கான் முல்லா, இ.யூ.முஸ்லிம் லீக் வடக்கு நாக்பூர் தலைவர் இக்பால் அகமது அன்சாரி, முஸ்லிம் யூத் லீக் தேசிய துணைத் தலைவர் சுபைர் கான், இ.யூ.முஸ்லிம் லீக் நாக்பூர் துணைத் தலைவர் நசீர் ஃபர்ஹாத், மாநில பொருளாளர் காசி ரியாசுதீன், மற்றும், முகமது ஜியாவுதீன், சதாம் அஷ்ரபி, இர்ஷாத் அன்சாரி, இம்தியாஸ் அன்சாரி, ஷாபாஸ் கான், முகமது ஷாஹித், ஷாஹித் குரேஷி, இஸ்மாயில் அன்சாரி, ரஷீத் கான், வாஹித் குரேஷி, அனிஸ் ஷாகிம், ஷமிக் கான், அன்சாரி மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: