Sunday, June 30, 2024

நூல் மதிப்புரை....!

 நூல் மதிப்புரை


நூல் : தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் - 2024

வெளியீடு : முரசொலி,

180, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,

சென்னை - 600 034.

தொலைபேசி: 044-2817 9191

விலை : ரூ.3,000/-

முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், முரசொலி நாளிதழ் சார்பில் 'தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் - 2024' என்ற அற்புதமான அறிவுப் புதையல் நூல் வெளியிடப்பட்டுள்ளது. 544 பக்கங்கள் கொண்டு இந்த நூல், 'கலைஞர் நம் பொக்கிஷம்' என்ற தந்தை பெரியாரின் கட்டுரையுடன் தொடங்கி, 'தண்ணார் முழு நிலவே - தட்டாமல் நீ வந்துவிடு' என்ற முரசொலி செல்வம் எழுதியுள்ள கட்டுரையுடன் நிறைவு பெறுகிறது. 

பேரறிஞர் அண்ணா, இனமானப் பேராசிரியர், முரசொலி மாறன், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் எழுதியுள்ள கட்டுரைகளுடன், 'கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன்' என்று கலைஞர் அவர்கள்  கடந்த 23.09.1992-ல் முரசொலியில் எழுதிய கடிதமும் நூலில் இடம்பெற்று, நூலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. 

அத்துடன் 'கட்சித் தலைவர்களின் பார்வையில் கலைஞர்' என்ற பகுதியில், கி.வீரமணி, இரா.நல்லகண்ணு, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், கே.எம்.காதர் மொகிதீன், எம்.எச்.ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகிய தலைவர்கள்,  கலைஞர் அவர்களைப் பற்றி எழுதியுள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் சிந்தனையை தூண்டும் வகையில் அமைந்து இருக்கின்றன என்றால் அது மிகையாகாது. 

'பத்திரிகையாளர்களின் பார்வையில் கலைஞர்' என்ற பகுதியில், இடம்பெற்றுள்ள 21 கட்டுரைகளும் கலைஞரின் எழுத்துப் பணி, பத்திரிகை துறை மீது அவர் கொண்டிருந்து ஈடுபாடு, அயராத உழைப்புடன் கூடிய ஊடகப் பணி ஆகியவற்றை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறி, இளம் பத்திரிகையாளர்களுக்கு ஒரு அற்புதமான ஊடகப் பாடத்தை சொல்லி தருகின்றன.  

'கலையுலகினர் பார்வையில் கலைஞர்" 'கவிஞர்களின் பார்வையில் கலைஞர்' 'கல்வியாளர்களின் பார்வையில் கலைஞர்' 'உடன்பிறப்புகளின் பார்வையில் கலைஞர்' 'இளைஞர்கள் பார்வையில் கலைஞர்' 'பாசறையில் தொகுத்த முத்துக்கள்' 'நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்' என்ற மற்ற பகுதிகளில் கிட்டத்தட்ட 66 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்டுரைகளில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவிப்பேரரசு வைரமுத்து, நீதியரசர் கே.சந்துரு, உள்ளிட்டோர், கலைஞர் அவர்களைப் பற்றி எழுதியுள்ள ஒவ்வொரு வரிகளையும் படிக்கும்போது, தனது தனித் திறமையால், ஒவ்வொரு துறையிலும் கலைஞர் அவர்கள் எப்படி, கோலாச்சி மிகப்பெரிய அளவுக்கு சாதனை புரிந்தார் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கு கிடைக்கிறது. 

நூலின் பல்வேறு பகுதிகளில், கலைஞர் அவர்களின் அழகிய சிந்தினையை தூண்டும் பொன்மொழிகள் இடம்பெற்று, நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. அத்துடன், நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரைகளுக்கும், அற்புதமான புகைப்படங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை இடம்பெறச் செய்த,  நூலை உருவாக்கிய முரசொலி குழுவினரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். 

மேலும்,  நூலில், சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 'கலைஞர் அவர்களின் திருவுருவப்படம் திறப்பு', திருவாரூர் மாவட்டம் காட்டூரில், 'கலைஞர் கோட்டம் திறப்பு', மதுரையில் 'கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு', சென்னை கிளாம்பாக்கத்தில் 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறப்பு', சென்னை மெரினாவில் 'கலைஞர் நினைவிடம் திறப்பு', மதுரையில் 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு' என பல்வேறு புதிய திட்டங்கள், பணிகள் ஆகியவை தொடர்பான செய்திகள், மனதைக் கவரும் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் கண்டிப்பாக படித்து பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் முரசொலி நிர்வாகம் மிக அழகிய முறையில் இந்த 'தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் - 2024' என்ற நூலை வெளியிட்டு இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

மறைந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள் குறித்து எவ்வளவு எழுதினாலும் அது குறைவு என்றே கூற வேண்டும். 544 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தகவல்களும், கருத்துகளும், தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பயன் அளிக்கும் செய்திகளாக உள்ளன. 

மிகவும் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலை, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்களில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும். அதன்மூலம் லட்சக்கணக்கான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கலைஞர் அவர்களை குறித்தும், தமிழகத்திற்கும் தமிழர்களின் நலனுக்காக கலைஞர் அவர்கள் எப்படி பணியாற்றினார், உழைத்தார் என்பது குறித்தும் அறிந்துகொள்ள நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், பள்ளி, கல்லூரி நூலகங்களிலும் இந்த நூலை இடம்பெறச் செய்தால், தமிழக மாணவச் சமுதாயமும், இளைஞர்களும் கலைஞர் அவர்கள் குறித்து, அரிய செய்திகளையும் தகவல்களையும், விளக்கங்களையம், பெற முடியும் என உறுதியாக கூறலாம். 

'தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் - 2024' என்ற இந்த நூலை மற்ற நூல்களைப் போன்று சாதாரண நூல் கிடையாது. பல அரிய தகவல்களைக் கொண்ட ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகும். மறைந்த முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களை குறித்தும், அவரது ஆளுமை திறன், அவரது உழைப்பு, அவரது சாதனைகள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. 

- ஜாவீத்


No comments: