"அயோத்தியில் பா.ஜ.க. படுதோல்வி " - உண்மையான காரணம் குறித்து ஒரு அலசல் -
பா.ஜ.க. ஆட்சியின் முக்கிய மற்றும் மிகப்பெரிய சாதனையாக, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்டி பிரமாண்ட திறப்பு விழா நடத்தி, அதை தொடங்கி வைத்தது என்று சொல்லப்படுகிறது. பா.ஜ.க.வின் கடந்த பத்து ஆண்டு கால சாதனைகளில், மற்ற சாதனைகளை விட ராமர் கோவில் கட்டப்பட்டது தான் முக்கிய சாதனை என்றும், எனவே, நாட்டில் வாழும் பெரும்பாலான இந்து மக்கள், பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய அளவுக்கு ஆதரவு அளித்து, 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற வைப்பார்கள் என்றும் பா.ஜ.க.வினர் நம்பிக்கை கொண்டு இருந்தார்கள். அதன் காரணமாக தான், 'இந்த முறை 400 நிச்சயம்' என்ற முழக்கம் பா.ஜ.க. சார்பில் முன் வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.
குறிப்பாக, ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள அயோத்தி தொகுதி உட்பட, உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் அக்கட்சி நம்பிக்கையுடன் இருந்தது. இதனால், ராமர் கோவில் கட்டியதாக கூறும் ஆளும் பா.ஜ.க. தோற்க முடியுமா என்ற மக்களில் பலரின் மனதில் எழுந்தது.
ராமர் கோவில் கட்டப்பட்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட சாலை நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அகலமான, சுத்தமான நடைபாதைகள் புதிதாக நிறுவப்பட்ட விளக்குகளால் ஒளிர்கின்றன. சுவர்களில் ராமாயணக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 22 அன்று, அயோத்தி ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது, இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. ஜெய் ஸ்ரீராம் என்று எழுதப்பட்ட காவி கொடிகள் நாடு முழுவதும் ஏற்றப்பட்டன. இப்படி, அயோத்தி நகரம் ஜொலிக்கப்பட்டாலும், அங்கு பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. அத்துடன் பா.ஜ.க.,உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்த மண்டலத்தில் ஐந்து மக்களவைத் தொகுதிகளையும் இழந்துள்ளது.
தோல்விக்கு காரணம் என்ன?
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, மக்கள் இடம்பெயர வேண்டியிருந்தது. கடைகள் இடிக்கப்பட்டன. ஆனால் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. மேலும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படவில்லை. தங்களால் எதையும் செய்ய முடியும். மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்ற கர்வத்தில் பா.ஜ.க தலைவர்கள் இருந்தனர். ஆனால், இந்த தொகுதியில், சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத், கடந்த 2014-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த ,பா.ஜ.கவின் லல்லு சிங்கை சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
ஃபைசாபாத் (அயோத்தி) தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் லல்லு சிங், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே தன்னை வெற்றியாளராகக் கருதி கொண்டார். மிகப்பெரிய நம்பிக்கையில் வாக்கு கேட்டுக்கூட அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பா.ஜ.க கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்ற கருத்து, பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக மாற்றியது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தனர். இதேபோன்று, அயோத்தி மக்களில் பெரும்பாலானோர் தங்கள் பிரச்னைகள் புறக்கணிக்கப்படுவதாக கோபம் அடைந்தனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு, வணிகம் அதிகரித்து வேலைவாய்ப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தும் பா.ஜ.க. இந்த தொகுதியில் தோல்வி அடைந்துவிட்டது. உள்ளுர் மக்களின் புறக்கணிக்கப்பட்டது தான், பா.ஜ.க.வின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமர் கோவில் காரணமாக அயோத்தி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அரசு யாருடைய பேச்சையும் கேட்காமல், தன்னிச்சையாகச் செயல்பட்டு, மக்களின் கடைகள் அகற்றியது. ஆனால் அவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை. இது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
மக்களின் கோபம்:
பாதுகாப்புக்காக அயோத்தியில் பல்வேறு இடங்களில் போலீஸ் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. நகருக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல பாஸ் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தடுப்புகளால் அயோத்தி மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். மாலை 7 மணிக்கு வி.ஐ.பி.க்கள் வருவதாக இருந்தால், மதியம் 12 மணிக்கு போலீசார் தடுப்புகளை வைக்கின்றனர். குழந்தைகளை பள்ளியிலிருந்து கூட அழைத்து வர முடியாது. இந்த பிரச்சினையை உள்ளூர் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பியிடம் கூறியபோதும், அவர்கள் புறக்கணித்துவிட்டனர். மக்களிடம் செல்லாமலேயே பிரதமர் மோதியின் முகத்தை வைத்தே ஜெயித்துவிடலாம் என நினைத்தனர். அயோத்தி மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை கேட்க யாரும் இல்லை.
கோவில் விரிவாக்கத்தின் போது, ஏராளமானோர் சொத்தின் உரிமைக்கான ஆவணங்களைக் காட்ட முடியவில்லை, இதனால், அவர்களில் பெரும்பாலானோர் சந்தை விலையில் இழப்பீடு பெற முடியவில்லை. இதனால் பலர் வீதியில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விரிவாக்கத்திற்காக நூற்றுக்கணக்கான மக்களின் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டன. ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியின் கீழ் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் நான்கில் பா.ஜ.க தோல்வியடைந்துள்ளது. இந்த தேர்தலில் உள்ளூர் பிரச்னைகள் பங்கு வகித்தன. அயோத்தி மக்கள் வி.ஐ.பி. கலாசாரத்தால் சிரமப்படுகின்றனர். இந்துத்துவா என்ற பெயரில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்தவர்கள், மக்களின் குரலை கேட்கவில்லை. மக்களுக்கு மதிப்பு அளிக்கவில்லை. ராமர் கோவில் என்ற பெயரில் மட்டுமே வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்த பா.ஜ.க. தலைவர்கள், உள்ளூர் மக்களின் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்தனர்.
முஸ்லிம் வாக்குகள்:
அயோத்தியில் நிறைய வளர்ச்சிப் பணிகள் நடந்தாலும், அயோத்திக்கு வெளியே உள்ள கிராம மக்களின் பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டன. இது மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியது. பா.ஜ.க.வின் தோல்விக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். தலித் வேட்பாளர் அவதேஷ் பிரசாத்தின் பின்னால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் வாக்குகள் ஒன்றிணைந்ததே ஃபைசாபாத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றதற்கு மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது. மேலும், முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதுவும் ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றிக்கு ஒரு பெரிய காரணமாகும்.
அயோத்தியில் பிரதமர் மோடி போட்டியிட்டு இருந்தாலும் கூட அவர் நிச்சயம் தோல்வி அடைந்து இருப்பார் என தற்போது எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள அவதேஷ் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். அயோத்தியில் தாம் வெற்றி பெறவில்லை என்றும், மக்கள் தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் அயோத்தி மக்கள் எந்தளவுக்கு பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிய வருகிறது. அரசமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று பேசுபவர்களுக்கு, பாடம் கற்பித்துள்ளதாக கூறும் அயோத்தி தொகுதி மக்கள், இனி யாரும் அரசமைப்பு சட்டத்துடன் விளையாடத் துணிய மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். மக்களின் குரலைக்கு மதிப்பு அளிக்காவிட்டால், அல்லது மக்களை புறக்கணித்தால், வெற்றி பெற முடியாது என்பதற்கு அயோத்தியில் பா.ஜ.க. அடைந்த தோல்வியை கூறலாம். ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை மறந்துவிட்டு செயல்பட்டால், ஒருபோதும் வெற்றியை சுவைக்க முடியாது.. இதற்கு அயோத்தி தொகுதி ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment