முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்தவர்கள், முஸ்லிம் ஆதரவு கட்சிகளால் ஆட்சியை கைப்பற்றிய கதை....!
இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு நடந்துமுடிந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. எனினும், கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியை நடத்திவரும் பா.ஜ.க., தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிற சிறிய கட்சிகளின் உதவியுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ.க., கடந்த பத்து ஆண்டுகளில் செய்த அட்டகாசங்களை போன்று, இந்த முறை செய்ய முடியாது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளாக ஓங்கியிருந்த மோடியின் கைக்கு, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம் தற்போது கடிவாளம் போடப்பட்டுள்ளது. 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் பா.ஜ.க.விற்கு 240 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இது, ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட 33 இடங்கள் குறைவாகும். எனவே, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிற கட்சி எம்.பி.க்களின் ஆதரவு பெற்று, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. 18வது மக்களவைத் தேர்தல் என்பது மிகவும் வித்தியாசமான தேர்தலாகும். இந்த தேர்தலில், மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள், செய்த பிரச்சாரம் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தின.
முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம்:
தங்களது பத்து ஆண்டு கால ஆட்சியின் வளர்ச்சிப் பணிகளை முன்வைத்தோ, அல்லது கடந்த பத்து ஆண்டுகளில் செய்த சாதனைகளையோ முன்வைத்தோ, பா.ஜ.க. தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை. மாறாக, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மட்டுமே செய்தார்கள். பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கு எதிராகவே வெறுப்பு பிரச்சாரம் செய்தார். இதேபோன்று, அமித்ஷாவும் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்திய முஸ்லிம்கள் ஊடுருவல்காரர்கள் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்துக்களின் சொத்துகள், முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்றும், மற்றும் பல்வேறு வகைகளில் நாள்தோறும் வெறுப்பு பிரச்சாரத்தை மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் செய்தனர். முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்ததை, இந்திய ஊடகங்களில் சிலவும், உலகில் உள்ள முக்கிய ஊடகங்களும் தலைப்பு செய்திகளாக வெளியிட்டன.
முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டாலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் கடந்த முறை போன்று, இந்த முறை பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியவில்லை. ராமர் கோவில் உள்ள அயோத்தி தொகுதியில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது. மேலும், ஏராளமான தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே, பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால், வெற்றியை குவித்துவிடலாம் என கற்பனை செய்த பா.ஜ.க. தலைவர்கள், தற்போது ஆட்சி அமைக்க தேவையான பலத்தை பெறவில்லை. இதன்மூலம் ஒரு உண்மை தெளிவாக தெரிய வருகிறது.
இந்திய மக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை பேச்சு மற்றும் வெறுப்பு செயல்களை ஏற்கவில்லை என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. நாட்டில் உள்ள அனைத்து மக்களும், ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழவே விரும்புகிறார்கள் என்பது தேர்தல் முடிவுகள் சொல்லும் தீர்ப்பாக உள்ளது.
முஸ்லிம் ஆதரவு கட்சிகளால் கைப்பற்றிய ஆட்சி:
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தேர்தல் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமே, பிரச்சாரம் செய்த பா.ஜ.க., தற்போது முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலையில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்திய முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்றும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றும், சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்கள்.
ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றும், பா.ஜ.க. தலைவர்கள் திட்டவட்டமாக கூறினார்கள். ஆனால் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு தொடரும் என அறிவித்தார். இதேபோன்று, பல்வேறு நிலைப்பாடுகளில், முஸ்லிம் சமுதாயத்திற்கு ஆதரவான நிலையில் தெலுங்கு தேசம் கட்சி இருந்து வருகிறது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், ஓரளவுக்கு முஸ்லிம்கள் மீது அன்புடன் இருக்கும் கட்சியாகவே இருந்து வருகிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்., அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற திட்டங்களை ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரிக்கிறது. இந்த விவகாரங்களில் பா.ஜ.க. முற்றிலும் நேர்மாறாக இருந்து வருகிறது.
அப்படி இருந்தும், முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தற்போது ஆட்சி அமைத்து இருப்பதை தான் கர்மா அதாவது வினைப்பயன் என அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்ததை போன்று, இந்த முறை பா.ஜ.க. தலைவர்களாக வெறுப்பு முழக்கங்களைச் செய்ய முடியாது. முஸ்லிம்களுக்கு எதிராக உடனடியாக திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்ற முடியாது. மிகவும் மென்மையாக போக்கில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் பா.ஜ.க. தலைவர்களுக்கு ஏற்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
அரசிலயமைப்பு சட்டத்தை மாற்றி விடுவோம் என்பன போன்ற முழக்கங்களை இனி பா.ஜ.க. தலைவர்கள் எழுப்ப முடியாது. ஒன்றிய அரசின் தன்னாட்சி அமைப்புகளாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை மிகப்பெரிய அளவில் தவறாக பயன்படுத்த முடியாது. எதிர்க்கட்சித் தலைவர்களை விருப்பம் போன்று சிறையில் அடைக்க முடியாது. முள் மீது நடப்பது போன்ற நிலையில் தான் தற்போது பா.ஜ.க.விற்கு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் கடிவாளம் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிற சிறிய கட்சிகளின் கைகளில் உள்ளது. தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.விற்கு கடிவாளம் போட்டு விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசியலில் எப்போது வேண்டுமானாலும் காட்சிகள் மாறும் என அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள்.
ஏக இறைவன் போதுமானவன்:
நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களில் 58 சதவீதத்திற்கு அதிகமான மக்கள் பா.ஜ.க.வை நிராகரித்து இருக்கிறார்கள். மோடிக்கு எதிராக வாக்குகளை அளித்து இருக்கிறார்கள். இதன்மூலம் மோடியை அவர்கள் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரியவருகிறது. இந்திய முஸ்லிம்களும், நாட்டில் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற ஆர்வத்தில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்கள். ஆனால், மீண்டும் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்துள்ளது. இது ஒருவகையில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையின சமுதாய மக்களுக்கு வருத்தம் அளிப்பது உண்மையே ஆகும். ஆனால், 'ஏக இறைவன் யாருக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்க விரும்புகிறானோ, அவருக்கு தான் ஆட்சி அதிகாரத்தை கொடுப்பான்' என்பது இஸ்லாமியர்களின் முழுமையாக நம்பிக்கை, எனவே, 'ஏக இறைவன் எங்களுக்கு போதுமானவன். அவனே எங்களுக்கு முழுமையாக பாதுகாவலன்' என்ற துஆவை இஸ்லாமியர்கள் நாள்தோறும் கேட்டு வருகிறார்கள்.
சூழ்ச்சி செய்பவர்களில் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன் ஏக இறைவன் என்பதை, உலகில் நடந்துவரும் பல சம்பவங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இனி, இந்திய முஸ்லிம்களக்கு ஏக இறைவனே போதுமானவன். அவனே முழுமையாக பாதுகாவலன். எனவே, முஸ்லிம்கள் அனைவரும் எந்தவித கவலையும், அதிர்ச்சியும் அடையாமல், ஏக இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து, இந்தியாவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும், ஒற்றுமைக்கும் கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளை, இனியும் வழக்கம்போல ஆற்ற வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment