Saturday, June 29, 2024

தமிழகத்தின் முதல் மஸ்ஜித்...!

புதருக்குள் குவிந்து கிடக்கும் இஸ்லாமிய புதையல்....!

திருச்சியில் 1328 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தமிழகத்தின் முதல் மஸ்ஜித்...!!

'புதருக்குள் குவிந்து கிடக்கும் இஸ்லாமிய புதையல்' என்ற தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். புதர்களை தேடிச் சென்று ஆய்வு செய்தபோது, பல அற்புதமான இஸ்லாமிய புதையல்கள் கிடைத்தன என்பதற்கு சில வரலாற்றுச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகளாக இருந்து வருகின்றன. 

1964-65-ஆம் ஆண்டுகளில், 30 ஆண்டுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்பு சொத்துகளை மீட்டிவிடலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டாபோது, புகழ்பெற்ற இஸ்லாமிய எழுத்தாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மூத்த தலைவருமான மறைந்த நாவலர் எம்.எம்.யூசுப் சாஹிப் அவர்களின் ஆலோசனையில் பேரில், திருச்சியில், எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் அவர்கள் தலைமையில் ஒரு இளைஞர் பட்டாளம் திருச்சியில் உள்ள வக்பு சொத்துகள் மீட்கும் பணியில் இறங்கியது. இந்த இளைஞர் பட்டாளத்தில் இ.யூ.முஸ்லிம் லீகின் தற்போதைய தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் உட்பட பல இளைஞர்கள் இணைந்து வக்பு சொத்துகள் எங்கங்கே உள்ளன என தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். 

வக்பு சொத்துகள் மீட்புக்குழு:

'வக்பு சொத்துகள் மீட்புக்குழு' என்ற இந்த இளைஞர் பட்டாளத்தின் முயற்சி வீண் போகவில்லை. திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே ஒரு அற்புதமான இஸ்லாமிய புதையல் இருப்பதை அவர்கள் கண்டனர். இதேபோன்று, செயின் ஜோசப் கல்லூரி மற்றும் ஹோலிகிராஸ் கல்லூரி ஆகியவற்றிற்கு இடையே அந்த காலத்தில் செடிகள் வளர்ந்து காடு போன்று காட்சி அளித்தது. இந்த கட்டிற்குள் சென்று, செடி, கொடிகளை அகற்றி பார்த்தபோது, அங்கு ஒரு சிறிய மஸ்ஜித் இருப்பதை தெரியவந்தது. இப்படி, பல மஸ்ஜித்துகள், தர்காகள் மீட்டெடுக்கப்பட்டன. அன்றைய காலத்தில் இதன் சொத்து மதிப்பு சுமார் 120 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் அவர்கள் கணித்து, 120 கோடி ரூபாய் மதிப்புள்ள வக்பு சொத்துகளை மீட்டுவிட்டதாக தம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

30 ஆண்டுகள் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு சொத்துகளை மீட்டிவிடலாம் என்ற விதி, பின்னர் 60 ஆண்டுகள் என்றும், பின்னர் நிரந்தரம் என்றும் திருத்தம் செய்யப்பட்டது. வக்பு சொத்துகளை மீட்பு களம் இறங்கிய திருச்சி இளைஞர் பட்டாளத்தின் மூலம், திருச்சியில் மட்டும், பல அரிய இஸ்லாமிய வரலாற்று தகவல்களை பெற முடிந்தது. 

தமிழ்நாட்டில் இஸ்லாம்:

அரேபிய நாட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே, அரேபியாவிற்கும் தென்னிந்தியாவிற்குமான வணிக உறவு இருந்தது. வணிகர்கள் மூலம்தான் இஸ்லாம் தமிழ் நாட்டிற்கு வந்தது.  இந்தியாவிற்கும் அரேபியாவிற்கும் ஏற்பட்ட வணிக உறவு மூலமே மிளகும் இஞ்சியும் கிராம்பும் ஏலமும் லவங்கமும் மயில்பீலியும் தந்தமும் சந்தனமும் அகிலும் முத்தும் பவளமும் பட்டும் அரேபியா வழியாக ரோமுக்கும் ஐரோப்பாவரைகூட சென்றது.

இந்த வணிக உறவுதான் மனித உறவுக்கும் கலப்புக்கும் அடிப்படை. உலகம் முழுவதும் இனங்கள் கலப்பதும் அதன் வழியாய் ஒரு புதிய இனம் பிறப்பதும்தான் உலக வரலாறு. கடல் வணிகத்தால் உருவான இந்த ‘இந்திய அரேபியர்கள்’ கடற்கரை ஓரங்களில் வாழ்ந்தனர். சோழ நாட்டில் அரேபியர்கள் வணிகம் செய்ய வந்தபோது, அவர்களை வரவேற்பு மகிழ்ந்தது திருச்சி உறையூர். இந்த உறைவூர், அரேபியர்களின்  வர்த்தக தலைநகராக இருந்தது என்றும் கூறலாம்.

கல்லுப்பள்ளி எனும் மக்கா மஸ்ஜித்:

நபிகள் நாயகத்தின் காலத்திலேயே இஸ்லாம் தென்னகத்துக்கு வந்துவிட்டதால், கேரளாவைபோலவே, தமிழக இஸ்லாமியர்களும் மிகப் பழைமையானவர்கள் என்பதற்கான ஆதாரம் திருச்சியில் உள்ளது. அதில் ஒன்று திருச்சி கோட்டை ரயில்வே நிலையம் எதிரில் உள்ள கல்லுப்பள்ளி. மற்றொன்று ஹஜ்ரத் நத்ஹர் வலி தர்கா. இஸ்லாத்துக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பை வலிமையாகச் சொல்ல கிடைத்த ஆதாரமும் திருச்சியில்தான் உள்ளது. அதுதான் கல்லுப்பள்ளி. அதாவது கல்லால் கட்டப்பட்ட மஸ்ஜித் என்பது பொருள். இந்த கல்லுப்பள்ளிதான் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித் ஆகும். இதற்கு சான்றாக கல்வெட்டு ஒன்று அரேபிய லிபியில் அந்த மஸ்ஜித் முகப்பில் பெருங்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. 

அக்கல்வெட்டின்படி, ஹிஜ்ரி 116-ம் ஆண்டு, அதாவது கி.பி 738-ல் இந்த மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து 106 ஆண்டுகளில் இது கட்டப்பட்டுள்ளது என்றால், அதற்கு முன்பே இஸ்லாம் திருச்சியில் நிலைத்துவிட்டதை இந்த மஸ்ஜித் சொல்லாமல் சொல்கிறது. இந்த மஸ்ஜித்தை ஹாஜி அப்துல்லா கட்டியுள்ளதாக வரலாறு சொல்கிறது. இதன் மூலம் மன்னர்கள் வரும் முன்பே வணிகர்கள் வழியாகவும் மார்க்க அறிஞர்கள் மூலமாகவும் இஸ்லாம் தமிழ்நாட்டில் நிலைத்ததை திருச்சியின் கல்லுப்பள்ளி சொல்கிறது.  

அதாவது, 1300 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் தமிழ்நாட்டுக்கும், குறிப்பாக திருச்சிக்கும் வந்துவிட்டதன் அடையாளமாக இந்தக் கல்லுப்பள்ளி  பார்க்கப்படுகிறது. மிகவும் பராம்பரியமான, பழையான இந்த மக்கா மஸ்ஜித் தற்போது சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஜும்ஆ தொழுகையின்போது, சுமார் 300க்கும் மேற்பட்ட தொழுகையாளிகள் இந்த மஸ்ஜித்திற்கு வந்து தொழுகை நிறைவேற்றி செல்கிறார்கள். 1328 ஆண்டுகள் பழமையான, பராம்பரியமான இந்த மக்கா மஸ்ஜித் வளாகத்தில், அதனை கட்டிய 5 சஹாபாக்களின் அடக்கஸ்தலங்கள் உள்ளன. 

ஹஜ்ரத் நத்ஹர் வலி தர்கா:

‘ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா’ என்று கொண்டாடப்பட்ட சூஃபி ஞானியான நத்ஹர் வலி கி.பி 900ல் திருச்சிக்கு வந்தார். இவரோடு வந்த சீடர்களை கலந்தர் என்கிறது இஸ்லாம். இந்தியாவில் இஸ்லாம் பரவுவதற்கான காலச் சூழலும் கி.பி 7-9 நூற்றாண்டுகளில் நல்ல முறையில் இருந்தது. இங்கு வந்த சூஃபிகளோடு இங்கேயே இருந்த வேதாந்திகளும் சித்தர்களும் ஒத்துப்போவதை கவனித்த மக்களுக்கு இஸ்லாம் ஈர்ப்பாக இருந்தது. மேலும், சூஃபிகளின் தன்னலமற்ற பணி ஏழைகளைக் கவர்ந்தது. அதுமட்டுமல்ல இங்கிருந்த சாதிய முறைக்கும் வழிபாட்டில் இருந்த ஏற்றத்தாழ்வுக்கும் மாற்றம் தேடிய மக்கள் இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டனர். 

சமணர்கள் பெரும்பாலும் இஸ்லாத்தை ஏற்றனர். இதனால்தான் இன்றும் சமண பௌத்தர்கள் அதிகம் வாழ்ந்த நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், திருப்பரங்குன்றம் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கிறார்கள். சமணத்தில் புழங்கிய பல அழகிய தமிழ் சொற்கள் இஸ்லாமியர்களின் நாவில் புரள்வதை இன்றும் கேட்கலாம். சமணர்கள் தங்கள் வணங்கும் இடத்தை பள்ளி என்றனர். இஸ்லாமியர்கள் அதை பள்ளிவாசல் என்கின்றனர். சமணர்கள் பயன்படுத்திய நோன்பு, தொழுகை, பெருநாள், சோறு, ஆணம் போன்ற வார்த்தைகள் இஸ்லாமிய மக்களின் வாழ்வோடு கலந்துவிட்டதை கவனிக்கும்போதுதான் இந்த உண்மை புலப்படும். மைதிவழியில் வந்த இஸ்லாத்தை தமிழ் மன்னர்கள் வெறுக்காமல் அனுமதித்தனர். 

இப்படி ஓரளவு இஸ்லாமியர்கள் வாழ்ந்துகொண்டிருந்த திருச்சிக்கு சிரியா நாட்டில் பிறந்த ஹஜ்ரத் நத்ஹர் வலி வந்தார். இவரது காலம் கிபி 969 முதல் 1039 வரையாகும். காலத்தால் முற்பட்ட இறைநேசர் சூஃபி நத்ஹர் வலி அவர்களின் பெயரால் திருச்சி நகரையே நத்ஹர் நகர் என்று ஆற்காடு நவாப் அழைக்கும் அளவுக்கு இவர் புகழோடு இருந்தார். 

இஸ்லாமும் இந்தியாவும்:

தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் அரேபிய-தமிழ் இஸ்லாமியர்கள் கி.பி 916-ல் வாழ்ந்ததாக மஸ்ஊதி என்ற அரபு யாத்ரீகர் எழுதியுள்ளார். இஸ்லாம் மன்னர்களின் வாளால் கொண்டு வரப்பட்டு பரப்பப்படவில்லை.  இதனை இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர் ராஜாமுகமது தனது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். 'ஒரு அரசியல் சக்தியாக இஸ்லாம் இந்தியாவிற்குள் வருவதற்கு சில நூற்றாண்டுகள் முன்பே, இஸ்லாம் ஒரு மார்க்கமாக தென்னிந்தியாவை அடைந்துவிட்டது'  ஜவகர்லால் நேரு தனது டிஸ்கவரி ஆஃப் இந்தியா நூலில் குறிப்பிட்டுள்ளார். 

புதருக்குள் கிடக்கும் இஸ்லாமிய புதையல்களை தேடி ஆய்வு செய்யும்போது, இஸ்லாம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், மக்களின் மனங்களை வென்று அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி, அதன்மூலம் அவர்களோடு ஒன்றிவிட்டது என்பது உறுதியாக தெரியவருகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: