Wednesday, June 5, 2024

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி...!

 * நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த பிரச்சாரம் நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது

* தேசத்தை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்லும் வகையில் முதலமைச்சரின் பிரச்சாரம் இருந்தது. 

*  தமிழகத்தை போன்று பிற மாநிலங்களில் பிரச்சாரம் செய்யப்படவில்லை. 

* தமிழகத்தை போன்று, பிற மாநிலங்களில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. 

* தமிழகத்தில் 40 தொகுதிகளில் பெற்ற வெற்றி, இந்தியா அளவில் மிகப்பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். 

* முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு பேச்சுகளுக்கு முடிவு கட்டும் காலம் வந்துவிட்டது

இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி...!

சென்னை, ஜுன்.05-சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜித் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 129வது பிறந்தநாள் ஜியாரத்திற்குப் பிறகு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் முழு விவரம் வருமாறு:

வழக்கமான மரபு:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறந்த முறையில் சேவை ஆற்றிய ஊடகத்துறையினருக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர் காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாளில் அரசு சார்பில், மரியாதை செய்யும் மரபை மறைந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். அதன்படி ஒவ்வொரு ஆண்டும், அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு, நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்தார். ஆனால், இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் கூட்டத்திற்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டதால், அமைச்சர் பெருமக்கள் வந்து மரியாதை செய்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள இ.யூ.முஸ்லிம் லீக் கட்சிக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் குஞ்ஞாலிக்குட்டி உள்ளிட்ட இரண்டு பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என நம்புகிறோம். 

முதலமைச்சருக்கு பாராட்டு:

நடந்த முடிந்த 18வது நாடாளுமன்றத் தேர்தலில், நாடு முழுவதும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகள் சார்பிலும் பிரச்சாரம் நடந்தது. தமிழகத்தை பொருத்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த பிரச்சாரம் ஒரு கட்சிக்கான பிரச்சாரமாக இருக்கவில்லை. அந்த பிரச்சாரம்  தேசத்தை புதுப்பிக்கும் வகையிலும், தேசத்தை மாற்றி அமைக்கும் வகையிலும் இருந்தது. முதலமைச்சரின் பிரச்சார உத்திகள், அறிவிப்புகள், கருத்துகள் அனைத்தும் தேசிய அரசியலை மிகப்பெரிய அளவுக்கு மாற்றி அமைக்கும் வகையில் இருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

தமிழக முதலமைச்சரின் பிரச்சாரப் பேச்சுகள், உத்தரப் பிரசேதம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் மத்தியில் ஒளிப்பரபப்பட்டு, போட்டுக் காட்டப்பட்டதால், அங்கும் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு உருவாகியது. முதலமைச்சர் செய்த சிறந்த பிரச்சாரம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றி தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

தமிழகம் சிறந்த வழிகாட்டி:

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பாற்ற கூட்டணி அமைந்து தமிழகத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே சிறந்த வழிகாட்டியாக அமைந்தது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கூட்டணி எப்படி இருக்க வேண்டும், உருவாக்கி அமைய வேண்டும் என்பதை மிகச் சிறந்த முறையில் எடுத்துக் காட்டியது. இதே பாணியில், மற்ற மாநிலங்களிலும் பயணம் செய்து இருந்தால், தமிழகத்தை போல, மற்ற மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்து இருக்கும். மற்ற மாநிலங்களில் கூட்டணி முழுமையாக அமையவில்லை. அதன் காரணமாக இப்போது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நடைபெற்றுவரும் திராவிட மாடல் ஆட்சி என்பது, தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு பொருத்தமான ஆட்சி என்பதை நாடு முழுவதும் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி செய்து இருந்தால் நல்ல வெற்றி கிடைத்து இருக்கும். 

பிரதமர் வேட்பாளர்:

முதலமைச்சர் அவர்கள், முன்னெச்சரிக்கையாக, இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என்று உறுதியாக சொன்னார். இப்படி, மற்ற மாநிலங்களில் பிரச்சாரம் சரியாக செய்யவில்லை. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று பேச்சு வந்தபோது, அதை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும்.  அப்படி செய்து இருந்தால், தேர்தல் வெற்றி மிகவும் சிறப்பாக இருந்து இருக்கும்.  

தேர்தல் வெற்றி தொடர்பாக, பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள், பல திணிப்புகள் எல்லாம் பொய்யாக மாறிவிட்டன. தற்போது, பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள பா.ஜ.க., மீண்டும் ஆட்சி அமைக்கும் இடத்தில் இல்லை. இதன்மூலம் நாட்டிற்கு நல்ல தருணம், நல்ல காலம் பிறந்துள்ளது. 

தேர்தல் காலத்தில் இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக பேசப்பட்ட வெறுப்பு பேச்சுகள், பிரச்சாரங்கள், பரப்பப்பட்ட கருத்துகள், முஸ்லிம்களை மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்கள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தின. இத்தகைய பேச்சுகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ வேண்டிய காலம் வந்துவிட்டது. உலகில் சிறந்த நாடு இந்தியா என்பதை மீண்டும் எடுத்துக்கூறும் வகையில் இந்தியா கூட்டணி தனது பணிகளை செய்யும். இந்தியா கூட்டணியின் பணிகள் மூலம் நாட்டில் இனி மத வேறுபாடுகள் இருக்காது. சாதி வேறுபாடுகள் இருக்காது. மக்கள் அனைவரும் சகோதர பாசத்துடன் வாழ்வார்கள். அதன்மூலம் இந்தியா அனைத்துத் துறைகளிலும் வேகமான வளர்ச்சியை எட்டும் என்பது உறுதி. 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறினார். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: