இந்தியாவின் சொர்க்கப்
பூமி தமிழ்நாடு
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
-
இந்தியாவில் மொத்தம் 4 ஆயிரத்து 698 சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கொள்கை என்ற ரீதியில் பாசிச அமைப்புகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு. மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பதை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக வட மாநிலங்களில் அவ்வவ்போது வன்முறைகள் வெடிக்கின்றன. அந்த வன்முறைகளில் மோதல்கள் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகின்றன.
அண்மையில் நடந்துமுடிந்த 18வது மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க. மற்றும் அதன் தலைவர்கள் அனைவரும் தங்களுடைய பத்து ஆண்டு கால சாதனைகளை முன்வைத்து வாக்குகளை கேட்கவில்லை. மாறாக. இந்து-முஸ்லிம் விவகாரத்தை முன்வைத்து மட்டுமே வாக்குகளைச் சேகரித்தார்கள். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட சில பா.ஜ.க. மூத்த தலைவர்கள், முஸ்லிம்கள் மீது விஷத்தை கக்கினார்கள். முஸ்லிம்களை எந்தளவுக்கு சிறுமைப்படுத்த முடியுமோ, அந்தளவுக்கு சிறுமைப்படுத்தி அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். எனினும், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களால் முழு பலத்துடன் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.
வட மாநிலங்களில் தொடரும் வன்முறைகள்:
நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்த காரணத்தினால், வட மாநிலங்களில் ஒருசில பகுதிகளில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்து இருப்பது வேதனை அளிக்கிறது. குறிப்பாக, மத்தியப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், அரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்கள் மீது சிலர் அட்டகாசங்களை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனை தடுக்க வேண்டிய அரசுகள் கண்டுக் கொள்ளாமல் வேடிக்கைப் பார்க்கின்றன.
மத்திய பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் வீட்டிற்குள் மாட்டுக்கறி இருந்ததாக கூறி, அந்த வீட்டை இடித்து தள்ளியுள்ளது அம்மாநில பா.ஜ.க. அரசு. இதேபோன்று, முஸ்லிம் வணிகர் ஒருவர், கறி வணிகம் செய்வதாக குற்றம்சாட்டி, அவரது வணிக நிறுவனத்தை ஒரு கும்பல் சூறையாடியுள்ளது. இப்படி, பல சம்பவங்கள் மீண்டும் நாட்டில் அரங்கேறி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நாட்டில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பது உறுதியாக தெரிகிறது. எனினும், இந்த தீர்ப்பின் உண்மையை புரிந்துகொள்ளாமல், பாசிச அமைப்புகள் தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறையை நடத்தி வருகிறார்கள்.
ஆண்டனி பிளிங்கன் குற்றச்சாட்டு:
இப்படி, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், அது உண்மை தான் என அமரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உறுதிப்படுத்தியுள்ளார். 2023-ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுகிறது.
மத சமூகங்களுக்கு தனித்தனி சட்டங்கள் அமைப்பதற்குப் பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்துவர் மற்றும பழங்குடியின தலைவர்கள், சில மாநில தலைவர்கள் இந்த பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெறுப்பு பேச்சு:
இந்தியாவில் மதமாற்ற தடுப்புச் சட்டங்கள், வெறுப்பு பேச்சு மற்றும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்கள் இடிக்கப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், உலகெங்கிலும் உள்ள மக்களும் மத சுதந்திரத்தைப் பாதுகாக்க கடுமையாக உழைத்து வருகின்றனர் என்று அமரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மூலம் ஒரு உண்மை நமக்கு நன்கு தெரியவருகிறது. இந்தியாவில், சிறுபான்மையின மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கை எப்போதும் ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் வெறுப்பு பேச்சுகளை கடந்துச் செல்ல வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள்.
இத்தகைய வெறுப்பு பேச்சுகள், வன்முறைகள் ஒருசில மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், தென்னிந்தியாவில் பா.ஜ.க. மற்றும் பாசிச அமைப்புகளின் சூழ்ச்சி வெற்றி பெறவில்லை என உறுதியாக கூறலாம்.
தென்னிந்தியாவில், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா
உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது.
அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகளை விதைத்து, அரசியல் அறுவடையை பா.ஜ.க.
செய்து வருகிறது. எனினும், மிகப்பெரிய அளவுக்கு அவர்களால் இந்த மாநிலங்களில் மக்களிடையே
குழப்பத்தை ஏற்படுத்த முடியவில்லை. தென்னிந்திய மக்கள் எப்போதும் அமைதியை விரும்பும்
மக்களாகவே இருந்து வருகிறார்கள். எனவே அவர்கள் அனைத்து சமூக மக்களுடன் இணைந்து ஒற்றுமையுடன்
வாழ்ந்து வருகிறார்கள்.
வட மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் பாசிச அமைப்புகள் தங்களுடைய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வந்தாலும், தமிழகத்தில் அவர்களால் காலுன்ற முடியவில்லை என்றே கூறலாம். தமிழக மக்கள் எப்போதும் அமைதியை விரும்பும் மக்கள். சமூக நீதியில் உறுதியாக இருக்கும் மக்கள். மதசார்பற்ற கொள்கையில் பிடிப்புடன் வாழும் மக்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் போன்ற சமூக நீதி தலைவர்களின் பூமியான தமிழ்நாடு, அனைத்து மக்களையும் அரவணைத்துக் கொண்டு செல்லும் அற்புதமான பூமியாக இருந்து வருகிறது.
”வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு“ என்ற அழகிய முதுமொழிக்கு ஏற்ப, தமிழ்நாடு, அனைத்து மக்களையும் சாதி, மதம், பேதம் பார்க்காமல், வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் பாசிச அமைப்புகள் எவ்வளவு முயற்சி செய்தபோதும், மக்கள் மத்தியில் மத விஷத்தை இங்கு தூவ முடியவில்லை. அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் தமிழ்நாட்டில் அண்ணன் தம்பிகளாக, அக்கா தங்கச்சியாக, மாமான் மச்சானாக அன்பு செலுத்தி, சகோதர நேயத்துடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
பேரிடர் காலங்களில் ஓடோடிச் சென்று ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து உயிர்களை காப்பாற்றுகிறாகள். நிதியுதவி செய்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய முன்வருகிறார்கள். இந்த நேரத்தில், சாதி, மதம் போன்ற எண்ணங்கள் தமிழக மக்களிடம் ஏற்படுவதில்லை. அனைவரும் மனிதர்கள் தான் என்ற உயர்ந்த எண்ணம் மட்டுமே உள்ளத்தில் எழுந்து, சகோதர பாசத்துடன் அனைவரும் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் உதவிகளை, நிவாரணப் பொருட்களை வழங்கி மகிழ்ச்சி அடைகிறார்கள். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருந்து வருகின்றன.
எனவே, இந்தியாவின் சொர்க்கப் பூமி தமிழ்நாடு என
நாம் குறிப்பிடுகிறோம். இந்த சொர்க்கப் பூமியை நாடிதான், வட மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு
நாளும் ஆயிரக்கணக்கான ஏழை தொழிலாளர்கள் வந்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு
வாழ்வளிக்கும் பூமியாக தமிழ்நாடு இருந்து வருகிறது. இப்படி வட மாநிலங்களில் இருந்து
வரும் மக்கள் மத்தியில் சமூக நீதியை தமிழ்நாடு விதைத்து வருகிறது. இந்த சமூக நீதி கொள்கை
அந்த மக்களின் சிந்தனைகளில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
வட மாநிலங்களில் இந்து-முஸ்லிம் என்ற நிலைப்பாட்டில் இருந்துவந்த அம்மாநிலங்களைச் சேர்ந்த ஏழை மக்கள், தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்களில் நிலவும் சகோதரத்துவம், ஒற்றுமை, அமைதி, மற்றவர்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் பண்பு ஆகியவற்றைக் கண்டு வியப்பு அடைகிறார்கள். அதை தங்கள் வாழ்வில் கொண்டு வர அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இப்படி, மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் பூமியாக தமிழ்நாடு இருந்து வருகிறது. சகோதரத்துவத்தை விரும்பும் பூமியாக இருந்து வருகிறது. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பூமியாக இருக்கிறது. அனைவரின் வளர்ச்சியில் அக்கறைச் செலுத்தும் பூமியாக இருக்கிறது. உண்மையில் தமிழ்நாடு ஒரு சொர்க்கப் பூமிதான். இந்த சொர்க்கப் பூமியின் அமைதியை சீர்குலைக்க பாசிச அமைப்புகள் செய்யும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறாது. எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவர்களுக்கு பலன் கிடைக்காது. தமிழ்நாடு மக்கள் அமைதியை சீர்குலைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டார்கள். காரணம், தமிழ்நாடு சமூக நீதிக்கான பூமி. இந்தியாவின் சொர்க்கப் பூமி.
===========================
No comments:
Post a Comment