பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி ஓராண்டு கூட நிலைக்காது....!
பா.ஜ.க. மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து...!!
டெல்லி, ஜுன்,11- நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறாமல், மோடி ஆட்சிக்கு வந்ததது மிகப்பெரிய தவறு என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ள அவர், மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று, பா.ஜ.க. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த நேர்காணலில் மோடி பேசிய சுப்பிரமணியன் சுவாமி, பதவி ஆசை காரணமாகவே மோடி, மீண்டும் பிரதமராக 3வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டு இருப்பதாக சாடியுள்ளார். பா.ஜ.க.விற்கு தொந்தரவு கொடுத்த எதிர்க்கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டும், ஜால்ரா போடும் ஆட்களை இணைத்து கொண்டும், மோடி ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருப்பதாக சுவாமி விமர்சனம் செய்துள்ளார். தான் ஆரம்பத்தில் இருந்தே மோடிக்கு எதிராக கருத்து கூறி வருவதாக குறிப்பிட்டுள்ள சுவாமி, எனவே, அமைச்சரவையில் சேர எனக்கு விருப்பம் இல்லை என்றும், மோடிக்கு எதிராக தாம் இருப்பதற்கு பல முக்கிய காரணங்கள் உண்டு என்றும் அதை இப்போது வெளிப்படையாக சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.
பா.ஜ.க. தோல்வி அடையும் என தெரியும்:
நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. போட்டியிட்டால் தோல்வி அடைந்துவிடும் என தமக்கு ஏற்கனவே நன்றாக தெரியும் என்று தெரிவித்துள்ள அவர், எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார் என்று கூட தாம் ஏற்கனவே கணித்து இருந்ததாகவும், அதன்படிதான் தற்போது தேர்தல் முடிவுகள் வந்துள்ளன என்றும் கூறியுள்ளார். ஆனால் மோடி ஆதரவாளர்கள் 400 இடங்கள் என முழக்கங்களை எழுப்பிக் கொண்டு இருந்தார்கள். அது நடக்கவில்லை. எனவே, சில கட்சிகளை பிடித்துகொண்டு, பெரும்பான்மை பலத்தை அடைந்து ஆட்சியை மோடி பிடித்துள்ளார் என்றும் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.
மோடி ஆட்சி நீடிக்காது:
பா.ஜ.க.வை கண்டுக் கொள்ளாமல், பா.ஜ.க.வை எதிர்த்தவர்களை அரவணைத்துக் கொண்டு, மோடி தற்போது செயல்பட்டு வருகிறார். யார் வந்தாலும் பரவாயில்லை என்ற பாணியில் மோடி ஆடசி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளார். எனவே இந்த அரசு நிலைத்து நிற்காது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மோடி அரசு வீழ்ந்துவிடும் என நினைக்கிறேன். மோடி தலைமையிலான .கூட்டணி அரசு ஐந்து ஆண்டு கண்டிப்பாக இருக்காது.
இந்துத்துவா குறித்து மோடி பேச முடியாது:
பா.ஜ.க. ஒரு சிறப்பான கொள்கையுடன் உருவாக்கப்பட்ட கட்சி. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோரை இணைத்துக் கொண்டே பிறகு, பா.ஜ.க. எப்படி இந்துத்துவா குறித்து இனி பேச முடியும். இந்துத்துவா குறித்து பேச மோடிக்கு இனிதைரியம் உண்டா. நிச்சயம் பேச முடியாது. நாளைக்கு காங்கிரஸ் அழைத்தால், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் அந்த அணிக்கு சென்று விடுவார்கள். சந்திரபாபு நாயுடு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தார். தற்போது அணி மாறியுள்ளார்.
மரியாதை இல்லாமல் தார்மீக பொறுப்பு இல்லாமல் அரசியலில் பயணம் செய்யக் கூடாது. நாட்டில் இந்துத்துவா கொள்கையைதான் கடைபிடிக்க வேண்டும் என பா.ஜ.க. மிக தெளிவாக சொல்லி இருக்கிறது. இந்து மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை மற்ற மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். ஆனால் மோடி இந்த கொள்கையில் இருந்து மாறி, பதவி ஆசையில் வேறு திசை நோக்கிச் சென்றுக் கொண்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது. இது பா.ஜ.க.விற்கு நெருக்கடி தரும் செயல்.
மோடியால் பா.ஜ.க. வளரவில்லை:
மோடி இனி பா.ஜ.க. பெயரையே பயன்படுத்த மாட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரை மட்டுமே பயன்படுத்துவார். என்.டி.ராமராவ், சோனியா காந்தி ஆகியோருக்கு சந்திரபாபு நாயுடு துரோகம் செய்தவர். இதேபோன்று நிதிஷ்குமார் கூட, அரசியல் நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளக் கூடியவர். ஆனால், பா.ஜ.க.விற்கு என ஒரு கொள்கை உண்டு. நிலைப்பாடு உண்டு. இந்துத்துவா என்ற நிலைப்பாட்டை நாம் எப்படி மாற்றிக் கொள்ள முடியும். இந்துத்துவா கொள்கையில் ஒரு மறுமலர்ச்சியை கொண்டு வர வேண்டும். ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்து மதம் குறித்து தவறான கருத்துகளை களைய வேண்டும். உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அதை செய்ததால் தான் பா.ஜ.க. மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது.
மோடிக்கும் ராமர் கோவிலுக்கும் சம்பந்தமில்லை:
மோடியால் பா.ஜ.க. வளரவில்லை.ராமர் கோவிலுக்கும் மோடிக்கும் சம்பந்தமே இல்லை. ராமர் கோவிலுக்காக மோடி எதுவுமே செய்யவில்லை. ஆனால், கடைசி நேரத்தில் ராமர் கோவில் தன்னால் தான் உருவாக்கப்பட்டது போன்ற இமேஜை ஏற்படுத்திவிட்டார். அதனால் தான், ராமர் கோவில் மூலம் மிகப்பெரிய வெற்றி பெறலாம் என நினைத்த மோடி, அதனை பெற முடியவில்லை. அயோத்தியில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. காசி விஸ்வநாத் கோவிலுக்கு மோடி என்ன செய்துவிட்டார். ஒன்றுமே செய்யவில்லை.
தற்போதைய மோடி அரசு ஓராண்டு கூட நிலைக்காது. விரைவில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வந்துவிடும். சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் பா.ஜ.க. மீது பழியை போட்டு ஆட்சியை கலைத்துவிடுவார்கள். இப்படி அந்த நேர்காணலில் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
- சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment