Friday, June 14, 2024

இவர்தான் ராகுல் காந்தி..!

 

இவர்தான் ராகுல் காந்தி..! ஒரு சிந்தனையாளரின் கணிப்பு..! 

நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. எனினும், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி, ஒன்றியத்தில் மீண்டும் அமர்ந்துள்ளது. தேர்தலில் 58 சதவீத மக்கள் பிரதமர் மோடிக்கு எதிராக வாக்குகள் அளித்து, தீர்ப்பு அளித்த நிலையில், தோல்விக்கு அவர் தார்மீக பொறுப்பு ஏற்று மீண்டும் பிரதமர் பதவியை ஏற்று இருக்கக் கூடாது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூட, அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், இந்திய மக்கள் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது தீர்ப்பை வழங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, வரும் மார்ச் மாதத்திற்குள் கவிழ்ந்துவிடும் என்றும், சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

அன்பு அரசியலின் தூதுவன்:

இதுஒருபுறம் இருக்க, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஒவ்வொரு நாளும் வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்தன. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள், முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக நாள்தோறும் கருத்துகளை கூறி, மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி வந்தார்கள். பா.ஜ.க. தலைவர்களின் இந்த வெறுப்பு பிரச்சாரம், நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தின. தேர்தல் முடிவுகள் கூட, பா.ஜ.க.வின் வெறுப்பு பிரச்சாத்தை, இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளன.

பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் வெறுப்பு பிரச்சாரம் செய்து அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெற முயற்சி செய்தார்கள். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துத்துவாவின் வெற்றிக்குப்பிறகு, எல்லா கட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இந்துத்துவா நிலைப்பாட்டை எடுத்தபோது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மட்டும் மதச்சார்பின்மை நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்தார்.

நாடு முழுவதும் வெறுப்பு அரசியல் புயலாக வீசியபோது ராகுல் காந்தி மட்டும், ஒவ்வொரு மேடையிலும் அன்பு அரசியலின் தூதுவனாக முழங்கி, நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கினார். பா.ஜ.க. தலைவர்களின் பிரச்சாரங்கள் மூலம், நாட்டில் வெறுப்பு சுனாமி வீசும்போது, அன்பைப் பேசுவதற்கான அசாத்திய தைரியம் ராகுல் காந்தியிடம் மட்டுமே இருந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மை மக்களிடம் இருந்து விலகி வெகுதூரம் போய் விட்டிருந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில், ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயண வாகனத்தை, அத்தகைய மக்கள் பிரிவுகளை நோக்கி செலுத்தியதன் மூலமாக, காங்கிரஸ் கட்சியை மக்கள் அடித்தளத்துடன் ஒன்றுசேர்த்தார். தனது இந்திய ஒற்றுமை பயணத்தின்போது, நாட்டு மக்களின் துன்பங்கள், துயரங்களை அறிந்துகொண்டு, அதற்கு எத்தகைய வகையில் தீர்வு காண வேண்டும் என்ற சிந்தனையை தன்னுள் உருவாக்கிக் கொண்டார். இந்தியாவில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களும், தங்களது உரிமைகளைப் பெற வேண்டும். இந்திய இளைஞர்கள் உண்மையான வளர்ச்சியை, முன்னேற்றத்தை அடைய வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்ற சிந்தனைகள் ராகுல் காந்தியின் உள்ளத்தில் இருந்துகொண்டே இருந்தன. அதன் காரணமாகதான், 18வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், வாக்குறுதிகளாக இடம்பெற்று இருந்தன.

பாசாங்கு இல்லாத நேர்மையான தலைவர்:

நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களிடையே, துளியும் பாசாங்கு இல்லாமல் ராகுல் காந்தி பழகினார். அன்புடன், பாசத்துடன் பேசினார். அவர்களிடம் ஆலோசனைக் கேட்டுக் கொண்டார். சாலையோர தள்ளுவண்டி வியாபாரி முதல், லாரி ஓட்டுநர் வரை, ஒவ்வொருவரையும், ராகுல் காந்தி சந்தித்து, அவர்கள் கூடவே பயணம் செய்து, அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என அறிய முயற்சிகளை மேற்கொண்டார். இளைஞர்கள் மத்தியில் பேசிய அவர், அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற விருப்பம் அவர்களிடம் இருப்பதை கண்டு, அதை, தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டு பேசினார். மகளிர் மேம்பாடு, சமூக நீதி ஆகியவற்றிற்கு ராகுல் காந்தி முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறார். எனவே தான், ராகுல் காந்தியை அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பி, அவர் மீது அன்பு செலுத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, ஆட்சியை கைப்பற்றவில்லை என்றாலும், பெரும்பாலான மக்கள், ராகுல் காந்தி பிரதமர் பொறுப்புக்கு வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, தங்களது வாக்குகளை அளித்து இருப்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இதன்மூலம் வெறுப்பு சந்தையில் அன்பின் கடையை திறந்த ராகுல் காந்தி, அந்த கடையில் அன்பின் வியாபாரத்தை மிக நன்றாக செய்து வருவது உறுதியாக தெரியவருகிறது.

யோகேந்திர யாதவ் கருத்து:

யோகேந்திர யாதவ், நாடெங்கும் மதிக்கப்படும் ஒரு சிந்தனையாளர். சமூக ஆர்வலர். நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர். டெல்லியில் உள்ள  Centre for the Study of Developing Societies (CSDS) என்ற சமூக ஆய்வு நிறுவனத்தின் மூத்த உறுப்பினர். இப்படிப்பட்ட சிந்தனையாளர், ராகுல் காந்தியின் தலைமைப் பண்புகள் குறித்து எத்தகைய பார்வையுடன் இருக்கிறார் என்பதை அறிந்தால், உண்மையிலேயே நமக்கு வியப்பு வரும்.  ராகுல் காந்தி குறித்து, யோகேந்திர யாதவின் முக்கியமான பார்வையாக பல அம்சங்கள் இருந்து வருகின்றன. ராகுல் காந்தி, தனது இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது சமூக நீதியின் தேவை குறித்து முழங்கினார் என்று குறிப்பிட்டுள்ள யோகேந்திர யாதவ், அதற்கு கணிசமான நல்ல பலன் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ராகுல் காந்தி செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்றும், 100 என்பது 200 ஆக உயர்வதற்கு தொடர்ச்சியான உழைப்பு வேண்டும் என்றும் யாதவ் கருத்து கூறியுள்ளார். ராகுல் காந்தியுடன் தாம் நேரில் பழகியதில்லை என குறிப்பிட்டுள்ள யோகேந்திர யாதவ், ஆனால் அவரது தொலைநோக்குப் பார்வை அடித்தட்டு மக்களை நேசித்த, நேருஜியை தமக்கு நினைவு படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

இளம் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் அனைத்து மக்களையும் ஆத்மார்த்தமாக நேசிக்கிறார். சமூக நீதி கருத்துக்களில் ராகுல் காந்தி ஓர் அம்பேத்கராக தனக்குத் தோன்றுகிறார். பொருளாதார நீதி கருத்துக்களில் ராகுல் காந்தி, சோசலிஸ்ட் ஆக தனக்குத் தோன்றுகிறார் என்றும் புகழாரம் சூட்டியுள்ள யாதவ், துளியும் பாசாங்கு இல்லாத நேர்மையான தலைவராக ராகுல் காந்தி உருவெடுத்துவிட்டார் என்றும் பாராட்டியுள்ளார்.

உண்மையான கருத்து:

நாட்டின் புகழ்பெற்ற சிந்தனையாளர் யோகேந்திர யாதவ், ராகுல் காந்தி குறித்து கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் கருத்துகளும், மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளோ, கருத்துகளோ இல்லை. யோகேந்திர யாதவ் மட்டுமல்லாமல், சமூக சிந்தனையார்கள் பலரும் ராகுல் காந்தியின் உழைப்பு, பண்பு ஆகியவற்றை புகழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தொடர்ந்து சந்தித்தபோதும், கொஞ்சம் கூட, மனம் தளராமல், உறுதியை இழக்காமல், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக அவர் செய்துவரும் பணிகள், ஆற்றிவரும் கடமைகள், நம்மை மட்டுமல்ல நாட்டு மக்களையும் வியப்பு அடையச் செய்துள்ளது. இப்படிப்பட்ட தொடர் தோல்விகள் கிடைத்தால் மற்றவர்கள், வேறு பக்கம் தாவி, தங்களது அரசியல் திசையை மாற்றிக் கொண்டு சென்று விடுகிறார்கள். அதற்கு நாட்டில் பலர் எடுத்துக்காட்டுகளாக உள்ளனர். ஆனால், தொடர் தோல்விகளில் எப்படி வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை தனது அழகிய செயல்கள் மூலம் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டு மக்களுக்கும், ராகுல் காந்தி சிறப்பான பாடத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறார். காலம் மிக விரையில் மாறும். ராகுல் காந்தியின் இலட்சியப் பயணத்தின் பலன்களை இந்திய மக்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் பெறுவார்கள்.

 

-             எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: