Tuesday, June 11, 2024

நீட் தேர்வு முறைக்கேடு வழக்கு...!

நீட் தேர்வு முறைக்கேட்டை எதிர்த்து முஸ்லிம் மாணவர் பேரவை தொடர்ந்த வழக்கு.....!

தேசிய தேர்வு முகாமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.....!!

டெல்லி, ஜுன்.12- நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பு அணியான முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பதில் அளிக்க தேசிய தேர்வு முகாமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஜுலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

எம்.எஸ்.எஃப்.வழக்கு:

எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகாமை சார்பில் நடத்தப்படும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, மருத்துவப் படிப்பில் சேர முடியும். இதன் காரணமாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதுடன், அதனை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏராளமான முறைக்கேடுகள் நடைபெற்றதாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும், பல மாணவர்கள் 720 மதிப்பெண்கள் பெற்றதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. 

இதையடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பு அணியான, முஸ்லிம் மாணவர் பேரவை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில், நீட் தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் கேரளவைச் சேர்ந்த 6 மாணவர்கள் தரப்பில் இருந்து வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் மூலம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக கருத்து கூறியுள்ள எம்.எஸ்.எஃப். தேசிய தலைவர் பி.வி.அகமது சாசூ, மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் சட்ட ரீதியாக முஸ்லிம் மாணவர் பேரவை போராடும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். 

உச்சநீதிமன்றம் விசாரணை:

இந்நிலையில், நீட் தேர்வு முறைக்கேட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசனுதின் அமனுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் 11.06.24 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், புதிய தேர்வை நடத்த வேண்டும் என்றும், மேலும் மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. 

நீதிபதிகள் உத்தரவு:

இதையடுத்து, வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், முறைக்கேடு குற்றச்சாட்டுகளால் நீட் தேர்வின் புனிதத்தன்மை கெடுகிறது என வேதனை தெரிவித்தனர். எனினும், நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதி இருப்பதால் மாணவர்களின் எதிர்காலம் கருதி, அதை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும், நடைபெற இருக்கும் கலந்தாய்வுக்கும் தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகாமை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜுலை மாதம் எட்டாம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: