Tuesday, June 4, 2024

காரணம் என்ன?

18வது மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய காரணம் என்ன?

இந்திய மக்கள், குறிப்பாக சிறுபான்மையின மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த, 18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் முஸ்லிம் சமுதாயத்தை குறிவைத்து தாக்கி பேசி, அதன்மூலம் அரசியல் இலாபம் பெறலாம் என நினைத்த பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. 400க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றுவோம் என்றும், மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்போம் என்றும் முழக்கங்களை எழுப்பிய பா.ஜ.க. தலைவர்கள், தற்போது பெரும்பான்மையை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தற்போது ஆட்சியில் தொடர முடியாது என்ற மிகவும் பரிதாபமான நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. 

சரி, இந்த 18வது மக்களவைத் தேர்தலில் எத்தனை முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என கொஞ்சம் ஆய்வு செய்தால், 24 பேர் மட்டுமே தேர்வாகி இருக்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த 17வது மக்களவையில் இடம்பெற்ற முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட 2 குறைவாகும். 2014ஆம் ஆண்டு 23 பேரும் 2019ஆம் ஆண்டு 26 பேரும் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

காரணம் என்ன?

18வது மக்களவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் 3 பேரையும் சேர்த்து, மொத்தம் 24 முஸ்லிம் எம்.பி.க்கள் மட்டுமே இருப்பார்கள். இது 17வது மக்களவையில்இருந்ததை விட இரண்டு பேர் குறைவு என்றாலும், நாட்டில் உள்ள 25 கோடி முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஏற்ப மிகவும் குறைவாகும். 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றாவது முறையாக மிகக் குறைந்து உள்ளது.  

2014 பொதுத் தேர்தலில் மக்களவையில் மிகக் குறைந்த முஸ்லீம் பிரதிநிதித்துவம் 23 ஆக இருந்தது. அதேசமயம் 1980-இல் மக்களவையில் 49 என்ற அளவில் முஸ்லிம் எம்.பி.க்கள் அதிக அளவில் இருந்தனர். 

மத அடிப்படையிலான மக்கள்தொகை அடிப்படையில், முஸ்லிம் சமூகம் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு தேர்தல் காலத்திலும், முஸ்லிம் வாக்காளர்கள் முடிவுகளை தீர்மானிக்கும் ஒரு தீர்க்கமான காரணியாக காணப்பட்டாலும், மக்கள் தொகையில் கணிசமான சதவீதத்தை உருவாக்கும் மாநிலங்களில் கூட, சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது.

2014-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, பெரும்பாலான எதிர்க்கட்சிகள், ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும், ஒரு துருவப் போட்டிக்கு பயந்து, முஸ்லிம் வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்காமல் ஒதுங்கிவிட்டதால், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்குக் காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள்,  முஸ்லிம் வேட்பாளர்களுக்கு குறைவான இடங்களை வழங்கியுள்ளன. இதுவும் முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைய காரணம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

கடந்த 17வது மக்களவைத் தேர்தலின்போது 34 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரஸ் கட்சி, இந்த முறை 18வது மக்களவைத் தேர்தலில், 19 பேருக்கு மட்டுமே வாய்ப்பை அளித்தது. சமாஜ்வாதி கட்சி நான்கு முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியது. இது கடந்த 2019ஆம் ஆண்டை ஒப்பிடும்போது சரிபாதியாகும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 13  முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்த நிலையில், நடந்த முடிந்த தேர்தலில் 6 பேருக்கு மட்டும் டிக்கெட் வழங்கியது. 

'முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக பா.ஜ.க. உருவாக்கிய போலி கதையின் காரணமாக, அரசியல் கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு குறைவான டிக்கெட்டுகளை வழங்குகின்றன' என்று அரசியல் ஆய்வாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். 

சில முக்கிய தகவல்கள்:

18வது மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும்,  இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 78 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. கடந்த 2019-இல் நடந்த 17வது மக்களவைத் தேர்தலில் மொத்தம் 115 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சி இந்த முறை 35 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. இது அனைத்துக் கட்சிகளை விட அதிகமாகும். கடந்த 2014-இல் அக்கட்சி 61 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. தற்போது அதன் எண்ணிக்கை பாதியாக குறைந்தது. இருப்பினும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அதிக முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

கவனமாக வாக்களித்த முஸ்லிம்கள்:

'நடந்த முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் மிகவும் கவனமாக வாக்களித்துள்ளனர். முஸ்லிம்கள் தந்திரமாக ஒரு படி பின்வாங்கி,  தங்களது பாதுகாப்பிற்காக வாக்களித்துள்ளனர்'  என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பா.ஜ.க.வின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும். சமுதாயத்தை நல்ல அமைதியாக  முறையில் வாழ முயற்சி செய்ய வேண்டும் என்ற நோக்க்ததில் வாக்களிக்கும்போது, முஸ்லிம்கள் தீர்க்கமான முடிவுகள் தேர்வு செய்தனர் என்றும், அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

எது எப்படி இருந்தாலும், மக்களவையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்துகொண்டே வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. நாட்டில் 25 கோடிக்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அப்போது தான், முஸ்லிம்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள், அவர்களின் பொருளாதார, சமூக வாழ்க்கை நிலைமை குறித்து, ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். தற்போது பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்து, ஆட்சியை பறிகொடுக்கும் நிலையில் உள்ளதால், முஸ்லிம்களிடம் இருந்த அச்சம் தணிந்துள்ளது. இனி வரும் காலங்களில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைக்கு இது மட்டுமே நம்மால் கூற முடியும் ஆலோசனையாக இருந்து வருகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: