Monday, June 24, 2024

63 வயதில் கல்வியில் சாதனை....!

 "கல்வியில் ஆர்வம் கொண்டு 63 வயதில் பட்டம் பெற்று சாதனை புரிந்த சவூதி பெண்"  

இஸ்லாமிய மார்க்கம், கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கமாகும். ஆண், பெண் இருவரும் நல்ல கல்வி பெற வேண்டும் என அறிவுறுத்தும் அழகிய மார்க்கமாகும். கல்வி கற்பது என்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருவர் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். கல்வி ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்பாடுள்ளவனாகவும், ஒழுக்கமுடையனாகவும் மாற்றுகிறது. கல்வி மனிதனின் அறிவுக்கண்ணைத் திறப்பதோடு சொத்துக்களிலெல்லாம் மிகச் சிறந்த சொத்தாகவும் கருதப்படுகிறது. கல்வியென்பது மார்க்கம் மற்றும் உலகம் பற்றிய அறிவைப் பெறுவதாகும். நாம் கற்கக்கூடிய கல்வி இவ்வுலகிற்கு மட்டுமின்றி மறுமைக்கும் பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

இப்படி, இஸ்லாமிய மார்க்கத்தில் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில், இன்று கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் யாரென்றுப் பார்த்தால், பெரும்பாலும் முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்கள் கல்வி கற்பதில் மிக மிக பின் தங்கியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கல்வியைப் பற்றிய சரியான அடிப்படையறிவு இல்லாததேயாகும். 

இஸ்லாம் ஒரு போதும் பெண்களைக் கல்வி கற்க வேண்டாம் என்று  தடை போடவில்லை. கல்வி கற்கக் கூடாது என்றோ, தொழில் செய்யக்கூடாது என்றோ இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை. மாறாக கல்வி கற்க வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறது. எனவே பெண்களுக்கு கல்வியறிவு நிச்சயம் தேவை. அது முழு சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் என்பதை இஸ்லாம் பல நூற்றாண்டுகளாக சொல்லிக் கொண்டு இருக்கிறது. 

கல்வியில் ஆர்வம் செலுத்தும் பெண்கள்:

பெண் கல்விக்கு இஸ்லாமிய மார்க்கம் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து இருப்பதை தற்போதைய இளம் சமுதாயம் அறிந்து, அதன்மூலம் தெளிவுப்பெற்று வருகிறார்கள். மேலும், கல்வியில் ஆர்வம் செலுத்தி, சாதித்தும் வருகிறார்கள். சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களைப் போன்று, தாங்களும் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற ஆவல் இஸ்லாமிய பெண்கள் மத்தியில் தற்போது இருந்து வருகிறது. அதன் காரணமாக, உயர்கல்வியில் அவர்கள் ஆர்வம் செலுத்தி, அறிவியல், பொருளாதரம் உள்ளிட்ட துறைகளில் சாதித்து வருகிறார்கள். விஞ்ஞானிகளாக உயர்கிறார்கள். அதன்மூலம், நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்த்து வருகிறார்கள். 

ஒருசில பெண்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக தங்களுடைய கல்வியை இடையிலேயே கைவிடும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அதன் காரணமாக அவர்களின் உள்ளத்தில் ஒருவித சோகம் ஏற்படுகிறது. எனினும், நிலைமையை புரிந்துகொண்டு, தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை அவர்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள். நல்ல கல்வியை பெற வேண்டும் என்ற தங்களின் விருப்பம், கனவு நிறைவேறாமல் போனதை நினைத்து வேதனைப்படுகிறார்கள். இப்படி ஒருபோதும் வேதனைப்படவே கூடாது என சவூதி ஆரேபியாவைச் சேர்ந்த 63 வயதான இஸ்லாமிய பெண் ஒருவர், தனது அழகிய செய்கையின் மூலம் மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளார். 

சவூதி பெண் உம் அப்துல்லா:

சவூதி அரேபியாயைச் சேர்ந்த 63 வயதான உம் அப்துல்லா என்ற பெண்ணுக்கு, 17 வயதில் திருமணம் நடைபெற்றது. எனவே, அவர் தன்னுடைய கல்வியை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். திருமணம் முடிந்தபிறகு, அவருக்கு 11 குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக அமைக்க, உம் அப்துல்லா, ஒரு தாயாக மிகச் சிறந்த முறையில், தன்னுடைய கடமைகளை நிறைவேற்றினார். 

ஒரு மனைவியாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத் தலைவியாக, உம் அப்துல்லா தன்னுடைய கடமைகளை நிறைவாக செய்து வந்தபோதிலும், அவருடைய உள்ளத்தில் கல்வி மீது அதிக ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. திருமணத்திற்காக கைவிட்ட, கல்வியை மீண்டும் கற்று தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் அவருடைய உள்ளத்தில் நாள்தோறும் எழுந்துகொண்டே இருந்தது. இந்த எண்ணம் ஒரு கல்வி ஆசையாக, தாகமாக மாறியது. எனவே, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது உள்ளிட்ட பணிகளை, கடமைகளை நிறைவாக செய்த உம் அப்துல்லா, 42 ஆண்டுகளுக்கு முன்பு இடைநிறுத்திய கல்வியை மீண்டும் தொடர வேண்டும் என முடிவு செய்தார். 

தம்முடைய 63வது வயதில், கல்வி பெற வேண்டுமா என அவர் ஒருபோதும் தாழ்வாக நினைக்கவில்லை. 11 குழந்தைகளை வளர்ப்பதற்காக 42 ஆண்டுகளுக்கு முன்பு இடைநிறுத்திய கல்வியை பெற விரும்பிய அவர், பின்னர் ஹெயில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, தேர்ச்சிப் பெற்று பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளார். 

63 வயதில் கல்வியில் சாதனை:

17 வயதில் திருமணமான உம் அப்துல்லா, ஆரம்பத்தில் மெட்ரிகுலேஷன் வரை படித்தார். பின்னர் 59 வயதில் அவர் மீண்டும் படிப்பைத் தொடர்ந்து, ஹெயில் பல்கலைக்கழகத்தில், சேர்ந்து அங்கு நான்கு ஆண்டுகள் கல்வி பயின்று, பட்டம் பெற்றுள்ளார். 

தம்முடைய கல்வி உந்துலைப் பற்றி கருத்து கூறியுள்ள உம் அப்துல்லா, தாம், அல்லாஹ்வை ஒரு அறிவாளி பெண்ணாக சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.  மீண்டும் படிக்க ஆரம்பித்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள அந்த 63 வயதான பெண், "சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வை தாம் சந்திக்கும் போது, ​​தாம் அறியாத பெண்ணாகச் சந்திக்க விருப்பம் இல்லை என்றும், அல்லாஹ்வின் பார்வையில் அறிவுடையவர்களில் ஒருவராக எண்ணப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும்" கூறியுள்ளார். 

உம் அப்துல்லாவின் இந்த அழகிய கல்வி கதை, விடாமுயற்சி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றலை எடுத்துக்காட்டுகிறது, கல்வியைத் தொடர இது ஒருபோதும் தயங்கக் கூடாது. கல்வியை பெற தாமதம் இல்லை என்பதைக் காட்டுகிறது. உம் அப்துல்லாவின் ஒரு கல்விப் பயணம், வயது அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலாகும்.

முஸ்லிம் பெண்களின் கவனத்திற்கு:

63 வயதில் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ள சவூதி அரேபிய பெண், உம் அப்துல்லா, அந்நாட்டு பெண்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும், கல்வியின் முக்கியத்துவம் குறித்து அழகிய முறையில், பாடம் எடுத்துக் கூறியுள்ளார். இஸ்லாம் பெண்களுக்கு கல்வி பெற தடை விதிக்கவில்லை என்பதையும், திருமணம் முடிந்துவிட்டதால், கல்வியை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதையும், அவர் மற்ற பெண்களுக்கு தனது செயல் மூலம் போதித்துள்ளார். 

எனவே, இந்திய முஸ்லிம் பெண்கள், கல்வியில் தங்களது கவனத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும். ஒரு பெண் கல்வி பெற்றால், அந்த குடும்பமே, நல்ல அறிவுள்ள குடும்பமாக இருக்கும் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. வாழ்க்கையில் வாய்ப்பு கிடைக்கும்போது, அந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி, கல்வியை பெற்றுவிட வேண்டும். கல்வி பெற வயது ஒரு தடையே இல்லை என்பதை மனதில் உள்வாங்கிக் கொண்டு, வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். சவூதி அரேபிய பெண், உம் அப்துல்லாவின் கல்வி சாதனையை நினைத்து, இஸ்லாமிய உலகம் பெருமைப்பட வேண்டும். கடைசியாக, வாழ்க்கையில் தேடிக்கொண்டே இருங்கள். தொடர்ந்து முன்னேறுங்கள். வாழ்க்கை உங்களை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: