Thursday, June 20, 2024

ஒரு தியாகம்....!

தியாகத் திருநாளில், கிராமப்புற முஸ்லிம்கள்  மனிதநேயத்துடன் செய்த ஒரு தியாகம்....!

இந்தியாவில் கடந்த 17ஆம் தேதி தியாகத் திருநாள் எனப்படும் ஹஜ் பெருநாள், இஸ்லாமியர்களால் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அந்த திருநாளில் இஸ்லாமிய மக்கள் குர்பானி கொடுத்து, அதன் இறைச்சியை ஏழை, எளிய மக்களுக்கு பங்கீட்டு வழங்கி, தாங்களும் உண்டு மகிழ்ந்தனர். தியாகத் திருநாள், இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்பட்டாலும், இந்த திருநாள் மூலம் பொருளாதார ரீதியாக அதிக பலன் அடைவது சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த கிராமப்புற விவசாயிகள் தான் என்பது, நாம் அனைவரும் அறிந்த செய்தியாகும்.

தியாகத் திருநாள் தரும் செய்தி என்னவென்றால், மனிதன் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தியாகம் செய்ய தயங்கவே கூடாது என்பதாகும். இதன் காரணமாக தான், முஸ்லிம்களில் பெரும்பாலானோர், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, மனிதநேய நடவடிக்கைகளிலும், பணிகளிலும் கொஞ்சம் கூட தயங்காமல், உடனடியாக உதவிக்கரம் நீட்டி விடுவார்கள். மற்றவர்களுக்கு உதவ முன்வருவார்கள். இதற்கு  உலகம் முழுவதும் பல சம்பவங்களை உதாரணமாக கூறலாம். ஏன் இந்திய திருநாட்டில் கூட பல அழகிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏராளம் என கூறலாம்.

தியாகத் திருநாளில் ரயில் விபத்து:

கடந்த 17ஆம் தேதி திங்கட் கிழமை இந்தியாவில் தியாகத் திருநாள் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் தான் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே கஞ்சன்சங்கா விரைவு ரயில், மற்றொரு சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பயணிகள் உயிரிழந்தார்கள். 40 பேர் படுகாயமடைந்தனர்.

ரயில் விபத்து நடந்த இடம் ரங்காபானி என்ற கிராமத்திற்கு அருகே இருந்த இடமாகும். இந்த கிராமத்தில் வாழும் மக்களில், பெரும்பாலான மக்கள் முஸ்லிம்கள் ஆவார்கள். அன்று தியாகத் திருநாள் என்பதால், அங்குள்ள முஸ்லிம்கள் பெருநாள் தொழுகைக்கு தயாராகி, மஸ்ஜித்திற்கு சென்று சிறப்பு தொழுகையை நிறைவேற்றி, உலக அமைதிக்காக ஏக இறைவனிடம் துஆ செய்தனர்.

அப்போது தான், ஒரு பயங்கர சத்தம் அவர்களுக்கு கேட்டது. இந்த சத்தத்தை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த முஸ்லிம்கள், நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டதோ என அஞ்சினர். பிறகு தான், அது நிலநடுக்கம் இல்லை, பெரிய ரயில் விபத்து என அவர்களுக்கு தெரிந்தது. உடனே விபத்து நடந்த பகுதிக்கு முஸ்லிம்கள் விரைந்து ஓடோடி சென்றனர்.

பண்டிகையை தியாகம் செய்து மீட்புப் பணி:

தியாகத் திருநாளில் வீட்டில் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் சேர்ந்து மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாட வேண்டிய அவர்கள், கொண்டாட்டங்களை தியாகம் செய்து விட்டு, ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டு, உயிருக்கு போராடிய பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், ரயில் விபத்து குறித்த தகவல்களை ரயில்வே துறை மற்றும் மேற்கு வங்க மாநில அரசு உயரதிகாரிகளிடம் தெரிவித்தனர். காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். கிராமப்புற முஸ்லிம் மக்கள் கொடுத்த இந்த தகவலின் பேரில், மேற்கு வங்க அரசும், ரயில்வே துறையும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. இவர்களுக்கு உதவியாக முஸ்லிம் இளைஞர்கள் கடைசி வரை இருந்து மனிதநேய உதவிகளை செய்தனர்.

அத்துடன், அவர்கள் நின்று விடவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு புகலிடம் அளித்து, அவர்களுக்கு உணவு, தண்ணீர் ஆகியவற்றை கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். குறிப்பாக, முஸ்லிம் இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டு, மீட்புப் பணியில் ஈடுபட்டது, அவர்களிடம் இருந்த மனிதநேயத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

முதுகில் தூக்கிச் சென்று உதவி:

ரயில் விபத்து நடந்த இடம் மருத்துவமனைக்கு வெகு தொலைவில் இருந்த இடமாகும். எனவே, அங்கு மருத்துவ வாகனம் வருவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முஸ்லிம் இளைஞர்கள், விபத்தில் காயம் அடைந்த பயணிகளை தங்கள் முதுகுகளில் சுமந்து சென்று, அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். இதன்மூலம், பலரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

முஸ்லிம் இளைஞர்கள், மாணவர்கள், கிராம மக்கள் செய்த இந்த மனிதநேய செயலைக் கண்டு, சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த பயணிகள் வியப்பு அடைந்து, தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த மனிதநேய உதவி செய்தது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத முஸ்லிம் இளைஞர் ஒருவர், தியாகத் திருநாளில், கொண்டாட்டத்தை கைவிட்டு, விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தது மன நிறைவுடன், மிகுந்த மகிழ்ச்சியை தந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று, மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மற்ற இளைஞர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய மார்க்கம் தியாகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது என்பதை தங்களுடைய பணிகள் மூலம் உணர்ந்து கொண்டதாக கிராமப்புற முஸ்லிம் மக்கள் கூறியது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.

மம்தா பானர்ஜி பாராட்டு:

கஞ்சன்சங்கா விரைவு ரயில் விபத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட ரங்காபானி கிராம முஸ்லிம் மக்களின் மனிதநேய சேவை அறிந்து, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சேவையில் ஈடுபட்டு, பல உயிர்களை காப்பாற்றிய இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்க ஆவன செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

தயக்கமே வேண்டாம்:

வாழ்க்கையில் தியாகங்களை செய்ய கொஞ்சமும் தயங்க கூடாது. தியாகத் திருநாள் அன்று கொண்டாட்டங்களை தியாகம் செய்யாமல், ரங்காபானி முஸ்லிம் இளைஞர்கள் இருந்திருந்தால், ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்து இருக்கும். முஸ்லிம் இளைஞர்களின் தியாகம், பல உயிர்களை காப்பாற்றியது. இஸ்லாமிய மக்கள் எப்போதும் மனிதநேயம் கொண்டவர்கள். அனைத்து மக்களையும் நேசிப்பவர்கள். அன்பு செலுத்தக் கூடியவர்கள். இஸ்லாமிய மக்கள் குறித்து, சில அரசியல் கட்சிகள் செய்யும் பொய் பிரச்சாரங்களை தங்களது அன்பு மற்றும் மனிதநேய உதவிகள் மூலம் முறியடிப்பவர்கள். இதற்கு கஞ்சன்சங்கா விரைவு ரயில் விபத்து மீட்புப் பணியே சிறந்த எடுத்துக்காட்டு.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: