Wednesday, June 5, 2024

இரண்டு வெற்றிகள்....!

ஒரு தன்னம்பிக்கையான வெற்றி, ஒரு அவமானமான வெற்றி....!

இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 18வது மக்களவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜுன் ஒன்றாம் தேதியுடன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகளும் ஜுன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த தேர்தலில், எந்த கட்சியும் பெரும்பான்மை பலத்தை பெறவில்லை. ஆளும் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றி, முதலில் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது.

18வது மக்களவைத் தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல் என்றே கூறலாம். கடந்த பத்து ஆண்டுகளில் பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சி செய்தபோது, ஏராளமான அதிகார அத்துமீறல்கள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டன என்றும், எதிர்க்கட்சிகளை நசுக்கும் வகையில் அவற்றை ஒன்றிய ஆட்சியாளர்கள் இயக்கியதாகவும் புகார்கள் இருந்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்களில் ஓரளவுக்கு உண்மை இருக்கவே செய்கிறது. இதையடுத்து, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற இலட்சியத்துடன் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் தொடங்கி, நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் அன்பை விதைத்தார். இந்த நடைப்பயணம் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது நல்ல பலனை அளித்துள்ளது. 

தன்னம்பிக்கையான வெற்றி:

ஒன்றியத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மிகப்பெரிய அளவுக்கு சாதனைகள் எதையும் செய்யவில்லை. மாறாக வெற்று முழக்கங்கள்தான் அடிக்கடி, இருந்து கொண்டே இருந்தன. எதிர்க்கட்சிகளின் குரல்களை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஊடகங்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துகொண்டு, பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சியை செய்தது. சிறுபான்மையின மக்கள் மீது வெறுப்பு ஏற்படுத்தும் வகையில், பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

இத்தகைய சூழ்நிலையில், 26 கட்சிகளை ஒருங்கிணைந்து, இந்தியா கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கின. இந்த கூட்டணியை உருவாக்க முதன்முதலாக முயற்சிகளை மேற்கொண்ட, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பின்னர் கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பா.ஜ.க. அணியுடன் இணைந்துகொண்டார். கூட்டணியில் இடம்பெற்ற மற்றொரு கட்சியான திரிணாமுல் கட்சி கட்சியும் அடிக்கடி கூட்டணிக்கு நெருக்கடிகளை தந்துகொண்டே இருந்தது. இப்படி பல நெருக்கடிகளை இந்தியா கூட்டணி சந்தித்துக் கொண்டே இருந்தது. 

அத்துடன், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை முற்றிலும் சீர்குலைக்கும் வகையில், அக்கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. தேர்தல் காலத்தில் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்தது. எனினும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நம்பிக்கை இழக்காமல், மக்கள் மத்தியில் தங்களது பிரச்சாரங்களை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தனர். டெல்லி, ஜார்க்கண்ட ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் முறைகேடுகள் புகார்களின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டு அணிகளாக உடைக்கப்பட்டன. 

இப்படி, பல்வேறு சுனாமிகளை இந்தியா கூட்டணி சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனினும் இந்தியா கூட்டணி நம்பிக்கை இழக்காமல், நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையுடன், கடுமையான உழைப்பு அளித்து தேர்தலை சந்தித்தது. இப்படி, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, ஒரு கம்பீரமான, தன்னம்பிக்கையான வெற்றியை இந்தியா கூட்டணி தற்போது பெற்றுள்ளது. 

இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. கூட்டணியின் முக்கிய கட்சியான தி.மு.க. 22 இடங்களில் நின்று, 22 இடங்களிலும் வெற்றிவாகை சூடியுள்ளது. அத்துடன், இந்தியா கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

அமலாக்கத்துறை, வருமானவரி துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகள் தந்த நெருக்கடிகளை சந்தித்த இந்தியா கூட்டணி,  232 இடங்களை பெற்று இருப்பதை சாதாரண வெற்றி என கூற முடியாது. இது ஒரு வரலாற்று வெற்றி என்றே கூற வேண்டும். தேர்தல் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், எந்தந்த திட்டங்களை நிறைவேற்றுவோம் என கூறி வாக்குகளை சேகரித்தார்கள். மத ரீதியாக பிரச்சாரங்களை அவர்கள் செய்யவில்லை. மக்கள் மத்தியில், குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி செய்யவில்லை. வெறுப்பை விதைக்கவில்லை. இப்படி, ஒரு தன்னம்பிக்கையுடன் மக்களை சந்தித்த இந்தியா கூட்டணி, தற்போது ஆட்சிக்கு வர முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. எனினும், இந்திய அரசியலில் எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நிகழும் என்பதால், இந்தியா கூட்டணி நம்பிக்கையுடன் இருந்து வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க சற்று குறைவான இடங்களை பெற்று இருந்தாலும், அந்த கூட்டணியின் வெற்றி, ஒரு தன்னம்பிக்கையான வெற்றி என்றே இந்திய மக்களின் கருத்தாக இருக்கிறது.  

அவமானமான வெற்றி:


ஒருபுறம், இந்தியா கூட்டணி தன்னம்பிக்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. ஆனால், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சி அமைக்கும் அளவுக்கு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், அந்த கூட்டணியின் வெற்றி என்பது அவமானமான வெற்றியாகும். இந்த தேர்தலில் மக்கள் சொல்லியிருக்கும் தீர்ப்பு என்பது, பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும், பிரதமராக வரக் கூடாது என்பதேயாகும். கடந்த பத்து ஆண்டுகளாக ஒன்றியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., தனது சாதனைகள் அனைத்திற்கும், பிரதமர் மோடியை மட்டுமே முன்னிலைப்படுத்தி வந்தது. 'மோடியின் வாக்குறுதி' போன்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. 'மோடி, மோடி, மோடி' என்ற முழக்கங்களை ஒவ்வொரு நாளும் நாட்டில் ஒலித்துக் கொண்டே இருந்தன. இந்திய ஊடகங்கள் அனைத்தும் நாள்தோறும் மோடியின் புகழை மட்டுமே பாடிக் கொண்டே இருந்தன. எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்துகொண்டே இருந்தன. 

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பல கட்சிகள் இருந்தாலும், அந்த கட்சிகளுக்கு உரிய மரியாதையை பா.ஜ.க. தரவில்லை. அந்த கட்சிகளை பிளப்படுத்தும் வகையில் அரசியல் சித்து விளையாட்டுகளை பா.ஜ.க. செய்துகொண்டே இருந்தது. 18வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்த பிரச்சாரம், மிகவும் கேவலமான முறையில் இருந்தது. 

கடந்த பத்து ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு செய்த சாதனைகளை கூறி நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாக்குகளை சேகரிக்கவில்லை. மாறாக, இந்து-முஸ்லிம் என்ற பாணியில் அவர்களின் பிரச்சாரம் இருந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம், பாகிஸ்தான், பொது சிவில் சட்டம், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும், எதிர்க்கட்சிகள் நடனம் ஆடும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் உங்களை வங்கிப் பணத்தை எடுத்துக் கொள்வார்கள் என்ற பாணியிலேயே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 

அத்துடன், ஒன்றிய அரசின் அனைத்து அமைப்புகளும் தங்களுடைய கட்டுப்பாட்டில் பா.ஜ.க. ஆட்சியாளர்கள் வைத்துக் கொண்டனர். அதிகார பலம், பண பலம், மத ரீதியான தாக்குதல்கள், எதிர்க்கட்சிகளை உடைக்கும் போக்கு, ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சாரம் செய்யும்போது, அந்த மாநிலத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக கொண்டு வருவோம் என்ற பிரச்சாரம்,  அதிகமான தேர்தல் நடத்தை விதி மீறல்கள், இப்படி அனைத்தையும் செய்துதான் தற்போது பா.ஜ.க. வெற்றி பெற்று இருக்கிறது. பா.ஜ.க. வெற்றி பெற்று இருந்தாலும், கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றதைப் போன்று, இந்த முறை பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறவில்லை. இதன்மூலம், நாட்டு மக்கள் பா.ஜ.க.வை நிராகரித்து விட்டார்கள் என்பதே தேர்தலின் தீர்ப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக, நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்பதே மக்கள் அளித்த தீர்ப்பாக உள்ளது. 

அதிகார பலம், பண பலம் போன்ற அனைத்தையும் வைத்துக்கொண்டு, மீண்டும் ஆட்சியை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றி இருப்பதால்தான், அதை அவமானமான வெற்றி என அரசியல் நோக்கர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களின் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்ட தலைவர்கள் கூட, பா.ஜ.க. பெரும்பான்மை பலத்தை பெறாத காரணத்தால், அதற்கு பொறுப்பு ஏற்று, மோடி பதவி விலக வேண்டும் என்றும் மீண்டும் பிரதமர் பதவிக்கு வரக் கூடாது என்றும் கருத்துகளை கூறி வருகிறார்கள் இந்த தேர்தலில் மக்கள் மோடிக்கு எதிராக தீர்ப்பு அளித்து இருக்கிறார்கள் என்றும் அரசியல் விமர்சர்கள் கருத்து கூறி வருகிறார்கள். 

அவமானமான வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, ஒன்றியத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்காது என்றும் இப்போது சில அரசியல் விமர்சர்கள், கருத்துகளை கூறி வருகிறார்கள். அரசியலில் எப்போது வேண்டுமானாலும் காட்சிகள் மாறும். எனவே, இந்திய மக்களுக்கு பல நகைச்சுவையான, அதிரடி திருப்பங்களை கொண்ட காட்சிகளை அடிக்கடி காணக் கூடிய வாய்ப்புகள் இனி தொடர்ந்து நிறைய கிடைக்கும். அதன்மூலம் தன்னம்பிக்கையான வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி, விரைவில் ஒன்றிய ஆட்சிக் கட்டிலில் அமரும் நாள் வெகு தொலைவில் இல்லை என அரசியல் கலை வித்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: